‘காம்ரேட்’ அம்மா

ஜூன் 9, 2021

கல்பனா கருணாகரன்

நுழையும் முன்…

என் அம்மா மைதிலி சிவராமனைப் பற்றிய என் நினைவுகளை எழுதுவது ஒரு எளிதான விசயமாக எனக்கு இருந்ததில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால், ஆங்கிலத்தில் அவரைப் பற்றி எழுதி, அந்தக் கட்டுரையை ஒரு சில நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். இதைச் செய்ய என்னை ஊக்குவித்தது என் நண்பர்கள் பிரேமா ரேவதியும், வ. கீதாவும். சமீபத்தில் என்நண்பர் பேரா. கே. பாரதியின் தூண்டுதலால் அம்மாவைப் பற்றிய சுருக்கமான எனது கட்டுரை ஒன்று தினமணி நாளிதழின் மகளிர் மணியில் வெளிவந்தது. அதை தீக்கதிர் பத்திரிகையும் வெளியிட்டது. அதைப் படித்த நண்பர்கள் பலர் என்னை ஊக்குவித்ததாலும், தோழர்கள் ஜி.செல்வாவும், நாகராஜும் ‘ஒரு சிறிய புத்தகமாக போடலாமே’ என்று என்னிடம் சொன்னதாலும், இது இப்போது உருவெடுத்திருக்கிறது. அவர்கள் இருவரின் ஆர்வத்திற்கும், தூண்டுதலுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

என் அம்மா ஒரு அசாதாரண மனுசி. அவரது வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட பயணங்களும், அதன் அனுபவங்களும் ஏராளம். இந்த புத்தகம் மைதிலி சிவராமனைப் பற்றிய ஒரு முழுமையான வாழ்க்கை வரலாறு கிடையாது. அத்தகைய ஒரு வரலாறு எழுதப்படவேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் அதை நான் இந்த புத்தகத்தில் செய்ய முயலவில்லை. தனது முன்னுரையில் பேராசிரியர் வசந்தி தேவி எழுதியது போல, நான் அம்மாவைப் பார்த்து, புரிந்து, உணர்ந்த விதத்தை தான் இந்த புத்தகம் பிரதிபலிக்கிறது. எனவே, அம்மாவை மிகவும் நேசிக்கும் நண்பர்களும், கட்சி தோழர்களும் ‘இதையெல்லாம் விட்டுவிட்டாயே’ என்று என் மீது கோபப்படக் கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக, பாரதி புத்தகாலயம் இந்த புத்தகத்தை வெளியிடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. முற்போக்கு இடதுசாரி இயக்கங்களில் புதிதாக வந்திருக்கும் பல இளைஞர்களுக்கு அம்மாவை அறிமுகப்படுத்துவதோடு, அவரது பன்முகத்தன்மையைப் பற்றிய ஒரு புரிதலை உருவாக்க வேண்டும் என்று தோழர் செல்வா என்னிடம் சொன்னார். அதை இந்த புத்தகம் செய்கிறது என்று நம்புகிறேன். அம்மாவை நன்கு தெரிந்த தோழர்கள், தெரியாத இளைய சமூக செயல்பாட்டாளர்கள் என்று பல வாசகர்களிடம் இந்த புத்தகத்தை பாரதி புத்தகாலயம் கொண்டு சேர்க்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. வாய்ப்பும், நேரமும் இருந்தால், புத்தகத்தை பற்றிய உங்கள் கருத்துக்களையும், அம்மாவைப் பற்றிய உங்கள் நினைவுகளையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

கல்பனா கருணாகரன்
சென்னை
14.02.2018

மகளின் நினைவோவியத்திற்கு தோழியின் அணிந்துரை

கனக்கும் மனதுடன் எழுதுகிறேன். அறுபது ஆண்டு தோழமையின் ஆழ்ந்த கனம். இப்போதெல்லாம் மைதிலியை ஒவ்வொரு முறை பார்த்துவிட்டு வரும்போதும் அழுத்தும் அதே கனம். அதைக் கழற்றி வைத்து விட்டு எழுதப் பார்க்கிறேன்.

மைதிலி அவள் கால லட்சியங்களின் சிகரம். அவளை, மகத்தான அந்த ஆளுமையான தன் தாயை, கல்பனா எப்படிப் பார்த்தாள், உணர்ந்தாள், புரிந்தாள், ஆராதித்தாள் என்பதை மனதைத் தொடும் எளிய மொழியில் எழுதி இருக்கிறாள்.

மைதிலியின் வாழ்க்கைப் பரிணாமம், சுதந்திர இந்தியாவின் முதல் பத்தாண்டுகளில் சென்னையில் தொடங்கி, அமெரிக்காவிற்கு இடம் மாறி, அன்று உலகின் பல பகுதிகளிலும் அறுபதுகளில் நடந்து கொண்டிருந்த பல் வகை விடுதலை இயக்கங்களின் தாக்கத்தில் மலர்கிறது. சென்ற நூற்றாண்டின் அறுபதுகள் ஒரு மகத்தான வரலாற்றுப் பாய்ச்சல் காலம். மானுட விடுதலைக்கான போராட்டங்கள் – அமெரிக்காவில் கறுப்பு இன மக்களின் இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம், ஆப்பிரிக்காவில் காலனிய ஆதிக்க எதிர்ப்பு, பிரான்சில் மாணவர் எழுச்சி, வியட்னாமின் வீர விடுதலைப் போர் என்று ஆதிக்கங்களை ஆட்டம் காணவைத்த காலம். அவை அனைத்தும் தேசியம்-மார்க்சியம் என்ற இரு சித்தாந்தங்களின் கலவையாக உலகை முன்நோக்கி உந்தித் தள்ளிய காலம்..

அன்று அமெரிக்காவில் வசித்த மைதிலி அந்த சூறாவளி சுழற்சியில் புடம் போடப்பட்டாள். அவளது அரசியலாதல் மார்க்சிய சித்தாந்த ஏற்பாக ஆயிற்று. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த க்யூபாவிற்கு அவளைப் பயணிக்க வைத்தது. அதன் பின் இந்தியா திரும்பிய மைதிலி தன் தேடலைத் தொடங்குகிறாள். தனக்கான களம் எது, தளம் எது என்ற தேடல் மார்க்சிய கம்யூனிசக் கட்சியில் அவளைக் கொண்டு சேர்க்கிறது. அதன் பின் திரும்பிப் பார்க்கவேயில்லை. கட்சியில் ஒன்றற சங்கமித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கப் போராட்டமே வாழ்வின் ஒற்றைக் குறிக்கோளாக வரித்துக் கொள்கிறாள். கட்சி அவளுக்கு ஒதுக்கிய தொழிற்சங்கம், பின் மாதர் சங்கம் அவளது இயக்கக் களங்களாகின. மைதிலியின் வாழ்நாள் பணியும், சாதனையும், அவள் கட்டிய பல இயக்கங்களும், பலரின் மேல் அவள் பதித்த திருப்புமுனையான தாக்கமும், அனைத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் பதாகையின் கீழ் நடந்தவையே.

தனது அம்மா பங்கஜத்துடன் மைதிலி

இந்தப் பெண் சராசரிப் பெண்ணாக, சராசரி மனைவியாக, சராசரித் தாயாக எவ்வாறு இருக்க முடியும்? அவளைத் தாயாகக் கொண்ட கல்பனா எப்படி வளர்ந்தாள்? டைப்ரைட்டர் சத்தம் தாலாட்ட, ‘பொல்லாத பண்ணையாரு’ கதையை இராவண வதத்திற்கு மாற்றாகக் கேட்டு, அரசியலை சுவாசித்து வளர்ந்தாள். காம்ரேட் மைதிலி என்ற தாய் தலை பின்னுவதிலும், பூச்சூட்டுவதிலும் தவறி இருக்கலாம். ஆனால், சுதந்திர உணர்வும், உரக்கப் பேசும் துணிவும் கொண்டவளாக மகளை வளர்க்கத் தவறவில்லை. பள்ளிப் பருவ கல்பனாவிலிருந்து, இன்று ஆற்றல் மிக்கவளாக, சிறந்த தமிழ், ஆங்கிலப் பேச்சாளராக, சமூக செயல்பாட்டாளராக, பயிற்சியாளராக, ஆசிரியராகத் திகழும் கல்பனா வரை அதைக் காணலாம்.

மைதிலிக்குக் கிடைத்த பெரும் வரப் பிரசாதம் அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணை கருணாகரன். அரசியலால் ஒன்றிணைந்த இருவரும் அரசியலையே முன் வைத்து, வாழ்க்கை நடத்தினர். அதை கல்பனா விவரிக்கிறாள், “என் பெற்றோரைப் பார்த்து நான் கற்றுக் கொண்ட முக்கிய பாடம் ஒரு பெண் பொது வாழ்வில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக இருக்க முடியும் என்றும், அவளை வியந்து பாராட்டியே ஒரு ஆண் எந்த ஈகோவும் இல்லாமல் வாழ் நாள் முழுவதும் அவளுக்கு உறுதுணையாக நின்று அவளைப் போற்றி வாழ முடியும் என்பதாகும். அப்பாவின் உதவியென்பது இக்கட்டான சூழல்களிலும் அம்மாவுக்கு முழுமையாக கிடைத்தது.” ‘தாயின் கவனம் இல்லாமல் வாடும் குழந்தை’என்று தன்னைப் பார்த்து பலர் பச்சாதாபப் பட்டதுண்டு என்று சொல்லும் கல்பனா, தன் தந்தை தாயுமானவராக விளங்கினார் என்பதையும் சொல்கிறாள்.

பிற்காலத்தில் மைதிலி உடல் நலக் குறைவினாலும், பல அசாதாரணமான நோய்களாலும், பின் மன நலமும் பாதிக்கப்பட்டதும் கல்பனாவையும், கருணாகரனையும் பெரும் வேதனைக்கு ஆளாக்கின. மைதிலி பொது வாழ்விலும், கட்சி அரசியலிலும் எவ்வாறு பாதிக்கப்பட்டாள் என்பது எவருக்கும் தெரியாது. எவருடனும், அன்யோன்யமாக வாழ்ந்த கணவனிடமும் கூட, அவள் பகிர்ந்து கொண்டதில்லை. கட்சிக் கட்டுப்பாடு என்ற இரும்பு வேலி அவளை மற்றவரிடமிருந்து பிரித்தே வைத்திருந்தது. “கட்சி ஒழுக்கம் என்பதை கடைப்பிடிப்பதில் அம்மா உறுதியாக இருந்தார்” என்று எழுதுகிறாள் கல்பனா. எதையும் வெளியில் சொல்லாமல், தன் மனதிற்குள்ளாகவே புதைத்து மருகியதும் அவளது உடலும், மனமும் பாதிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இருந்திருக்குமோ என்ற ஐயம் சிலருக்கு இருக்கிறது.

எனக்கும் சில அனுபவங்கள். மைதிலியின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம், அவள் தொழிற்சங்கத் தலைமையிலிருந்து, மாதர் சங்கம் கட்டும் பணிக்கு மாற்றப்பட்டது, என்பது என் கருத்து. இந்தப் பெரும் மாற்றம் அவளுக்கு சம்மதம்தானா என்பதைத் தெரிந்து கொள்ள நான் பல முறை முயன்றிருக்கிறேன். நான் துருவித் துருவி கேட்ட கேள்விகளுக்கு அவள் அளித்த பதில் கட்சியின் முடிவே தன் முடிவு என்பதுதான். அதை அப்படிக்கூடச் சொல்லாமல், நியாயப்படுத்தினாள். ‘ஏன் அப்படிக் கேட்கிறாய்? நீ பெண் உரிமையாளர்தானே! பெண்களைத் திரட்டுவது முக்கியமானது இல்லையா?’ .
என்னால் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எழுபதுகளின் தொடக்கத்தில் மைதிலி சென்னையின் சில முக்கியமான தொழிற்சங்கங்களில் தலைவராக, உப தலைவராக பொறுப்பேற்றிருந்தாள். தீவிர போர்க்குணம் கொண்ட தொழிற்சங்கங்களாகத் திகழ்ந்தவை அவை. பெண்கள் தொழிற்சங்கத் தலைமை ஏற்பது அரிது. மைதிலி முன்னின்று நடத்திய gate meetings, வேலை நிறுத்தங்கள் பெரும் கவனத்தை ஈர்த்தன. மத்தியதர வர்க்கத்து, பட்டம் பெற்ற பெண் ஆலைத் தொழிலாளிகளுடன் இணைந்து, அதிலும் தலைமையும் ஏற்பது அரிதினும் அரிது. மார்க்சியத்தின் மையப் போராட்டம் பாட்டாளி வர்க்கப் போராட்டம்தான். ஆகவே, மைதிலி அதில்தான் தொடர்ந்திருக்க வேண்டுமென்பது என் கருத்து.

மைதிலி நினைவாற்றல் இழந்த நிலையில், அதன் காரணங்களை அறிய வேண்டுமென்று, என்னைப் போன்ற நீண்ட காலத் தோழ ர்களுடன் தன் தாய் பகிர்ந்துகொண்டவற்றைக் குறித்து கல்பனா பல முறை கேட்டிருக்கிறாள். இன்று கல்பனா தாய்க்குத் தாயானவள், சிறு குழந்தையைப் போல் அம்மாவைக் கொஞ்சுவதிலிருந்து.

கல்பனாவைப் பிறந்ததிலிருந்து பார்த்திருக்கும் எனக்கு அவள் இன்று தோளுக்கு மேல் வளர்ந்த தோழி. பல ஆண்டுகளாக, என்னையும் அறியாமலே, கல்பனாவில் மைதிலியைத் தேடுகிறேன். மைதிலி, கல்பனா இருவரும் ‘இடது‘ என்பதன் இரு வார்ப்புகள், அவர்கள் தலைமுறையின் வார்ப்புகள். ‘இடது’ என்பதன் பொருள் மைதிலியின் தலைமுறையிலிருந்து பெரிதும் மாறிவிட்டது; பரந்துவிட்டது. இடதுசாரிக் கட்சிகளுக்கு அப்பால், ஒரு பெரும் வெளியில் பாய்ச்சல் கொண்டிருக்கிறது. அதன் வார்ப்பு கல்பனா.

இந்தப் புத்தகம் கல்பனா தன் தாய்க்கு செலுத்தும் காணிக்கை மட்டுமல்ல. ஒரு தலைமுறைக்கு செலுத்தும் காணிக்கை.

வசந்தி தேவி
(மைதிலியின் அறுபத்தி ஓராண்டு தோழி)

எங்கள் குடும்பம் மற்றவரின் குடும்பத்தைப் போல் எப்போதும் இருந்ததில்லை. இதற்குக் காரணம் என் அம்மா காம்ரேட் மைதிலி சிவராமன் தான். என் அம்மாவைப் பற்றிய எனது குழந்தைப் பருவ ஞாபகமே அவரது டைப்ரைட்டரும் என்னைத் தாலாட்டும் அதன் இசையும் தான். என்னைப் பொறுத்தவரை அம்மாவின் இயல்பு என்பது கட்டுரைகள் எழுதுவதும், டைப் செய்வதும், செய்தித் தாளிலிருந்து தினமும் குறிப்பெடுப்பதும், பொதுக் கூட்டஙளில் பேசுவதும், வீட்டிற்கு வந்த நண்பர்களுடன் ஆவேசமாக அரசியல் விவாதிப்பதும் தான். சமையல் கரண்டியுடன் அம்மாவை நான் பார்த்ததே இல்லை.

அம்மா படித்து வளர்ந்ததெல்லாம் சென்னை. அம்மாவின் அப்பா சிவராமன் சென்னை மாநகராட்சியில் என்ஜினியராக பணி புரிந்தார். என் பாட்டிக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வமிருந்த போதிலும் ஒன்பதாம் வகுப்பு வரை தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அம்மாவுடன் பிறந்தவர்கள் ஒரு அக்காவும், மூன்று அண்ணன்களும். அம்மா கடைக் குட்டி. சிறு வயதில் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போய்விடும் என்பதால் தனது ஒன்பதாம் வயதில் தான் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் நேரடியாக சேர்க்கப்பட்டார். அதுவரை வீட்டில் என் பாட்டி தான் அம்மாவின் ஆசிரியர். அம்மா படித்த பள்ளி எக்மோரிலுள்ள பிரசிடென்சி (Presidency) பெண்கள் மேல் நிலைப் பள்ளி. பள்ளி படிப்பு முடிந்தவுடன் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இரண்டு வருடம் இண்டர்மீடியெட் படித்த பிறகு, மெரீனா கடற்கரை அருகேயுள்ள பிரசிடென்சி கல்லூரியில் தனது BA (ஆனர்ஸ்) பொலிடிகல் சைன்ஸ் படித்தார்.

அந்த காலத்தில் கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் பெண்களுக்கு பொதுவாக கல்லூரி படிப்பு முடிந்தவுடனே திருமணம் நடந்துவிடும். ஆனால் அம்மாவுக்கு இது நேரவில்லை. இதற்கு சில காரணங்கள் உண்டு. அம்மாவின் அக்கா லலிதா அவரை விட எட்டு வயது பெரியவர். அவருக்கு கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் நடந்துவிட்டது. முதல் குழந்தை பிறந்த பிறகு தான் BA (ஆனர்ஸ்) பட்டம் பெற்றார். பலரும் போற்றிய, சிறந்த பரத நாட்டியக் கலைஞராக இருந்த லலிதா நாட்டிய நிகழ்ச்சிகளெல்லாம் கொடுத்திருக்கிறார். ஆனால் திருமணம் அவரது நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இதையொட்டி என் அம்மாவின் குடும்பத்தினருக்கு ‘தனது திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் வீட்டில் முடங்கி விட்டாளே’ என்று கொஞ்சம் வருத்தமும், குற்ற உணர்வும் இருந்தது. எனவே அம்மாவின் அண்ணன்கள் என் பாட்டியிடம் சொன்னது, ‘லலிதாவுக்கு நடந்தது மைதிலிக்கு நடக்கக்கூடாது. அவளாவது மேல படிக்கட்டும். உடனடி கல்யாணம் வேண்டாம்.’ என்று வலியுறுத்தினார்களாம். 1959-இல் பட்டப் படிப்பு முடித்த போது, அம்மா சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் மதிப்பெண் பெற்று பல்கலைக்கழகத்தின் காண்டெத் மெடலை (Candeth medal) வென்றார். இதற்குப் பிறகு கட்டாயமாக மேல் படிப்பு வாய்ப்பு மைதிலிக்குக் கிடைக்க வேண்டும் என்று அவர் குடும்பத்தில் அனைவரும் ஒருமனதோடு விரும்பினர்.

டெல்லியிலுள்ள மதிப்புமிக்க இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பப்ளிக் அட்மினிஸ்டிரேசன் (Indian Institute of Public Administration) என்னும் நிறுவனத்தில் பொது நிர்வாகத்தில் (Public Administration) முதுகலை டிப்லோமா படித்தார். இந்த நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், அரசு துறையில் இல்லாத மற்ற மாணவர்களும் டிப்லோமா படிப்பதுண்டு. அரசு துறையிலில்லாத மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்றதால் 1961-இல் ‘அசோக் சந்தா’ பரிசு பெற்றார் அம்மா. பிறகு படிப்புதவி தொகை (scholarship) பெற்று, 1963-இல் 23 வயதில் அமெரிக்காவிற்கு மேற் படிப்புக்குச் சென்றார். நியூ யார்க் மாநிலத்திலுள்ள சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் MA பட்டம் பெற்றவுடன், அந்த மாநில அரசின் நிதிப் பிரிவில் பணியாற்றினார். இதற்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதரகத்தில் சில ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக பணி புரிந்தார்.

அம்மா இந்தியாவிற்கு 1968-இல் திரும்பினார். ‘நீ ஏன் அமெரிக்காவிலேயே நிரந்தரமாக வாழ விரும்பவில்லை?’ என்று என் பெரியம்மா அம்மாவிடம் ஒரு முறை கேட்ட போது, ‘ஐக்கிய நாடுகள் சபையில் நான் இருந்தபோது, அமெரிக்கா பல சின்ன நாடுகளை மோசமாக நடத்துவதையும், அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் நேராக பார்த்தேன். அப்படிப்பட்ட அமெரிக்காவில் நான் ஏன் இருக்க வேண்டும்?’ என்று சொல்லியிருக்கிறார். இந்தியா திரும்பியவுடன் பீகார் மாநிலத்தில் வினோபா பாவே என்னும் பிரபல காந்திய தலைவரின் ஆசிரமத்திற்குச் சென்று சில வாரங்கள் தங்கினார். அம்மா இந்தியா திரும்பிய வருடம் (1968) டிசம்பர் மாதம் தஞ்சை கீழ்வெண்மணியில் 44 கூலி விவசாயிகள் பெண்கள் குழந்தைகள் உட்பட எரித்து சாம்பலாக்கப்பட்டனர். தனது அண்ணனின் திருமண நிகழ்ச்சியில் இருந்த போது, இதைப் பற்றி ரேடியோ மூலம் அறிந்தார். உடனே கீழ்வெண்மணி சென்றார். தஞ்சைக்குப் போன பிறகு அவரை கீழ்வெண்மணிக்கு அழைத்துச் சென்றது கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் என்னும் காந்திய செயல்பாட்டாளர். கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைகள், அடிப்படை சமூக-பொருளாதார-அரசியல் மாற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற அம்மாவின் தீர்மானத்தை மீண்டும் பல மடங்கு உறுதிப்படுத்தியது. பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இல் தன்னை இணைத்துக்கொண்டு முதலில் தொழிற் சங்க நடவடிக்கைகளிலும் (CITU) அதன் பிறகு மாதர் சங்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்க ஈடுபாடு எங்கள் வீட்டின் வாசல் வரை தான் என்று ஒரு போதும் அம்மாவுக்கு இருந்ததில்லை. எங்கள் வீட்டின் மொட்டை மாடியில், அம்மாவும் மற்ற தோழர்களும் வட்டத்தில் அமர்ந்து பாட்டு பயிற்சியும் வகுப்புகளும் எடுக்க, நான் அவர்களைச் சுற்றி எனது மூன்று சக்கர சைக்கிளில் வலம் வருவேன். அம்மாவின் மெல்லிய குரலில் ‘மாதர் சங்கம் லேடிசு கிளப்பு (ladies club) யாருக்காக? தோழி, யாருக்காக? உன்னைப் போல, என்னைப் போல பெண்ணுக்காக’ என்ற பாடல் வரிகள் அடிக்கடி ஒலிக்கும். எனக்கு இரண்டு மூன்று வயது இருக்கும் போது கீழ்வெண்மணியின் கதையை அம்மா எனக்குப் பல முறை சொல்லியிருக்கிறார். பாட்டி எனக்கு இராமாயணம் மகாபாரதம் சொன்ன அதே பருவத்தில் தான், அம்மா ‘பொல்லாத பண்ணையாரு’ கதையைச் சொன்னார். நமக்கான கதைகள் ஒரு சிலவை தானா? தன் சிம்மாசனத்தை விட்டுச் சென்ற இளவரசனின் கதை மட்டும் தான் தியாகத்தைப் பேசுகிறதா? வீரம், அநீதி, அரக்கர்களுக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய கதைகள் பல உண்டு என்பதை அம்மா எப்போதும் நம்பினார்.

எனக்குப் பெயர் வைத்தது கூட எங்கள் குடும்ப வரலாற்றில் ஒரு அரசியல் அத்தியாயம் தான். முதலில் அம்மா எனக்கு அஜிதா என்று பெயர் வைத்தார். கே.அஜிதா என்பவர் 1960-களில் இந்தியா முழுவதும் அறியப்பட்ட கேரளாவைச் சேர்ந்த நக்சலைட் பெண். கேரள போலீசுடன் மோதி, துப்பாக்கிகளை கைப்பற்றினார் அஜிதா. அம்மா முதல் முறையாக கீழ்வெண்மணிக்குச் சென்ற போது, அங்குள்ள போலீஸ் இவர் அஜிதாவாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்களாம். அஜிதா என்னும் பெயரை எனக்கு வைத்திருக்கிறார்கள் என்று கேட்டவுடன் என் தாத்தா (அப்பாவின் அப்பா) ‘ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு நீங்கள் நஞ்சை ஊட்டுகிறீர்கள்’ என்று மிகவும் கோபப்பட்டு அம்மா அப்பா இருவரையும் கடுமையாகச் சாடினார். இதற்குப் பிறகு இந்தப் பெயர் கைவிடப்பட்டது.

1965-66ல் நியூயார்க் மாநில அரசின் நிதிப்பிரிவில் பணியாற்றியபோது

என் பெரியம்மாவின் மகள் அந்த சமயத்தில் ஒடிசி நாட்டியம் கற்றுக்கொண்டிருந்ததால், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாட்டிய ஆசிரியர் அவர் வீட்டுக்கு வந்து பயிற்சி கொடுப்பார். சிறு குழந்தையாகிய நானும் ஒரு பக்கம் ஏதோ அவரைப் பார்த்து ஆடுவேன் என்பதால், ‘சிதாரா தேவி’ என்ற பெயரை அவர் எனக்கு வைத்து விட்டார். சிதாரா என்பவர் ஒரு பிரபல கதக் நாட்டியக் கலைஞர். என் அப்பா ஒரு முறை வெளியூருக்குச் சென்ற போது, ‘உங்க குழந்தைக்கு என்ன பேரு’ என்று யாரோ கேட்க, அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் ‘சிதாரா’ என்னும் பெயர் அவர் ஞாபகத்திற்கு வரவில்லையாம். என் நாக்கில் நுழையாத வட மொழி பெயர் என் மகளுக்கு வேண்டாம் என்று ஒரு தமிழ் பெயர் வைக்கலாமே என்று ஆசைப்பட்டார் அப்பா. ‘தாமரை’ என்ற பெயர் தான் அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால் அம்மா இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘தாமரை’ என்னும் சொல் அழகு மற்றும் பதுமையைத் தான் குறிக்கின்றது என்றும், என் மகள் எப்போதும் தான் அழகாக இருக்கவேண்டுமென்றோ செயலற்ற பொம்மையாக இருக்கவேண்டுமென்றோ நினைக்கக்கூடாது என்றும் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

இப்படி ஆயுதம் ஏந்திய போராட்டம், ஆரியம், திராவிடம், பாலின அரசியல் என்று என் பெயர் விவகாரம் ஊரையெல்லாம் சுற்றி கடைசியாக இந்திய விடுதலைப் போரில் வந்து முடிந்தது! இந்திய தேசிய விடுதலை போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி சிட்டகாங் நகரில் ஆங்கிலேயரை 1930இல் எதிர்த்த கல்பனா தத் என்னும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த வீராங்கனையின் நினைவில் ‘கல்பனா’ என்ற பெயரை அம்மா தான் முடிவு செய்தார். 1987-இல் மேற்கு வங்கத்தின் இடதுசாரி அரசு இந்திய விடுதலையின் 40-ஆம் ஆண்டை முன்னிட்டு, ‘இந்திய விடுதலைப் போரின் அறியப்படாத வீரர்கள்’ என்னும் புகைப்படங்கள் மிகுந்த புத்தகத்தை வெளியிட்டது. அம்மா அந்த வருடம் கல்கத்தா செல்லும் போது எனக்கு அந்த புத்தகத்தை பரிசாக வாங்கி வந்தார். அதன் முதல் பக்கத்தில் அம்மா எழுதியது: ‘கல்ப்ஸ் – உனக்கு பெயரைக் கொடுத்த மற்றொரு கல்பனாவின் நினைவில் இது உனக்குக் கொடுக்கப்படுகிறது!’

அம்மா ஒரு வித்தியாசமான மனுஷி என்பதை அவர் வெளி உலகில் செய்த வேலை மட்டும் எனக்கு உணர்த்தவில்லை. எந்த குடும்ப விசேஷத்திலும் அம்மா பட்டு உடுத்தியதில்லை. ஒரு சின்ன தங்க நகைகூட அணிந்ததில்லை. சடங்கு முறைப் படி தனது திருமணம் நடக்காததால் தாலி செயினும் கிடையாது. தன் சொந்த அக்கா மகள் கல்யாணத்திலும், மாதர் சங்க மாநாட்டிலும் உடுத்தும் சேலைகள் ஒன்றாகத் தான் இருக்கும். அம்மாவைப் பார்த்து தான் பொன், பட்டு, நகை மீதெல்லாம் பெண்களுக்கு இயற்கை என்று சொல்லப்படும் ஈர்ப்பு எவ்வளவு செயற்கையானது என்று நான் கற்றுக்கொண்டேன்.

அம்மாவின் வேலை ஏதோ அலுவலகத்திற்குச் சென்று செய்யும் வேலையாக நான் ஒரு பொழுதும் பார்த்ததில்லை. ஒரு நாள் காலை நான் தூங்கி முழித்தவுடனே பக்கத்து வீட்டிலிருந்த என் நெருங்கிய தோழியின் குரல் ஓங்கி ஒலித்தது. ‘எல்லாரும் வாங்க! மைதிலி ஆண்டி மைக்குல பேசராங்க!’ என்று சத்தம் போட்டு ஊரைக் கூட்டினாள். எங்கள் வீட்டிற்கு முன்னால் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆடிக்கொண்டே இருந்த இரண்டு டிரம்மின் மீது நின்று அம்மா முழங்கிக்கொண்டிருந்தார். அப்போது தான் எனக்குப் புரிந்தது அன்று மே ஒன்று தொழிலாளர் தினம் என்று. வாயைப் பிளந்துக் கொண்டு எங்கள் காம்பவுண்டில் இருந்த அனைத்து குடும்பங்களும் அந்த வினோதக் காட்சியைப் பார்க்க, எங்கே அம்மா கீழே விழுந்து என் மானத்தை வாங்கிவிடுவாரோ என்று நான் பயந்தது ஞாபகத்தில் நிற்கிறது.
மற்றொரு நாள் காலை திடீரென்று ஏதோ சத்தம். எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த குடிசைப் பகுதியிலிருந்து பெண்கள் காலி குடங்களைத் தூக்கிக்கொண்டு தெருவில் கூடியிருந்தனர். பள்ளிக்கு என்னைத் தயாராக்கிக் கொண்டிருந்த அம்மா அடுத்த நொடியே வெளியே ஓடிப் போய் அவர்களைப் பார்த்து ‘அங்கியே உக்காருங்க! பஸ்ஸு போக விடாதீங்க! கலையாதீங்க!’ என்று தண்ணீருக்கான அந்த கூட்டத்தை மறியல் போராட்டமாக மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டார். என் முடியை சீவிப் பின்னிக்கொண்டிருந்த அம்மா சீப்பை வீசி விட்டு மாதர் சங்கத் தலைவியாக சட்டென்று உருமாறியது எனக்கு எந்த அதிர்ச்சியும் தரவில்லை. ஏனென்றால் அதுவே அம்மாவின் இயல்பு.

பல நாட்கள் நள்ளிரவிலும் பிரச்சினையில் சிக்கிய பெண்கள் அம்மாவைத் தேடி எங்கள் வீட்டிற்கு வருவார்கள். தூக்கக் கலக்கத்தில் இருக்கும் எனக்கு அம்மாவின் குரல் கேட்கும். ஏதோ போலீஸ் அதிகாரியை ‘சாயங்காலம் ஆறு மணிக்கு மேல ஒரு பொண்ண போலீஸ் ஸ்டேஷன்ல வைக்கக்கூடாதுனு தெரியாது உங்களுக்கு’ என்று திட்டிக் கொண்டிருப்பார். சேத்துப்பட்டில் எங்கள் வீட்டிற்கு பின்னாலிருந்த ஜகன்னாதபுரம் என்னும் குடிசைப் பகுதியில் பலருக்கு இந்த வீட்டில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் இருக்கிறார் என்றும் ஏதாவது பிரச்சினையென்றால் அவரை உடனடியாக அணுகலாம் என்றும் தெரிந்திருந்தது.

எங்களைச் சூழ்ந்திருந்த உலகத்தின் மீது அம்மா ஏற்படுத்திய தாக்கத்தை என்னால் சிறு வயதிலிருந்து பார்க்கமுடிந்தது. நான் சிறுமியாக இருந்தபோது என் தோழியின் வீட்டில் ஒரு நாள் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது டிவியில் அம்மாவின் ஒரு பேட்டி வந்தது. பெண்களுக்கு ஏன் சங்கம் ஒன்று தேவை என்று அம்மா விளக்கிக்கொண்டிருந்தார். ஜனநாயக மாதர் சங்கம் பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறைகளுக்குச் செய்த போராட்டம் பற்றியும், வீதிகளிலும், சந்தைகளிலும் உழைக்கும் பெண்களுக்கு கழிப்பறைகள் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். இதைக் கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருந்த என் தோழியின் பாட்டி, ‘அவுங்க சொல்றது சரி தான். நம்ம வீட்டுக்கு தினமும் வர கீரைக்காரம்மா எங்க போவாங்க? நான் இது வரைக்கும் இத யோசிச்சதேயில்லையே,’ என்றார்.

நான் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் எனது சக மாணவிகள் சிலர் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அன்று சாயங்காலம் ஆகியும் அம்மா வீடு திரும்பாததால், எங்கே உன் அம்மா என்று அவர்கள் கேட்க, இன்று அம்மா ஜெயிலில் இருந்துவிட்டு நாளை வருவார் என்றேன். ஏதாவது போராட்டம் என்றால் போலீஸ் ஒரு நாள் சிறைப்படுத்துவது வழக்கம் தான் என்ற அடிப்படையில் நான் இதைச் சொல்ல, அவர்கள் அதிர்ச்சி அடைந்து பயந்து என் மீது அனுதாபப்பட்டதைப் பார்த்து, இந்த அல்ப விசயத்துக்குப் போயி இப்படி ஓவர் ரியாக்ஸனா என்று நானும் அவர்களைப் பார்த்து வியந்தேன்.வீட்டிற்கு வரும் என் நண்பர்களுடன் அம்மா எப்போதும் அன்பாகவும், நட்புடனும் பழகுவார். என்னுடன் பள்ளியில் படித்த ஸ்ரீரங்கம் என்னும் என் நெருங்கிய தோழி எங்கள் பள்ளியில் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் கலாட்டா செய்வதையும், ‘இவன் இவளுக்கு பாய்பிரெண்ட் (boyfriend)’, ‘இவளுக்கு இவன பிடிச்சிருக்கு’ போன்ற வகுப்பறைக்குள் பேசப்படும் இரகசியங்களையும் அம்மாவிடம் சொல்லிவிடுவாள். ‘மைதிலி ஆண்டியிடம் ஜாலியா ஒளிவு மறைவு இல்லாம பேச முடியும்’ என்று எப்போதும் சொல்லுவாள் ஸ்ரீரங்கம். தற்போது கலிபோர்னியாவில் ஒரு மென் பொருள் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறாள். ‘தொழில்நுட்ப துறையில் பெண்கள்’ என்னும் ஒரு கூட்டத்தில் சில வருடங்களுக்கு முன் அவள் கலந்துகொண்டு பேசிய போது, ‘நீ மிகவும் மதிக்கும் பெண் யார்?’ என்ற கேள்விக்கு, ‘என் பள்ளி ஸ்நேகிதியின் அம்மா’ என்று பதில் சொல்லி, அம்மாவைப் பற்றிய சில விசயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டாள்.

1966-68ல் ஐநா சபையில் மைதிலி

1970-களிலும், 80-களிலும் அம்மா தீவிரமாக இயக்க வேலைகளை செய்துகொண்டிருந்த காலத்தில் என் பாட்டி (அம்மாவின் அம்மா) என்னை கண்காணித்தார். நான் பாட்டியின் செல்லம் என்பதால் எனக்கு இந்த காலங்கள் இனிதே கடந்தாலும் அம்மாவிற்கு சில மன உளைச்சல்கள் உண்டு. நாங்கள் வசித்த காம்பவுண்டில் மாமா, மாமி, தாத்தா, பாட்டி என்று அம்மாவின் உறவினர்கள் பலர் இருந்தனர். இவர்கள் என்னைப் பார்த்துக்கொள்வதில் அம்மாவுக்கு உறுதுணையாக இருந்த போதிலும், அம்மாவின் குழந்தை வளர்ப்பு முறையை அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பிருந்ததால் அம்மாவை அடிக்கடி விமர்சிப்பார்கள். ‘தாயின் கவனம் இல்லாமல் வாடும் குழந்தை’ என்ற பெயருண்டு எனக்கு. ஒரு பெண் தன் குழந்தைக்கும், வீட்டிற்கும் செய்யவேண்டிய எதையும் செய்யாமல் அரசியல் கூட்டங்களிலேயே ஆனந்தமாக நாட்களைக் கழிக்கும் மைதிலி என்ற பழி உண்டு அம்மாவிற்கு.

தீபாவளிக்கும், பிறந்த நாளுக்கும் கல்பனாவுக்குப் புதுத் துணி எடுப்பதெல்லாம் பாட்டி தான், தன் குழந்தை கந்தலை அணிந்தாலும் மைதிலி கவலைப்பட மாட்டாள், கந்தலை உடுத்துவது தான் கம்யூனிஸ்டுக்கு அடையாளம் என்று அவள் நினைக்கிறாளோ என்றெல்லாம் அம்மா விமர்சிக்கப்படுவார். ‘உன்னை அரசுப் பள்ளியில் படிக்கவைப்பேன் என்று உன் அம்மா சொன்னதால் தான், உன் பெரியம்மா முயற்சியெடுத்து உன்னை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டார்’ என்று என் உறவினர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அம்மா செய்யும் வேலை மீது மரியாதையும், நம்பிக்கையும் அவர் குடும்பத்தினர் வைத்திருந்தார் என்பது உண்மை. அதே நேரம் அடிக்கடி அம்மா வெளியூர் செல்வதையும், அதிக நேரம் தன் பொது வாழ்க்கை ஈடுபாடுகளில் செலவிடுவதையும் அவர்கள் வேதனையுடன் பார்த்தார்கள். மனைவியிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல், குடும்பத்தையும் குழந்தையையும் பொறுப்பாகவும், பொறுமையாகவும் பார்த்துக்கொள்ளும் மாமனிதராக என் அப்பா கருதப்பட்டார்.

இந்தக் குடும்பக் கதையாடல்களால் அம்மாவுக்கு வருத்தங்கள் உண்டு. ‘நான் ஒரு ஆணாக இருந்து இந்த வேலைகளைச் செய்திருந்தால் யாருக்கும் என் மீது கோபம் இருக்காது. பெண் மீது தான் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள்’, என்று அம்மா என்னிடம் வருத்தப்பட்டிருக்கிறார். நான் வளரும் போது அம்மாவின் கவனிப்பு கிடைக்கவில்லை என்ற எந்த ஏக்கம் இருந்த ஞாபகமும் எனக்கில்லை. எல்லாக் குழந்தைகளைப் போலவும் அம்மாவின் நேரம் அதிகம் கிடைக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கலாம். எனக்கு இரண்டு வயது இருக்கும் போது, வீட்டில் நண்பர்களும், தோழர்களும் அம்மாவைச் சூழ்ந்திருக்க, அம்மா மடியில் உட்கார்ந்து அவர் வாயை இறுக்கிமூடி ‘பேசக்கூடாது’ என்று கட்டளையிடுவேன் என்றும், சில நேரம் காப்பி டம்ளர், டபரா, பேனா, புத்தகங்களையெல்லாம் அவர்கள் மீது வீசி அடித்து அவர்களை விரட்ட முயல்வேன் என்றும் சொல்வார்கள்.

அம்மா எந்த ஊருக்குப் போனாலும், மீட்டிங் போனாலும் பள்ளி பாடங்களை நான் வீட்டுப் பயிற்சி எடுக்க வேண்டுமென்று டைப்ரைட்டரில் கேள்வித்தாள்களை எனக்கு டைப் செய்துவிட்டுத் தான் கிளம்புவார். எங்கள் படுக்கை அறையில் ஒரு சிறிய கரும்பலகை இருக்கும். தினமும் அதில் அம்மா எனக்கு தமிழ் எழுத்துப் பயிற்சி கொடுப்பார். பள்ளி பருவத்தின் போது அம்மா தமிழ் வழி கல்வி பயின்றதால், இண்டர்மீடியட் சேரும் போது ஆங்கிலத்திலேயே எல்லா பாடங்களையும் படிக்கவும், எழுதவும் முதலில் சற்று சிரமப்பட்டார். என்னை ஆங்கில வழி பள்ளிக்கு அனுப்பியதால், எனக்கு தமிழ் சரியாக எழுதப் படிக்க வராமல் போய்விடுமோ என்று அம்மா பயந்து எனது தமிழ் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார்.

பாடப் புத்தகங்களை விட பொது விசயங்கள் எனக்கு தெரிந்திருக்கவேண்டும் என்று செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை உருவாக்கவேண்டும் என்று அம்மா மிகவும் விரும்பினார். இதற்காக தினமும் அம்மாவும், அப்பாவும் பேப்பரிலிருந்து ஒரு குழந்தைக்கு சுவாரசியமான இரண்டு செய்திகளையாவது கண்டுபிடித்து ‘அம்மா நியூசு’, ‘அப்பா நியூஸ்’ என்று படித்து சொல்வார்கள். அப்போதெல்லாம் குழந்தைகள் பக்கம் என்ற விசேஷ இணைப்புகள் தினசரி செய்தித்தாள்களில் கிடையாது. ஆங்கிலத்திலும், தமிழிலும் குழந்தைகளுக்கான புத்தகங்களை (அம்புலி மாமா, சந்தா மாமா உட்பட) அம்மா எனக்கு வாங்கி வருவார். சோவியத் புக் ஹவுஸிலிருந்து புத்தகங்கள் மிக மலிவான விலையில் கிடைத்த காலம் அது. படங்கள் மிகுந்த ஒரு புத்தகத்தின் விலை வெறும் 25 பைசா தான். ஒரு நாள் அம்மா உற்சாகமாக வீட்டிற்குத் திரும்பினார். 5 ரூபாய்க்கு 20 குழந்தைகளுக்கான புத்தகங்களை எனக்கு வாங்கி வந்தார்!

சீனா மற்றும் சோவியத் யூனியனில் புரட்சியின் போது குழந்தைகளும், இளைஞர்களும் செய்யும் வீர சாகசங்களை இந்த புத்தகங்கள் எடுத்துச் சொல்லும். சீனாவின் செம்படையின் (Red army) இராணுவ வீரர்களை பாதுகாப்பாக ஒளித்து வைப்பதும், காயமடைந்தவர்களுக்கு செவிலிப் பணிகள் செய்து பேணிக் காப்பதும், முட்டை போன்ற சத்தான உணவுகளை சிரமப்பட்டு சேகரித்து அவர்களுக்குக் கொடுப்பதும், புரட்சிக்கெதிராக செயல்படும் பண்ணையார்களின் சூட்சுமங்களை அம்பலப்படுத்துவதுமாக இந்த குழந்தைகளின் சாகசங்கள் சித்தரிக்கப்படும். சில கதைகளின் கடைசி பக்கத்தில் ஏதோ ஒரு தலைவர் அந்த வீரக் குழந்தைகளை நேரில் சந்தித்து பாராட்ட அவர்கள் ஊருக்கு வரப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்க்க, அவர் வேறு யாருமில்லை சேர்மன் மாவோ தான் என்று கண்டுபிடித்த குழந்தைகள் பூரித்துப்போவார்கள். அதே மெய்சிலிர்ப்பு அந்த கதைகளை படித்து, படங்களை பார்க்கும் எனக்கும் உருவாகும். பல கம்யூனிஸ்டு குடும்பங்களைப் போல எங்கள் வீட்டின் சுவர்களையும் மார்க்ஸ், லெனின், மாவோவின் புகைப்படங்கள் அலங்கரிக்கும். இவர்களை நான் மார்க்ஸ் தாத்தா, லெனின் தாத்தா, மாவோ தாத்தா என்று அழைக்கப் பழகினேன். எனது சிவராமன் தாத்தாவையும், ஏகாம்பரம் தாத்தாவையும் விட இவர்களைக் கண்டு நான் அதிசயித்தேன்!

நான் சிறுமியாக இருந்த போது அம்மாவுடன் சில பொதுக் கூட்டங்களுக்கு சென்றதுண்டு. அம்மா பொது மேடையில் பேசும் போது கூட அவரது பேச்சு முறையென்பது வழக்கத்தை விட ரொம்ப மாறுபட்டதாக இருக்காது. மைக்கில் பேசினாலும் எனக்காகவே மட்டும், என் காதில் பேசும் உணர்வு சில நேரம் எனக்கு ஏற்படும். சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளிகள் ஒரு பஸ் விபத்தில் இறந்துபோன சம்பவத்தைப் பற்றி அம்மா ஒரு முறை பேசினார். ‘ஆலை முதலாளிகள் இது ஒரு விபத்து தான் என்கிறார்கள். எது விபத்து? தினமும் காலை நான்கு மணிக்கு தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளை எழுப்பி தொழிற்சாலைக்குக் கொண்டுச் செல்வது விபத்தா? தினமும் சூரியன் அஸ்தமித்த பிறகு இந்தக் குழந்தைகள் அடித்து போட்டது போல் வீடு திரும்புவது விபத்தா?..’ என்று அம்மா தனது அமைதியான ஆரவாரமற்ற குரலில் பேசியது என் நினைவில் நிற்கிறது.

அம்மாவுக்கு ஒரு குணமுண்டு. பேச அழைக்கப்படும் எந்த கூட்டத்திற்கும் தயாரிப்பு முயற்சிகள் இல்லாமல் போகமாட்டார். தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு எதுவாக இருந்தாலும், அதற்கான ஹோம்வர்க் செய்வதென்பது அம்மாவின் வழக்கம். அம்மா தினமும் காலையில் பேப்பர் படிக்கும் போது, கத்திரிக்கோல் எப்போதுமே கையில் இருக்கும். எங்கள் வீட்டில் ஒரு பைலிங் காபினெட் (filing cabinet) முழுவதும் அம்மா கூட்டங்களுக்காக எடுத்த குறிப்புகளையும், செய்திதாள்களிலிருந்தும், பிரண்ட்லைன் (Frontline) போன்ற பத்திரிகைகளிலிருந்தும் வெட்டிய பக்கங்களையும் கொண்டது. இவற்றை அம்மா தலைப்பு வாரியாக பிரித்து வைத்திருப்பார். திடீரென்று தேவையிருந்தாலும் எளிதாக தேடியெடுக்கும் விதத்தில் வெவ்வேறு பைல்களில் வரிசைபடுத்தியிருப்பார். சில நேரம் தன் நண்பர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘இந்த தலைப்பைப் பற்றி நான் பேச வேண்டும், இதற்காக நான் என்னென்ன படிக்கவேண்டும் சொல்லுங்கள், என்றும் கேட்பார். இதெல்லாம் நமக்கு தெரிஞ்ச விசயம் தானே, என்னும் மெத்தனத்தை அம்மாவிடம் நான் என்றுமே பார்த்ததில்லை.

நான் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் BA படித்த போது, அம்மா ஏற்பாடு செய்யும் சில முக்கிய கூட்டங்களுக்கு என்னுடன் படிக்கும் சில நெருங்கிய தோழிகளை அழைத்துச் செல்வேன். சென்னையிலுள்ள பல பெண்கள் அமைப்புகளை அம்மா ஒருங்கிணைத்து இந்தக் கூட்டங்களை நடத்துவார். 1990-களில் சிதம்பரத்தைச் சேர்ந்த பத்மினி என்னும் பெண்ணுக்குக் காவலர்களால் ஏற்பட்ட பலாத்காரத்தைக் கண்டித்து பல மாதர் இயக்கங்கள் கூடி ஒரு ஹாலில் நடத்திய கூட்டமும், பன்வாரி தேவி என்னும் ராஜஸ்தானிய பெண்ணின் கூட்டு பலாத்காரத்தைக் கண்டிக்க நடந்த வீதிக் கூட்டமும் என் ஞாபகத்தில் நிற்கின்றன.

 அரசியலால் ஒன்றிணைந்த மைதிலி-கருணாகரன்

பலருக்கும் தெரிந்த பெண் உரிமைக்கான சமூக செயல்பாட்டாளர் என்னும் விதத்தில் அம்மாவை நான் படித்த பள்ளியும், கல்லூரியும் சிறப்பு விருந்தினராகப் பேச அழைத்ததும் உண்டு. எனக்கு அம்மா இப்படி வருவது சற்று கூச்சத்தையே உருவாக்கும். ஆனால் நான் அம்மாவிற்குப் பழக்கமான உலகில் பங்கேற்கும் போதெல்லாம், அம்மாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி மட்டுமே. நான் பள்ளியில் படித்த போது, தனது கட்சி (சிபிஐஎம்) குழந்தைகளுக்காக ஒருங்கிணைத்த சேர்ந்திசை குழுவில் அம்மா என்னை இணைத்தார். எம்.பி.ஸ்ரீனிவாசன் என்ற பிரபல பாடல் கலைஞரிடம் பயிற்சி எடுத்தவர் தான் எங்கள் குழுவின் ஆசிரியை. இந்த குழுவின் பெயர் சமந்தா ஸ்மித் குழு (சமந்தா ஸ்மித் என்னும் 10 வயது சிறுமி அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்த பனிப் போருக்கு எதிராகவும், உலக அமைதிக்காகவும் செயல்பட்டவர்).

பிறகு பெரியவர்களையும் கொண்ட நெல்சன் மண்டேலாவின் பெயரில் கலைக் குழு உருவாக்கப்பட்டது. எங்கள் பாடல் பயிற்சிகள் பெரம்பூர் ஓட்டேரியிலுள்ள சி.பி.ஐ.எம் மாவட்டக் குழு அலுவலகத்தில், வளவன் என்னும் தோழரால் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றன. மே தினத்தையொட்டி நடக்கும் நிகழ்ச்சிகளிலும், த.மு.எ.சவின் பொது நிகழ்ச்சிகளிலும் எங்கள் சேர்ந்திசை குழு பாடல்களை நிகழ்த்தியதுண்டு. ஜனவரி 1989-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, நெல்சன் மண்டேலா கலைக்குழு பிரச்சார மேடைகளில் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தியது. சில நாட்கள் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புவதற்கு நள்ளிரவாகிவிடும். அப்போது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அடிக்கடி ஜூரம், இருமல், சளி ஏற்பட்டதால் இந்த மாலை நேர பயணங்களின் விளைவு தான் இது என்று எனது உறவினர் நினைத்தார்கள். என் அத்தை ஒரு முறை அம்மாவிடம் ‘இந்த வருசம் ஏன் இதெல்லாம்? பப்ளிக் எக்ஸாம் வேற’ என்றார். என் அம்மாவின் பதில் பளிச்சென்று ஞாபகத்தில் இன்னும் நிற்கிறது. ‘பப்ளிக் எக்ஸாம் கல்பனாவுக்கு எந்த அளவு முக்கியமோ அந்த அளவு இதுவும் முக்கியம்’ என்றார்.

எனது பள்ளி, அக்கம்பக்கத்து நண்பர்கள் போன்ற எனக்குப் பழக்கமான சமூகச் சூழலையும் தாண்டி ஒரு புதிய உலகையும், நண்பர்களையும், உறவுகளையும் இந்த சேர்ந்திசை அனுபவம் எனக்கு அறிமுகப்படுத்தியது. இப்படிப்பட்ட வாய்ப்புகள் வாழ்க்கையில் கிடைப்பது அரிது என்பதால், பரிட்சை படிப்பு என்பதெற்கெல்லாம் இதை நான் இழந்துவிடக் கூடாது என்று அம்மா நம்பினார். இதை எனக்குப் புரியவும் வைத்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூறும் ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே’ என்னும் பாடலும், வியட்நாமின் தேசியத் தலைவராகிய ஹோசிமின் இறந்த போது அவரது நினைவில் இயற்றப்பட்ட ‘பாதை முடியும் முன்னே, பயணம் வெல்லும் முன்னே’ என்னும் பாடலும் தான் அம்மாவுக்கு மிகவும் பிடித்தவை. பலமுறை இவற்றை பாடச் சொல்லி அம்மா என்னைக் கேட்டு மகிழ்வார். இந்த மகிழ்வுக்குக் காரணம் பாடல்களின் உணர்ச்சி மிகுந்த வரிகளே தவிர என் குரலின் எந்தத் தன்மையும் இல்லை!

அம்மாவின் குரலோ அவர் பாடும் போது இனிமையாகவே இருக்கும். ‘மணமகன் தேவை’ படத்தில் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பாடிய ‘பம்பரக் கண்ணாளே, காதல் சங்கதி சொன்னாளே’ என்னும் பாடலை அம்மா வீட்டில் அடிக்கடி பாடி நான் கேட்டிருக்கிறேன். ‘தாய் உள்ளம்’ படத்தின் ‘கொஞ்சும் புறாவே’ பாடல் மற்றும் எம்.ஜி.ஆர்-பானுமதியின் ‘மாசில்லா உண்மை காதலே, மாறுமோ செல்வம் வந்த போதிலே’ என்னும் பாடலும், பானுமதியின் ‘அழகான பொண்ணு நான், அதுக்கேத்த கண்ணு தான்’ என்னும் பாடலும் டிவியில் எப்போது வந்தாலும் ‘என் காலத்து பாட்டு டா கல்பா,’ என்று என்னையும் கூப்பிட்டு அம்மா ரசித்து கேட்பார். அம்மா கல்லூரியில் படித்த போது, 1950-களில் வெளிவந்த தமிழ் சினிமா பாடல்களை தன் வீட்டிலிருந்த ரெக்கார்ட் ப்ளேயரில் அடிக்கடி கேட்பாராம்.

தமிழ் சினிமா பாடல்களை ரசித்தது போல், 1950-களின் தமிழ் சினிமாவையும் அம்மா ரசித்திருப்பார் என்று தான் நினைக்கிறேன். ஆனால் மாதர் சங்கத்திலும், கட்சியிலும் செயல்பட்ட காலத்தில் தமிழ் சினிமாவில் பெண்கள் சித்தரிக்கப்படும் விதத்தைக் கண்டும், மசாலா சினிமாவில் பொதுவாக காணப்படும் ஆபாசத்தையும், அபத்தங்களையும் கண்டும் கொந்தளித்துப்போவார். 1987-இல் வெளிவந்த ‘இரட்டை வால் குருவி’ என்னும் மோகன், ராதிகா, அர்ச்சனா நடித்த படத்திற்கு எதிராக பேட்டிகளெல்லாம் கொடுத்திருக்கிறார். படத்தின் கதாநாயகன் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு, இருவரையும் ஏமாற்றுவதை ஒரு கேலிக் கூத்தாக காட்டி, ஆண்களின் பாலின பொறுப்பின்மையை கொண்டாடுவதோடு, பாலின விசயங்களில் நம் சமூகத்தில் நிலவும் இரட்டை அளவுகோலை நியாயப்படுத்துகிறது இந்த படமென்று அம்மா பொது மேடைகளில் பேசியிருக்கிறார்.

1980-களிலும், 90-களிலும் அதிகமாக சினிமாவில் காட்சிப்படுத்தப்பட்ட வன்முறையும் அம்மாவின் கோபத்தை கிளப்பியது. வெட்டு குத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு, வன்முறை ஒரு சாதாரணமான, அதிர்ச்சியளிக்காத விசயமாக மாறிவிடாதா என்று அடிக்கடி கேட்பார். இதையெல்லாம் மனதில் வைத்துகொண்டு தான் ஒரு முறை எங்கேயோ பேசும் போது, ‘ஒரு 5 வருசத்துக்கு சினிமாவை தடை செஞ்சா நல்லது தான்’ என்று சொல்லி பலரால் விமர்சிக்கப்பட்டார். ‘உழைக்கும் வர்க்கத்துக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா தான். அதைப் போய் தடை செய்யணும் என்றெல்லாம் நீங்க எப்படி பேசுவீங்க’, என்று கட்சி தோழர்கள் பலரும் என்னை திட்டினர், என்றார் அம்மா. இதையெல்லாம் சொல்லும் போது, அம்மாவுக்கு மிகவும் பிடித்த ஒரு படத்தைப் பற்றியும் சொல்லவேண்டும். இது 2000-த்தில் வெளிவந்த ஞான ராஜசேகர் இயக்கிய ‘பாரதி’ என்னும் பாரதியாரின் வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் படம். இந்த படத்தில் சுப்ரமணிய பாரதியாக நடித்த மராட்டிய நடிகரான சாயாஜி ஷிண்டேவின் நடிப்பைக் கண்டு அம்மா உருகியதைப் பார்த்து, ‘அப்பா ஜாக்கிரதை!’ என்று நான் இருவரையும் கிண்டலடித்தேன்.

நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தபோது அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் என் மீது இல்லை. இந்த படிப்பு தான் படிக்க வேண்டும் என்ற விதிகள் எப்படி இல்லையோ அப்படியே திருமணம், நட்பு மற்றும் உறவுகள் சம்பந்தப்பட்ட விதிமுறைகளும் கிடையாது. நான் படித்த பள்ளியில் என் வகுப்பில் படித்த மாணவிகள் மட்டுமின்றி மாணவர்களுடனும் எனக்கு நெருக்கமான நட்பு உண்டு. என் நண்பர்கள் (பசங்க உட்பட) வீட்டிற்கு வருவார்கள், போன் செய்தும் என்னுடன் பேசுவார்கள். எங்கள் காம்பவுண்டின் வாசலில் நின்று என்னுடன் கதை பேசிக் கொண்டிருப்பார்கள். பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் நான் அவர்கள் பெண் குழந்தைகளுக்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டாக இருக்கிறேன் என்று என் மீது கோபப்படுவார்கள். இதையெல்லாம் என் பெற்றோர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று எரிச்சலுடன் கேட்பார்கள். எனக்கு தெரிந்த வரை அந்த காலகட்டத்தில் (80-களில்) தடைகளின்றி ஆண்களுடன் பேசி பழகும் அனுமதி என்னோடு படித்த டீனேஜ் பெண்கள் யாருக்கும் கிடையாது.

இதைப் பற்றி நான் அம்மாவைப் பிறகு கேட்டிருக்கிறேன். அவர் சொன்னது, ‘நானும் உன் அப்பாவும் இதை எங்களுக்குள் விவாதித்தோம். முற்போக்கு பெற்றோர்களாகிய நாங்கள், உனக்கு ஆண் நண்பர்கள் இருக்கக்கூடாது என்று சொல்ல முடியாது என்று முடிவு செய்தோம்.’ அம்மாவுக்கு ஒரே ஒரு பயம் தான். பள்ளியில் படிக்கும் ஒரு பையன் தன்னை புறக்கணித்த ஒரு பெண்ணின் மீது ஆசிட் வீசினான் என்ற செய்தி அப்போது செய்தித்தாளில் வந்தது. ஆரோக்கியமான நட்பிற்கும், டீனேஜ் காதலுக்கும் வித்தியாசப்படுத்தும் பக்குவமும், அனுபவமும் இல்லாத உன் சகாக்களில் ஒருவன் உன்னையும் இப்படித் தாக்கும் சூழல் உருவாகுமோ என்று சில நேரங்களில் அம்மா பயப்படுவார்.

திருமணம் பற்றி ஒரு விசயத்தை அம்மா என்னிடம் பல முறை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ‘திருமணம் செய்வதெல்லாம் உன் விருப்பம். ஒரு துணை வேண்டும் என்று நீ நினைத்தால், உன் கணவரை நீ தேர்வு செய்துகொள். உனக்குக் கணவர் தேடும் வேலையை நான் செய்ய மாட்டேன். என் கணவரை நான் தேர்வு செய்தது போல உன் துணையை நீ தேடு’. ஒரே ஒரு ஆலோசனை மட்டும் கொடுத்தார். ‘கணவன், மனைவி இருவருக்கும் கருத்தொற்றுமை முக்கியம். காலையில் பேப்பரில் வரும் முக்கிய செய்திகளைப் படிக்கும் போது உங்களுக்குள் அடிதடி வரக் கூடாது!’ என்பார்.

என் அம்மாவின் திருமண வாழ்க்கை என்பது தோழமையும், நட்பும் கலந்த வாழ்க்கை. என் பெற்றோர் சாதி மறுப்புத் திருமணம் செய்திருந்தனர். அம்மா பிராமண குடும்பத்திலிருந்து வந்தவர். அப்பா பிராமணர் அல்லாதவர். அப்பாவை விட அம்மா இரண்டு வயது பெரியவர். என் அப்பா கருணாகரன் ஒரு என்ஜினியர். அவரது பூர்வீகம் காவேரிப்பாக்கத்துக்கு அருகே உள்ள கொண்டாபுரம் என்னும் கிராமம். கிண்டி பொறியியல் கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு, அவர் பணி செய்த நிறுவனம் அவரை மூன்று வருடங்களுக்கு இங்கிலாந்திற்கு பயிற்சியெடுக்க அனுப்பியது. அங்கு சில மார்க்சிய நண்பர்களை சந்தித்து, அத்தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு தன்னை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்திக்கொண்டார்.

இந்தியா திரும்பிய பிறகு, ஒரு சமயம் கீழ்ப்பாக்கத்திலிருந்த ஒரு பெட்டிக் கடையில் ஏதோ வாங்கும் போது ராடிக்கல் ரிவ்யூ (Radical Review) என்ற மார்க்சிய பத்திரிகையைக் கண்டு ஆச்சரியப்பட்டார். மைதிலி சிவராமன் என்னும் அதன் ஆசிரியரை பத்திரிகை விலாசத்தில் தேடிச் சென்ற போது தான், அம்மாவைச் சந்தித்தார். அம்மா அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய பிறகு 1969 இலிருந்து 1973 வரை இந்த பத்திரிகையை ஒரு சில நண்பர்களுடன் இணைந்து நடத்திவந்தார். அதன் முதல் இதழ் வெளி வரும் வரை காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரமும் அந்த சிறிய குழுவின் ஒரு உறுப்பினராக இருந்தார். அமெரிக்காவில் ப.சிதம்பரம், என். ராம், அம்மா ஆகியோர் ஒரே காலத்தில் கல்லூரி மாணவர்களாக இருந்ததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் ஒருவருடன் ஒருவர் நண்பர்களாகவும் இருந்தனர். இந்தியா திரும்பிய பிறகு இவர்கள் சென்னையில் ஒன்று சேர்ந்து சாடர்டே ஈவினிங் கிளப் (Saturday evening club) என்னும் பெயரில் சம கால அரசியல் சமூக போக்குகளை விவாதிப்பதற்கு ஒரு குழுவை உருவாக்கியிருந்தனர். கருத்தியல் வித்தியாசங்களால், சிதம்பரம் இந்த குழுவை விட்டு சீக்கிரமே விலகிவிட்டார்.

மாதர் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் கே.பி.ஜானகியம்மாள், பாப்பா உமாநாத், ஷாஜாதி, ஜானகிராமச்சந்திரன் உள்ளிட்ட தோழர்களுடன் மைதிலி

இந்த குழுவின் முன்முயற்சியில் ராடிக்கல் ரிவ்யூ பத்திரிகை வெளியிடப்பட்டது. சம கால நிகழ்வுகளை ஒரு மார்க்சிய பார்வையிலிருந்து அலசுவதன் மூலம் நகரங்களிலிருந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அரசியல்படுத்துவது இந்த பத்திரிகையின் நோக்கமாக இருந்தது. அந்த பத்திரிகையின் உருவாக்கத்தில் 1969-இல் அப்பா தன்னை இணைத்துக்கொண்டார். ராடிக்கல் ரிவ்யூவிற்கு விளம்பரங்கள் வாங்கிக் கொடுக்கும் வேலையிலும் ஈடுபட்டார். முதலில் இந்த பத்திரிகையை சிறு கடைகளுக்குக் கொடுத்து விநியோகம் செய்ய முயற்சித்தார்கள். அப்போதிருந்த மாணவர் சோசலிஸ்ட் போரம் (Students Socialist Forum) என்னும் குழுவின் மாணவ உறுப்பினர்களின் உதவியுடன் அதை கல்லூரிகளில் விற்கும் முயற்சிகளையும் செய்தார்கள். அம்மாவும் அப்பாவும் இணைந்து பெரியாரை பற்றி ராடிக்கல் ரிவியூவில் 1971இல் எழுதிய ஒரு கட்டுரையில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு பெரியாரியம் கொடுத்த சுயமரியாதையையும், சுய அடையாளத்தையும் இடதுசாரிகள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்னும் கருத்தை முன்வைத்தார்கள்.

அம்மாவின் அப்பா சிவராமன் என் அப்பாவை முதலில் தன் மகளின் வருங்கால கணவராக சந்தித்தபோது, அவர் சொன்னது: ‘மைதிலி உங்களுக்கு ஒரு சராசரி மனைவியாக இருக்கமாட்டாள். வீட்டுக்கு லேட்டாக வருவாள். யார் யாரோ அவளை போன் போட்டு அடிக்கடி பேசுவாங்க. அவளைத் தேடி வீட்டுக்கு போலிஸெல்லாம் வரும். இதெல்லாம் நீங்க இப்போதே தெரிஞ்சிக்கணும். அப்புறம் உங்க பொண்ணு சரியில்லன்னு என்னிடம் புகார் சொல்லக்கூடாது’. 1970-களில் எம்.ஆர்.எப் (MRF), Tablets India, Metal Box, அசோக் லேலண்ட், டி.வி.எஸ் (TVS) போன்ற கம்பெனிகளில் நடந்த முக்கியமான தொழிற்சங்கப் போராட்டங்களில் அம்மா தீவிரமாக ஈடுபட்ட போது ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் என் தாத்தா அப்பாவிற்கு இந்த பயனுள்ள முன்னெச்சரிக்கைகளை விட்டார்!

அம்மாவின் பெற்றோர் அவர் திருமணத்திற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றாவது யோசித்தாளே இந்த மைதிலி என்று பெரு மூச்சு விட்டார்கள். அம்மா அப்பா இரண்டு தரப்பின் பெற்றோர்களும் திருமண நாளன்று தான் ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள். என் தாத்தா சிவராமனின் வீட்டில் சடங்கு ஏதுமின்றி மாலை மாற்றப்பட்டு ஜனவரி 1972-இல் திருமணம் நடந்து முடிந்தது. நெருங்கிய குடும்பத்தினரும், கட்சித் தோழர்களில் ஒரு சிலரும் தான் பங்கேற்றார்கள்.

முன்னாள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் துணைவேந்தர் வசந்தி தேவி அம்மாவுடன் பிரசிடென்சி கல்லூரியில் படித்த காலத்திலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்கள். அம்மாவின் கல்யாண நாளன்று ஓரளவிற்கு ஒரு நல்ல சேலையை வசந்தி தேவி உடுத்தியிருந்ததால், என் அப்பாவின் பெற்றோர்கள் அவரைத் தான் மணப் பெண் என்று முதலில் நினைத்துவிட்டார்களாம்! அங்கு வந்தவர் ஒருவர் புதிய தம்பதிகளை வாழ்த்தி பேசிய போது, ‘மைதிலி- கருணாகரன் ஒரு சோசலிச படையையே தங்கள் குழந்தைகளாகப் பெற்றெடுக்க வேண்டும்’ என்றார். அந்த படையின் ஒரே அங்கத்தினராக நான் தோன்றிய பிறகு, அம்மா அப்பா என்னை ‘சேனாபதி’ என்று கிண்டலடித்து, இந்த சம்பவங்களைச் சொல்லி சிரிப்பார்கள்.

அம்மா கட்சிப் பணியில் இருப்பார், அப்பா வீட்டைப் பார்த்துக் கொள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வார் என்று இருவரும் தங்களுக்குள் முதலிலேயே பேசிவிட்டார்கள். அம்மா அப்பா இருவருமே நாத்திகர்கள். எங்கள் வீட்டிலேயே இருந்த என் பாட்டி கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவரது அறையில் பூசை செய்வார். சிறுமியாக இருந்த போது நானும் பாட்டியைப் போல் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தேன். நாத்திக பெற்றோரின் முன்னால் என் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘ஐ லவ் காட்’ (I love God) என்று பாத்ரூம் சுவரிலெல்லாம் எழுதி வைப்பேன். இதனால் அம்மாவுக்கு சிறிதளவு கூட எரிச்சலோ ஏமாற்றமோ ஏற்பட்டதில்லை. அம்மாவும் அப்பாவும் எந்த தத்துவத்தையும் என் மீது சுமத்தியதில்லை. எப்படி வாழ்க்கை அமையவேண்டும் என்று நினைத்தார்களோ அப்படியே வாழ்ந்து காட்டினார்கள். என் வாழ்க்கையைத் தீர்மானிப்பது எனது உரிமை மட்டுமல்ல எனது கடமையும் தான் என்பதை எனக்கு உணர்த்தினார்கள்.
என் பெற்றோரைப் பார்த்து நான் கற்றுக் கொண்ட முக்கிய பாடம் ஒரு பெண் பொது வாழ்வில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக இருக்க முடியும் என்றும், அவளை வியந்து பாராட்டியே ஒரு ஆண் எந்த ஈகோவும் இல்லாமல் வாழ் நாள் முழுவதும் அவளுக்கு உறுதுணையாக நின்று அவளைப் போற்றி வாழ முடியும் என்பதாகும். அப்பாவின் உதவியென்பது இக்கட்டான சூழல்களிலும் அம்மாவுக்கு முழுமையாக கிடைத்தது. அவசர கால சட்டம் (எமர்ஜென்சி) நடப்பில் இருந்த போது, எங்கள் தெருவில் ஒரு உளவாளி எந்த நேரமும் நின்று கொண்டு தோழர்கள் யார் யார் வீட்டிற்கு வருகிறார்கள் என்று கண்காணித்துக் கொண்டிருப்பார். எமர்ஜென்சியின் போது மற்ற தோழர்களைப் போல, அம்மா அவ்வப்போது தலைமறைவாகிவிடுவார். ஒரு முறை அம்மா, அப்பாவின் அலுவலகத்திற்கு போன் செய்து நான் வீட்டுக்கு பத்து நாட்களுக்கு வர மாட்டேன் என்றார். வீடு திரும்பிய பிறகு தான், ‘என்னை கைது செய்யலாம் என்று சொல்லப்பட்டதால் தண்டையார்பேட்டையில் கட்சி தோழர் ஒருவர் வீட்டில் இருந்தேன்’, என்றார்.

எமர்ஜென்சி நாட்களின் போது கட்சி தோழர்களையும், தலைவர்களையும் ஓர் இடத்திலுருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லும் பொறுப்பும் அம்மாவுக்கு இருந்தது. ஒரு முறை அம்மா பெங்களூருக்குச் சென்று அப்பாவின் சித்தியின் வீட்டில் இரவு தங்கி விட்டு, அடுத்த நாள் பெங்களூர் விமான நிலையத்தில் ஒரு தோழரை சந்தித்து, அவரை அழைத்துச் சென்று சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தார். பெங்களூர் சென்ற பிறகு தான் யாரை சந்திப்பதற்கு இங்கு வந்திருக்கிறோம் என்பது அம்மாவுக்கு சொல்லப்பட்டது. அந்த தோழருக்கோ யார் விமான நிலையத்திற்கு தன்னை சந்திக்க வரப் போகிறார், அங்கிருந்து எங்கே போக போகிறோம் என்றெல்லாம் தெரியாது. அப்பா இதை பற்றி என்னிடம் சொன்னது, ‘யாருக்கும் முழுமையான தகவலை கொடுக்காமல் இருப்பது தான் எல்லாருக்கும் பாதுகாப்பாக இருந்தது’. அப்பாவும் இந்த வேலைகளை இரண்டு மூன்று முறை செய்திருக்கிறார். ஒரு முறை என்.ராம் அவர்களை ஒரு நண்பர் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு அப்பா தனது காரில் ஓட்டிச் சென்று ஆந்திரா போகும் வழியில் ஒரு லாரியில் ஏற்றிவிட்டார்.

அம்மாவின் உறவினரின் உதவியும் இந்த கால கட்டத்தில் முக்கியமான விசயமாக இருந்தது. எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாளன்று அம்மா தன் டையரியில் இரண்டு வரிகள் மட்டும் எழுதியிருக்கிறார்: ‘எமர்ஜென்சி அறிவிப்பு. கல்ப்சை அக்கா வீட்டில் விட்டாச்சு ‘. அப்போது என் பெரியம்மா சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்தார். அவ்வப்போது தலைமறைவாகிய பிறகு, இரண்டு மாதங்களுக்கு அம்மா தென் ஆப்பிரிக்கா சென்று அங்கு ஏர் இந்தியா (Air India) அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த தன் அண்ணனின் வீட்டில் தங்கினார். அப்போது எனக்கு இரண்டு வயது. ஒரு முறை வீட்டிற்கு போன்செய்து, ‘நான் அம்மா பேசறேன்டா’ என்று என்னிடம் சொல்ல, ‘எந்த அம்மா?’ என்று நான் கேட்டு அம்மாவை சற்று வருத்தப்படுத்திவிட்டேன்.

அம்மாவும் அப்பாவும் இணைந்து உருவாக்கிய எங்கள் வீடு ஒரு திறந்த வெளி. கட்சித் தோழர்களும், கட்சியிலில்லாத இடதுசாரி சிந்தனையுள்ள நண்பர்களும் எப்போதும் வீட்டிற்கு வந்துகொண்டிருப்பார்கள். அம்மாவின் இளைய தோழர்கள் இரவு நேரத்திலும் வீட்டிற்கு வருவார்கள். காலையில் தூங்கி எழுந்தவுடன் தான் நான் அவர்களைப் பார்ப்பேன். எங்கள் வீட்டு சோபாவில் தூங்கிக்கொண்டிருப்பார்கள். ஒரே குழந்தையான எனக்குப் பல அன்பு அக்காக்களும், அண்ணன்களும். இப்படி பல கட்சித் தோழர்களும், நண்பர்களும் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்துசென்றதும், தங்கியதும் எங்கள் குடும்பத்திலிருந்த அனைவரின் மனதளவிலான எல்லைக்கோடுகளை விரிவுபடுத்திய ஒரு கற்றல் அனுபவமாக நான் பார்க்கிறேன்.

என் பாட்டி (அம்மாவின் அம்மா) யார் எங்கள் வீட்டிற்கு வந்தாலும் அவர்களுடன் நெருக்கமாக பழகிவிடுவார். தனது குடும்பக் கதைகளையும், வாழ்க்கை அனுபவங்களையும், தான் படிக்கும் நூல்களையும், எழுதும் கவிதைகளையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வார். அவர்களது வாழ்க்கை அனுபவங்களையும் சுவாரசியமாக கேட்டுக்கொள்வார். என் அப்பாவின் பெற்றோர் எங்கள் வீட்டில் ஒரு வருட காலம் தங்கியிருந்தார்கள். என் தாத்தா (அப்பாவின் அப்பா) சைவ சித்தாந்த வழிபாட்டிலும் தத்துவத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் ஒரு முறை வீட்டிற்கு வந்த தோழர் W.R.வரதராஜனிடம் சொன்னது: ‘கம்யூனிஸ்டுகளின் கொள்கைகள் எல்லாமே எனக்குப் பிடித்திருக்கு. ஒன்றைத் தவிர. நீங்கள் ஏன் கடவுளை மட்டும் புறக்கணிக்கிறீர்கள்? கடவுளையும் உங்கள் காம்ரேடாக ஏற்றுக்கொள்ளலாமே!’.

கட்சித் தோழர்கள் எங்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம், ‘நீ உள்ளே போ, இங்கு பெரியவர்கள் பேசுகிறார்கள்’ என்று ஒருபோதும் அம்மாவோ அப்பாவோ என்னிடம் சொன்னதில்லை. நான் சற்று வளர்ந்த பிறகு அவர்களுடனே உட்கார்ந்து, அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பேன். சில விசயங்கள் புரிந்தும், பல விசயங்கள் புரியாத போதிலும், இவர்களது பரபரப்பான விவாதங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. வீட்டில் மார்க்சிய மற்றும் பெண்ணியப் புத்தங்கள் குவிந்து கிடக்கும். இவற்றில் பல அம்மா அமெரிக்காவில் 1960-களில் இருந்தபோது வாங்கியவை.

இந்த புத்தகங்களும், தோழர்களின் வருகையும், அவர்களது விவாதங்களும் என்னை உருவாக்கியதில் ஒரு முக்கிய பங்கு செலுத்தியதாக நான் நம்புகிறேன். பள்ளியிலும் கல்லூரியிலும் எனது சக மாணவர்களை விட சம கால அரசியல் விசயங்களை நன்கு அறிந்திருந்தேன். வகுப்பறைக்குள் எனது ஆசிரியர்களின் கருத்திற்கு முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து அவர்களுடன் விவாதிப்பேன். எந்த பயமும் தயக்கமும் இல்லாமல் பேச்சுப் போட்டிகளிலும், விவாதப் போட்டிகளிலும் கலந்துகொள்வேன். மார்ட்டின் லூதர் கிங் ‘எனக்கு ஒரு கனவு உண்டு’ (I have a dream) என்று 1963-இல் வாஷிங்டன் டி.சியில் நடந்த இனவெறிக்கு எதிரான பேரணியில் பேசியதை என் பள்ளியின் பொது மேடையில் ஒரு முறை நிகழ்த்தினேன். இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு எனது பள்ளி நண்பர்களை நான் பேஸ்புக் (Facebook) மூலமாக சந்திக்கும் போது, என்னை ‘ஐ ஹாவ் அ டிரீம்’ பெண்ணாகத் தான் நினைவில் வைத்துள்ளார்கள் என்று கண்டுபிடித்தேன். இந்தத் திறமைகளையும், தன்னம்பிக்கையையும் எனது வித்தியாசமான குடும்ப சூழலும் அதை உருவாக்கிய அனைவரும் என்னிடம் வளர்த்தெடுத்ததாக நான் இப்போது உணர்கிறேன்.

1987-இல், அம்மாவின் நெருங்கிய நண்பரும் தோழருமான வி.பி.சிந்தன் சோவியத் யூனியனில் இருந்த போது திடீரென்று மாரடைப்பால் இறந்துவிட்டார். அம்மாவைக் கட்சிக்குக் கொண்டு வந்ததில் விபிசிக்கு முக்கிய பங்குண்டு. 1970களின் தொடக்கத்தில் ராடிக்கல் ரிவ்யூ பத்திரிகையைக் கொண்டுவந்த மார்க்சிய இளைஞர்களின் முயற்சிகளை திறந்த மனதுடன் வரவேற்றவர் தோழர் விபிசி. ‘அப்போது எங்களால் சிபிஎம்-இல் இருந்தவர்களில் அவருடன் மட்டும் தான் உரையாடல் நடத்த முடிந்தது’ என்று அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார். அவரது மறைவு என்பது அம்மாவுக்குப் பெரிய இழப்பாக இருந்தது. அம்மாவைப் போன்ற பல கம்யூனிஸ்டுகள் மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருந்த சோவியத் யூனியன் கலைந்து போனதும், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகள் முன்னாள் சோசலிச நாடுகளாக மாறியதும் கூட அம்மாவை பாதித்த சம்பவங்கள் தான். அம்மாவின் மற்றொரு நெருங்கிய நண்பர் 1980-களில் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட போதும் அம்மாவுக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டதென்பது சமீபத்தில் தான் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் சொல்லி எனக்குத் தெரிய வந்தது.
இந்த சம்பவங்களெல்லாம் ஒன்றுக்குப்பின் ஒன்று நடந்த காலகட்டத்தில் நான் எனது பதின் வயது பருவத்தில் அடிவைத்திருந்தேன். அம்மாவுக்கும் எனக்கும் அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் உருவாகும். அவ்வப்போது நான் தூங்கும் வேளையில் என் படுக்கையின் பக்கம் அம்மா உட்கார்ந்து எதோ விசயங்களைப் பேசி என்னுடன் விவாதம் செய்து அழத் தொடங்குவார். அம்மாவின் வேதனைக்குக் காரணம் நான் இல்லை என்பது எனக்கு அரைகுறையாக புரிந்த போதிலும், என்னைப் போட்டு வதைக்கிறாரே என்று நானும் கோபப்படுவேன். விதண்டாவாதம் செய்யும் டீனேஜ் பருவத்தில் நான் இருந்ததால், அம்மாவுக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கும் வயதும் பக்குவமும் அப்போது எனக்கில்லை.

ஆதிக்கசாதிகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை போராட்டத்தில் பிருந்தா காரத், சுதா சுந்தரராமன் ஆகியோருடன் மைதிலி

அந்த நாட்களை இப்போது திரும்பிப் பார்க்கும் போது, எனக்குப் புரியாத தெரியாத பல வருத்தங்கள் அம்மாவின் பொது வாழ்க்கை ஈடுபாடுகள் அவருக்குக் கொடுத்திருக்கலாம் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. அம்மாவுடன் நெருக்கமாக இருந்த தோழர்கள் தன்னை புண்படுத்தும் விசயங்களை மைதிலி வெளிப்படையாகப் பேசும் சுபாவம் கொண்டவரல்ல என்றும், பொது வாழ்க்கையிலும், கட்சியிலும் தனக்கான இடத்தை உரிமையுடன் கோரும் வழக்கமும் அவரிடமில்லை என்றும் சொல்லுவார்கள். தான் எதைச் செய்தாலும், அதைப் போதிய அளவிற்கு சிறப்பாகச் செய்யவில்லை, எனவே நான் இதற்கு தகுதியானவள் அல்ல என்று தன்னையே தாழ்த்திக் கொள்ளும் குணமும் அம்மாவுக்கு உண்டு. அம்மாவின் இந்த சிந்தனைப் போக்கை நான் பல முறை கவனித்திருக்கிறேன். தனது கட்சி வாழ்க்கையில் அம்மாவிற்கு என்ன வருத்தங்கள், ஏமாற்றங்கள் இருந்தாலும், அப்பாவுடன் இவற்றைப் பகிர்ந்துக்கொள்ள மாட்டார். ஏனென்றால், அப்பா கட்சி உறுப்பினர் கிடையாது. இந்த விசயங்களில் கட்சி ஒழுக்கம் என்பதை கடைப்பிடிப்பதில் அம்மா உறுதியாக இருந்தார். அம்மா அப்பா நெருக்கமான தம்பதிகளாக இருந்தாலும், சில விசயங்களைப் பேசாமல் இருப்பதும் அவர்கள் வாழ்க்கையின் ஒரு எதார்த்தமாக இருந்தது.

நான் வளரும்போது பல முறை அம்மாவுக்கு உடல் நலம் முடியாமல் போவதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். மைக்ரேன் (migraine) தலைவலிகள் அம்மாவுக்கு அடிக்கடி ஏற்படும். அதீத சோர்வும் ஏற்படும். ஒரு கட்டத்தில் அம்மாவுக்கு அடிவயிற்றில் தீவிர வலி இருந்ததால், இது புற்றுநோயாக இருக்குமோ என்று கூட நாங்கள் பயந்தோம். நான் 1995-இல் டில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையில் MA படித்துக்கொண்டிருந்த போது தான், அப்பா ‘மன அழுத்தம்’ (clinical depression) என்னும் சொல்லை ஒரு மருத்துவப் பத்திரிகையில் படித்தார். உடலில் ஏற்படும் வலிகளுக்கும், தொய்வுக்கும் நமது மனதும், மன நலனை பாதிக்கும் நோய்களும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று அப்பாவுக்கு அப்போது தான் புரிய வந்தது. நான் இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். உடலை ஆட்டி படைக்கும் சக்தி மனதிற்கு உண்டு என்று நான் அதுவரை நினைத்ததில்லை.

எங்கள் மார்க்சிய குடும்பத்தில் ‘மனம்’ என்னும் பிரதேசத்தை (domain of the mind) பற்றியெல்லாம் யாரும் அதுவரை பேசியது கிடையாது. மன நலன், மன நோய்களைப் பற்றிப் பொதுவாக சமூகத்தில் யாருக்கும் எந்தப் புரிதலும் இல்லை என்றும், டாக்டர்களுக்குக் கூட மன அழுத்தத்தையும் அதன் உடல் ரீதியான விளைவுகளையும் புரிந்துகொள்ளும் சரியான பயிற்சியெல்லாம் இல்லை என்றும் உணர்ந்தேன். மன அழுத்தத்தின் காரணங்கள் ஒரு பக்கம் மரபணுக்களும் (ஜீன்ஸ்), மறு பக்கம் மனிதர்கள் புழங்கும் சமூக சூழலால் ஏற்படும் அழுத்தங்களும் என்றும் நான் கட்டுரைகளைப் படித்துப் புரிந்துகொண்டேன்.

மன அழுத்தத்திற்கான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டே அம்மா தனது வேலைகளைத் தொடர்ந்த காலத்தில் நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் 1997-இல் பெண்கள் சுய உதவி குழுக்களுடன் பணியாற்றத் தொடங்கினேன். பல ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் அறிவியல் இயக்க வேலை காரணமாகச் செல்லும் போது, என்னைப் பார்த்து அங்கிருந்த தோழர்கள் ‘என் மகளுக்கு மைதிலி என்று பெயர் வைத்திருக்கிறேன் மா. அம்மா எப்படி இருக்காங்க?’ என்று மிகுந்த அன்புடனும், அரவணைப்புடனும் பேசுவார்கள். அம்மா எவ்வளவு பெரிய பாசத்தையும், மதிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று எனக்குப் புரிய வந்தது.

இந்த காலங்களில், ஜானகி அம்மாவின் நினைவில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் செயல்பாடுகளில் அம்மா ஆர்வத்துடன் ஈடுபட்டார். விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் குழந்தைகளுக்கு முறை சாரா கல்வி மையங்களை நடத்துவது அறக்கட்டளையின் முக்கிய செயல்பாடாக இருந்தது. இந்த மையங்களில் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு வகுப்புகள் அவர்கள் வசிக்கும் கிராமங்களில் நடத்தப்படும். அம்மா இந்த மையங்களை கண்காணிப்பதற்கு அடிக்கடி விருதுநகர் செல்வார். ‘எங்க சின்ன குட்டீஸ பாக்கப் போறேன்’ என்று என்னிடம் சொல்லி ஆர்வத்துடன் கிளம்புவார். நானும் அம்மாவுடன் 1997-இல் ஒரு முறை சென்ற போது குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிடுவதற்கு கிடைத்த வாய்ப்பு அம்மாவுக்கு எவ்வளவு பிடித்திருந்தது என்பதை பார்த்தேன். வழக்கமான மாதர் சங்கம், கட்சி வேலைகளை விட மாறுபட்ட ஒரு வேலையாகவும் இது அமைந்திருந்தது.

1999-இல் என் திருமணம் நடந்தது. என்னோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் பணி புரிந்த ஒரு இளைஞனை என் இணையராக நான் தேர்வு செய்தபோது அம்மா சந்தோசப்பட்டார். ஒரு சிறிய சிற்றுண்டியை மட்டுமே வைத்து விருந்தாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து திருமண நிகழ்ச்சியை முடித்துவிட வேண்டும் என்று நான் விரும்பினேன். அம்மா அப்பா கல்யாணம் இதையும் விட எளிமையாக இருந்தது தானே, என்று யோசித்தேன். எனவே, ‘கட்சி, மாதர் சங்கம்னு கூப்பிடும் போது எனக்கு நல்லா தெரிஞ்சவங்கள மட்டும் நீ கூப்பிடணும்’ என்று அம்மாவிடம் உறுதியாக சொல்லிவிட்டேன். ‘அப்படினா பலபேரு விடுபட்டு போவாஙகளே. கட்சி தோழர்கள் மைதிலி தன் மக கல்யாணத்துக்குக் கூட கூப்பிடலன்னு என்னை தப்பா நினைப்பாங்களே. இதை நான் அவுங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்?’ என்று அம்மா சங்கடப்பட்டார். பிறகு என்னிடம் பல முறை, ‘நீயும் ஒரு கல்யாணத்த செஞ்செ. அதனால எத்தனை பேருக்கு என் மேல கோபம் தெரியுமா?’ என்று வருத்தப்படுவார்.

2000-த்தில் அம்மா நியூ யார்க் நகரத்தில் நடந்த ‘பேய்ஜிங் + 5’ என்னும் பெண்களுக்கான உலக மாநாட்டிற்கு பிரண்ட்லைன் (Frontline) பத்திரிகையின் நிருபராகச் சென்றார். அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கும் சென்றார். இந்த பயணங்களை மேற்கொண்ட போது உலக வங்கியும் சர்வதேச நிதி நிறுவனமும் (IMF) உருவாக்கிய பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் பணக்கார நாடுகளையும் எவ்வளவு மோசமாக பாதித்திருக்கின்றன என்பதைப் பற்றிய தகவல்களை அங்குள்ள செயல்பாட்டாளர்களை சந்தித்து நேரடி பேட்டிகள் மூலமாக சேகரித்தார். முதலாளித்துவ நாடுகளில் மக்கள் நலன் மீது தொடுக்கப்படும் போர் (War on Welfare) என்னும் தலைப்பில் இதைப் பற்றி எழுதியிருக்கிறார். சென்னை திரும்பிய பிறகு, தான் எடுத்த புகைப்படங்களை வைத்து சென்னையிலுள்ள மகளிர் அமைப்புகளை ஒன்றுகூட்டி தனது அனுபவங்களையும், உலக பெண்கள் மாநாட்டின் கோரிக்கைகளையும் பகிர்ந்துகொண்டார்.

1990-களின் பிற்பகுதியிலும், 2000-த்தின் முற்பகுதியிலும் தி இந்து, பிரண்ட்லைன், தினமணி ஆகிய பத்திரிகைகளுக்கு அம்மா நிறையவே எழுதினார். இந்த காலகட்டத்தில் அம்மாவைப் பற்றி முழுமையாக தெரியாதவர்கள் கூட, நான் அவர் மகள் என்று தெரிந்தவுடன், ‘உங்கம்மா ரைட்டர் தானே?’ என்று கேட்டு, அவர் எழுதிய இந்த கட்டுரைகளை படித்திருக்கிறேன் என்பார்கள். பலருக்கு அம்மாவின் கட்சி, மாதர் சங்க அடையாளங்களை தெரியாத போதிலும், அம்மாவின் எழுத்துக்கள் மூலமாக அவரது சமூக அக்கறையைப் பற்றி தெரிந்திருந்தது.

2002-இல் விருதுநகரில் நடந்த மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அம்மா செயல் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அம்மாவை எப்போதுமே ஒரு மக்கள் தலைவராகவும், செயல் வீரராகவும் பார்த்துப் பழகிய எனக்கு அம்மா தலைமையிலிருந்து விலகுகிறாரே என்ற வருத்தம் இருந்தது. சுப்பலட்சுமி என்னும் தனது பாட்டியின் வாழ்க்கைக் கதை மற்றும் அவர் வாழ்ந்த இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி அம்மா ஒரு புத்தகத்தை எழுத விரும்பியதால், அதற்கான ஆராய்ச்சியையும், தகவல் சேகரிப்பையும் செய்வதில் முழுமூச்சாக இறங்கிவிட்டார். அந்த புத்தகத்தின் துவக்கத்தில் அம்மா எழுதியது போல சுப்பலட்சுமி என்பவர் தன் பேரக் குழந்தைகளைத் தாலாட்டி, சீராட்டி, கதை சொல்லி, கொஞ்சி விளையாடி தூங்க வைத்த பாட்டியெல்லாம் கிடையாது. 11 வயதில் திருமணமாகி, 14 வயதில் தாயாகிய சுப்பலட்சுமி, தனக்கு விருப்பமான ஒரு வாழ்க்கையும், வாய்ப்புகளும் கிடைக்காத நிலையில், தான் மட்டுமே வசிக்கக் கூடிய ஒரு அக வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, பலரால் பைத்தியம் என்றும் அழைக்கப்பட்டார்.

திருவள்ளூரில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு மைதிலி சிவராமன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஜெயந்தி நடராஜன்

ஒரு மனைவியாகவும், தாயாகவும், பாட்டியாகவும் சமூகம் அவரிடமிருந்து எதிர்ப்பார்த்த பொறுப்புகளை செய்ய மறுத்த என் பாட்டி சுபலட்சுமி, என்னையும் அறியாமல் என் உள் மனதில் இடம் பிடித்திருக்கிறார், என்பார் அம்மா. ஒரு பத்திரிகையாளர் அம்மாவை பேட்டி எடுக்கும் போது உங்களை மிகவும் கவர்ந்தவர் யார் என்று கேட்ட போது, ‘என் பாட்டி சுப்பலட்சுமி’ என்ற பதில் நான் யோசிக்காமலே எழும்பியது, என்று எழுதியிருக்கிறார் அம்மா. சுப்பலட்சுமியின் குரலை புதைக்கப்பட்ட தன் குடும்ப வரலாற்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்பிய அம்மா இந்தப் புத்தகத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

தினமும் காலை ஒன்பது மணிக்கு எக்மோரிலுள்ள வரலாற்று தரவுகளின் காப்பகத்திற்குச் சென்று நாள் முழுவதும் அங்கு வேலை செய்து விட்டுத் தான் வீடு திரும்புவார். அவர் பாட்டி சுப்பலட்சுமி பற்றி அவர் எழுதிய புத்தகத்தின் முதல் திருத்தப்படாத பிரதியை அம்மா என்னிடம் கொடுத்து ‘இந்த புத்தகம் எப்படி இருக்குன்னு நீயாவது எனக்கு கருத்து சொல்லணும்’ என்று சொன்னபோதிலும், என்னால் அதை படிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. அப்போதெல்லாம் அம்மா பேசிய பொதுக் கூட்டங்களில் சில நேரங்களில் பேச சிரமப்படுவார், சொல்ல வரும் விசயத்தை சற்று மறந்து போவதால் நிறைவுறாதத் தன்மை இருக்கும். மற்றவர்கள் அதை கவனித்தாரோ இல்லையோ, நான் அதை கவனித்தேன். என் மனம் கனத்துப்போகும். எப்போதுமே அசத்தலாக இருந்த என் அம்மா சற்று இடைவெளிகளுடன் பேசுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எனவே, அவர் செய்த எந்த விசயமும், எழுத்தாக இருந்தாலும் சரி, மேடைப் பேச்சாக இருந்தாலும் சரி, எனக்கு அடி வயிற்றைப் பிசைக்கும் கவலையை மட்டுமே அப்பொழுது உருவாக்கியது. அதனால் என்னால் அந்த புத்தகத்தை படிக்க முடியவில்லை.

அப்போது சுபான் (Zubaan) என்னும் டெல்லியுள்ள பெண்ணியப் பதிப்பகத்தின் இயக்குனர் ஊர்வசி புடாலியா அம்மாவின் புத்தகத்தைப் படித்து ஒரு ஈமெயில் அனுப்பினார்: ‘மைதிலி, நீ அழகாக எழுதுகிறாய்’ (you write beautiful), என்று. இந்தப் புத்தகத்தை சுபான் தான் ஆங்கிலத்தில் முதலில் 2006-இல் ‘Fragments of a life: A family archive’ என்ற பெயரில் வெளியிட்டது. ஊர்வசியின் ஈமெயிலை மகிழ்ச்சியுடன் படித்த அம்மா, என்னுடன் இந்த தகவலைப் பகிர்ந்து சந்தோசத்தில் என்னை முத்தமிட்ட போதும், என்னால் எந்த பதிலும் கொடுக்க முடியவில்லை. மரக் கட்டையைப் போல் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

அம்மாவைப் பற்றி கூடிவந்த எனது கவலைகளுக்கு மற்றொரு காரணமும் இருந்தது. 2004 ஆகஸ்ட் மாதத்திலிருந்து அம்மாவுக்கு தினமும் ஒரு மர்மமான ஜுரம் வரத் தொடங்கியது. இதன் காரணம் என்னவென்று எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருதயத்தில் வால்வ் (valve) ஒன்று இதற்குக் காரணமென்று நினைத்ததால் அதை சரிபடுத்தும் இருதய சிகிச்சை அம்மாவுக்கு 2005-இல் செய்யப்பட்டது. ஆனால் அந்த ஜுரம் குணமாகவில்லை. இதையும் மீறி அம்மா தன் புத்தகத்திற்கான எல்லா வேலைகளையும் செய்துகொண்டு தான் இருந்தார். ஆகஸ்டு 2007-இல் தான் அம்மாவுக்கு அல்ஸைமர் (Alzheimer’s Disease) என்னும் நோய் உள்ளது என்று கண்டுபிடித்தோம். ஞாபக சக்தியை இழக்க வைக்கும் குணப்படுத்த முடியாத நோய் இது. அல்ஸைமரால் பாதிக்கப்பட்ட ஒருவர், தான் எளிதாக தினமும் செய்யும் சின்ன சின்ன விசயங்களைக் கூட மறந்துபோகத் தொடங்குவார். இது சாதாரணமாக வயதாகும் போது நமக்கெல்லாம் ஏற்படும் ஞாபக மறதியோ மற்ற தடுமாற்றங்களோ கிடையாது. அல்சைமர் மனித மூளையின் படிப்படியான சாவு.

மன அழுத்தத்தைப் போலவே தான் மரபணுக்கள், சுற்றுப்புற சூழல் இரண்டிற்குமே இந்த நோயை உருவாக்குவதில் பங்குண்டு. மற்ற காரணங்களுடன் சேர்ந்து, கட்டுப்படுத்தப்படாத, அதிகபட்சமான மன அழுத்தமும் (stress) நமது மூளையை பாதிப்பதால் அல்சைமருக்கான ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் மருத்துவ அறிவியல் சொல்கிறது. உடல் நலன் என்பது மன நலனையும், உணர்ச்சிகளின் நலனையும் (emotional health) கொண்டது என்றும், இதைப் பேணுவது மிகவும் அவசியமென்றும் அம்மாவின் நோய் அல்ஸைமர் என்று உறுதி செய்யப்பட்ட பிறகு தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கினேன்.

2007க்குப் பிறகு பொது வாழ்க்கை ஈடுபாடுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயம் அம்மாவுக்கு நேரிட்ட பிறகு, அவர் விரக்தி அடைந்தார். அம்மாவின் மனச் சோர்வும், தனிமையும் என்னையும் தாக்கியது. அம்மா தனது பொது வாழ்க்கையை இழந்து விட்டார், எப்போதும் பிரகாசிக்கும் என் ஹீரோ மைதிலி வீட்டிலேயே அடைபட்டு கணவர் மற்றும் மகளை நாடுபவராக மாறிக்கொண்டிருந்தது எனக்கு மிகுந்த வலியைக் கொடுத்தது. சில நேரம் தீக்கதிர் பத்திரிகையில் வரும் அறிவிப்பு செய்திகளைப் பார்த்து, ‘கட்சி மாநில குழுக் கூட்டம் நடக்கிறது, இந்த அரசியல் கூட்டம் நடக்கிறது, எனக்கு ஏன் தகவல் வரவில்லை, நான் உடனடியாக அங்கு போகணும், என்னோடு வாங்க’ என்று எங்களைக் கேட்பார். இதைக் கேட்கும் அப்பாவுக்கும் எனக்கும் தர்ம சங்கடமாகயிருக்கும். நான் சற்று எரிச்சலுடன் அம்மாவைக் கேட்பேன், ‘ஏன் மா இத ஒரு ஓய்வு காலமாக உன்னால பார்க்க முடியல? நீ தான் ஏற்கனவே இவ்வளவு செஞ்சிட்டியே. இப்ப நீ புத்தகம் படி, பாட்டு கேளு, நல்ல சினிமாவெல்லாம் பாரு’. அம்மாவின் பதில், ‘கம்யூனிஸ்டுகளால் ஓய்வெடுக்க முடியுமா? எங்களில் யார் ஓய்வெடுத்தார்கள்? ஜோதி பாசு ஓய்வெடுத்தாரா? இல்லை காம்ரேட் சுர்ஜீத் ஓய்வெடுத்தாரா?’.

அம்மாவின் வாழ்க்கையில் இந்த பெரிய மாற்றம் ஏற்பட்ட காலத்தில் ‘இந்த இழப்பு முதலில் அவருடைய இழப்பு’ என்பதை புரிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் சொன்ன ஒரு நல்ல தோழியாக நான் இருக்கவில்லை. அதற்கான மன தைரியமும், எனது வலியை ஒதுக்கிவைத்து அவரது தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் பக்குவமும் என்னிடம் இல்லை. எங்கள் வீட்டில் தோழர்கள், மற்றும் அம்மாவின் நண்பர்களின் வருகை குறைந்துவிட்டது. அவர்களுக்கும் இந்த மன தைரியம் இல்லாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன்.

டாக்டர்கள் அம்மாவிற்கு அல்ஸைமர் நோயிருப்பதை அவரிடம் சொல்லவேண்டாம் என்றதால், இந்த நோய், அதன் தன்மைகள் பற்றியெல்லாம் நாங்கள் அம்மாவுக்கு இரண்டு வருடங்களுக்குச் சொல்லவில்லை. இறுதியாக எவ்வளவு நாள் தான் சொல்லாமல் இருப்பது என்று அம்மாவுக்கு தன் ஞாபக மறதிக்கு ஒரு பெயர் உண்டு என்று நான் புரிய வைக்க முயன்றேன். ஆனால் அந்த கட்டத்தில் அல்சைமர் என்பது அம்மாவுக்கு அர்த்தமற்ற இன்னொரு வார்த்தையாக மட்டுமே அமைந்துவிட்டது. அம்மா அப்போது என்னிடம் சொன்னது ‘வார்த்தைகள் என்னை விட்டு போகின்றன’. இந்த சமயத்தில் தான் (மார்ச் 2010-இல்) அம்மா தன் பாட்டியைப் பற்றி எழுதிய புத்தகத்தை ‘ஒரு வாழ்க்கையின் துகள்கள்’ என்ற பெயரில் தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டது. அந்த புத்தகத்தை வெளியிட்ட பொது நிகழ்ச்சியில் அம்மா பேசினார். பல நாட்களுக்குப் பிறகு அம்மா பொது மேடையில் பேசியதால், எனக்கு அரங்கத்தில் உட்கார்ந்து கேட்க முடியாத அளவிற்கு பயமும், பதட்டமும் உண்டாகியது. அம்மா சிரமப்பட்டாலும் சரியாகத் தான் பேசினார் என்று பிறகு தெரிந்துகொண்டு நிம்மதி அடைந்தேன்.

2010-த்தில் அப்பாவும், நானும் அம்மாவுடன் சீனாவுக்குச் சென்றோம். இது அம்மாவின் இரண்டாவது சீனா பயணம். முதல் முறை 1980-இல் சென்ற போது, சீனாவின் தேசிய பெண்கள் கூட்டமைப்பு அம்மாவை அழைத்திருந்தது. அந்த முறை ஒரு மாதம் சீனாவில் தங்கி பல ஊர்களுக்குச் சென்று சீனாவின் சோசலிச அரசு ‘பெண்கள் வேலை’ என்று சொல்லப்படும் வீட்டு வேலைகளின் சுமையை குறைப்பதற்கு எடுத்த முயற்சிகளையும் வேறு பல விசயங்களையும் ஆவணப்படுத்தினார். சீனாவின் பொது வாழ்வில் பெண்கள் எங்கும் காணப்படுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார் அம்மா. தொழிற்சாலைகளுக்குள் உற்பத்தி குழுக்களின் தலைவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள். கிராமங்களில் கம்யூன்கள் (communes) நடத்தும் தொழில்நுட்ப பள்ளிகளில் பெண்களின் பங்கேற்பு கிட்டதட்ட 50 சதவிகிதமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ‘பெண்கள் வானத்தின் ஒரு பாதியை தூக்கிப் பிடிக்கிறார்கள்’ என்னும் புதிய சொற்றொடர் தென்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு விதத்தில் வருமானம் ஈட்டக்கூடிய சமூக உற்பத்தி வேலையை செய்கிறாள் என்பதால், பெண்களின் சுய அடையாளம் தங்கள் குடும்பத்தை சார்ந்த ஒரு அடையாளமாக இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய விசயம் என்று அம்மா எழுதியிருக்கிறார். 1949-இல் வெற்றியைக் கண்ட சீனாவின் புரட்சியின் மிகப் பெரிய பயனாளிகள் பெண்களாகத் தான் இருப்பார்கள் என்றும் எழுதியிருக்கிறார்.

1980-இல் மேற்கொண்ட அந்த பயணத்தின் போது, அம்மா அப்பாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் அனுப்பியிருக்கிறார். அதில் ‘கல்ப்ஸை பற்றி நான் கவலைப்படாமல் இருக்க முயற்சிக்கிறேன். அவளுக்கு ஹேர் கட் (hair cut) தேவை. பிளீஸ் அதை நீ ஏற்பாடு செய். அவளுக்கு ஒரு சரியான ‘கர்ல் கட்’ (girl cut) கொடுக்கிறார்களா என்று பார்த்துக்கொள்’, என்று எழுதியிருக்கிறார். அம்மா, அப்பா, நான் மூவரும் சேர்ந்து 2010-இல் சீனா சென்ற போது, அம்மாவின் மறதி நோய் அதிகரித்த நிலையில், நாங்கள் விடுமுறை பயணிகளாகத் தான் சென்றோம். அம்மாவுக்கு உடல் நலம் மட்டும் சரியாக இருந்திருந்தால், எப்படியாவது இங்குள்ள மக்கள் அமைப்புகளை சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்கியிருப்பார் என்று நானும், அப்பாவும் வருத்தத்துடன் யோசித்தோம். அந்த பயணத்தின் போது அம்மாவுக்கு புது இடம், புரியாத மொழி, உணவு எல்லாம் வெகு வித்தியாசமாக இருந்ததால் சிரமப்பட்டார். ஆனாலும், ஷாங்காய் நகரில் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்த அதன் முதல் உறுப்பினர்களின் முதல் சந்திப்பு நடந்த வீட்டிற்கு நாங்கள் சென்ற போது, அம்மா மிகுந்த உற்சாகத்துடன் தனது கையை உயர்த்தி ‘ரெட் சல்யூட்’ கொடுத்தார்.

கடைசி பத்தாண்டுகளில் அம்மாவை நான் ஒரு விதத்தில் இழந்திருந்தாலும், வேறு வழிகளில் அவரைப் பற்றிய புதிய புரிதல்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. 2007-இல் ‘காலக்கனவு’ என்ற நான் பங்கேற்ற நாடகத்திற்கான ஒத்திகை தொடங்கியது. வ. கீதா எழுதிய இந்த நாடகத்தை நெறியாள்கை செய்தவர் அ.மங்கை. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 1940 வரை, தமிழ் சமூகத்தின் பொது வெளியில் இயங்கிய மற்றும் முயற்சித்தும் இயங்க முடியாத பெண்களை மீட்டெடுத்து, அவர்களது குரல்களை முன்னிறுத்திய பெண்ணிய நாடகம் இது. இந்த நாடகத்தில் அம்மாவின் பாட்டி (என் கொள்ளு பாட்டி) சுப்பலட்சுமியின் குரலும் ஒலித்தது. சுப்பலட்சுமியின் வரிகளை நாடகத்தில் பேசியது நான். அப்போது தான் முதல் முறையாக அம்மாவின் புத்தகத்தை (ஒரு வாழ்க்கையின் துகள்கள்) முழுமையாக படித்தேன். இவ்வளவு தாமதமாக படிக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியும், இப்போதாவது படிக்கிறோமே என்ற சந்தோசமும் தோன்றியது.

அந்த புத்தகத்தின் மூலமாக அம்மாவின் தெளிவான உணர்ச்சி பூர்வமான குரலை மீண்டும் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆங்கில இந்தியாவில் பெண்கள் நிலை மற்றும் முன்னேற்றம் சம்பந்தமான பல சட்ட ரீதியான விவாதங்களும், வரலாற்று சம்பவங்களும் சுப்பலட்சுமியின் வாழ்க்கைக் கதையுடன் பின்னிப் பிணையப்பட்டிருந்தன. தனது உடல் நலமும், ஞாபக சக்தியும் மோசமாக மாறிக் கொண்டிருந்த காலத்திலும் அம்மா எவ்வளவு கடுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டு செய்து முடித்தார் என்று வியந்தேன். அந்த புத்தகம் இப்போது பல்கலைக்கழகங்களிலும் பெண்கள் சம்பந்தபட்ட ஆராய்ச்சி (women’s studies) துறையில் பாடப் புத்தகமாக பயன்படுத்தப்படுகிறது.

2010-இல் 14 டிசம்பர் அன்று (அம்மாவின் பிறந்த நாள்) அவரது போட்டோக்கள் எல்லாவற்றையும் சேகரித்து, அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தில் நடந்த சம்பவங்களை எடுத்துச்சொல்லும் ஒரு வீடியோ கதையை உருவாக்கி, ஒரு சில நண்பர்களை வீட்டிற்கு அழைத்து இதை அவர்களுக்கு போட்டு காட்டினேன். அன்று வந்திருந்த வ.கீதா ‘மைதிலியின் ஆங்கிலக் கட்டுரைகளையாவது நாம் ஒரு தொகுப்பாக வெகு வேகமாக கொண்டுவர வேண்டும்’ என்று என்னிடம் வலியுறுத்தினார். அம்மாவின் கட்டுரைகளையும் மற்ற எழுத்துக்களையும் சேகரிக்கும் வேலைகளை உடனடியாகத் தொடங்கினேன். அப்போது தான் அம்மா எவ்வளவு பத்திரமாக, தான் எழுதியிருந்த ஒவ்வொரு துண்டு காகிதத்தையும் சேமித்து வைத்திருக்கிறார் என்று கண்டுபிடித்தேன்.

அவர் எழுதிய கடிதங்கள், மற்றவர்கள் அவருக்கு எழுதிய கடிதங்கள், BA, MA படித்த போது பாட வகுப்புகளுக்காக எழுதிய கட்டுரைகள், 40 ஆண்டு கால பொது வாழ்க்கையில் எழுதிய ஆங்கில மட்டும் தமிழில், வெவ்வேறு பத்திரிகைகளிலும், செய்தித்தாள்களிலும் வெளிவந்த கட்டுரைகள், கூட்டங்களில் பேசுவதற்காக எழுதி வைத்த நீண்ட குறிப்புகள், 1960-இன் இறுதியிலும், 70-களின் தொடக்கத்திலும் தஞ்சையின் பல கிராமங்களில் விவசாய தொழிலாளிகள் மற்றும் பண்ணையார்களை சந்தித்து பேசிய போது எடுத்த குறிப்புகள், 1980-இல் சீனா பயணத்தின் போது எழுதி நிரப்பிய டையரிகள் என்று இவை என்னை திணற வைத்த எல்லையற்ற புதையலாக காணப்பட்டது. இதை சேகரித்து வரிசைப்படுத்தும் வேலை மட்டும் எனக்கு 4 மாதங்கள் எடுத்தது. இதைச் செய்யும் போதே இந்த கட்டுரைகளை நான் படிக்க தொடங்கினேன். குறிப்பாக 1960களிலும், 70களிலும் ராடிக்கல் ரிவ்யூ, செமினார், மெயின்ஸ்ட்ரீம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த அம்மாவின் கட்டுரைகள் என்னைக் கவர்ந்தன. இந்தக் கட்டுரைகளில் அப்போது நிலவிய அரசியல் மற்றும் சமூக நிகழ்வு போக்குகளை அம்மா ஆழமாக அலசியிருக்கிறார்.

முதல் தி.மு.க அரசைப் பற்றி எழுதும் போது, இது உழைக்கும் வர்க்கங்களுக்கான அரசல்ல என்பதை ஆதாரங்களுடன் ஆணித்தரமாக அம்மா முன்வைக்கிறார். கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட தொழிற் சங்கங்களையும், அவை தலைமை தாங்கிய முக்கிய போராட்டங்களையும் உடைப்பதற்கு அந்த அரசு கையாண்ட உத்திகளை விளக்குகிறார். 1969-இலிருந்து அவர் சென்ற கிராமங்களைப் பற்றி எழுதும் போது உழைக்கும் தலித் மக்களின் தினசரி வாழ்வையும், அவர்களது உழைப்பையும் விவரிக்கிறார். சாதிய ஏற்றத்தாழ்வுகளை புரிந்துகொள்ளாமல் இந்திய கிராமங்களை புரிந்து கொள்ளமுடியாது என்றும், நிலவுடைமை மறுப்பு என்பது சாதிய சமூகத்தை கட்டமைக்கும் அடிப்படை கூறுகளில் ஒன்று என்பதையும் நமக்கு அந்த கட்டுரைகள், வார்த்தை சித்திரங்கள் வாயிலாக வரைந்து காட்டுகின்றன. காட்டூர் என்னும் கிராமத்தில் நிலமற்ற ஏழை தலித்துகள், 15 வருடங்களாக ஆடு மாடு மேய்ப்பதற்காக பயன்படுத்திய பொறம்போக்கு நிலம் தங்களுக்கு சொந்தமாக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டு எழுதிய உருக்கமான மனுவை அவரது கட்டுரை ஒன்று பதிவு செய்திருக்கிறது.

தஞ்சையில் கீழ்வெண்மணி, கோவில்பத்து, நெய்விளக்கு, வலியநல்லூர், புதுச்சேரி, ஆலத்தம்பாடி போன்ற கிராமங்களுக்கு அம்மா 1969-1971 காலகட்டத்தில் சென்ற போது, ஒவ்வொரு கிராமத்திலும் விவசாய தொழிலாளிகள் தாங்கள் நேசித்த செங்கொடியை அவர்கள் வசித்த பகுதியில் நாட்டுவதற்கு நிகழ்த்திய போராட்டங்களை இந்த கட்டுரைகள் ஆவணப்படுத்துகின்றன. செங்கொடியை ஒரு கிராமத்தில் உயர்த்த முடியாத சூழலிருந்தால், அம்மா அவர்களை கேட்கும் இறுதி கேள்வி, ‘எப்போது மறுபடியும் செங்கொடி இங்கு பறக்கும்?’ என்பதாகவே இருக்கும். இந்தக் கட்டுரைகள் மூலமாக அம்மா மறுபடியும் மறுபடியும் சொல்லுவது இவை வெறும் கூலிக்கான போராட்டங்கள் இல்லை என்றும், தங்கள் தன்மானத்திற்காகவும், அடிப்படை அரசியல் உரிமைகளுக்காகவும் கூலி விவசாய மக்களின் வர்க்கப் போராட்டமாகவே நாம் இவற்றை பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். இந்த அனுபவங்களை அம்மா மறந்தபோதிலும், இந்த எழுத்துக்கள் மூலமாக எனக்குக் கிடைத்த அவரது குரலை என்னால் எப்போதும் மறக்க முடியாது. இதில் பல கட்டுரைகள் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டு ‘ஹாண்டட் பை பையர்’ (Haunted by Fire: Essays on class, caste, exploitation and emancipation) என்ற பெயரில் லெப்ட்வர்ட் (Leftword) பதிப்பகத்தால் 2013-இல் வெளியிடப்பட்டது.
அம்மாவுடன் நான் இரண்டு முறை தான் கீழ்வெண்மணி சென்றிருக்கிறேன். முதல் முறை, அம்மா, அப்பா மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் இருவர் சேர்ந்து ஜனவரி 1992-இல் பொங்கல் தினமன்று கீழ்வெண்மணிக்குச் சென்றோம். இதற்கு பிறகு செப்டம்பர் 2011-இல் உமா சக்ரவர்த்தி என்னும் பெண்ணிய வரலாற்று ஆய்வாளர் அம்மாவை பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்த போது, மறுபடியும் கீழ்வெண்மணி சென்றோம். கீழ்வெண்மணி தியாகிகளின் ஸ்தூபத்தின் அருகே நின்று அந்தப் படுகொலை சம்பவத்தை பற்றி நினைவிழந்து நிற்கும் அம்மாவுக்கு உமா சக்ரவர்த்தி நினைவூட்டிய போது, ‘பாஸ்டர்ட்ஸ்’ (bastards) என்னும் வசை வார்த்தையைக் கோபத்துடன் உச்சரித்தார் அம்மா. அந்த படத்திலும் இது பதிவாகியிருக்கிறது.

அம்மாவின் ஞாபகங்கள் அல்ஸைமரால் அழிக்கப்பட்டப் போதும், அவரது அடிப்படை அடையாளம் அழியவில்லை என்பதை எங்களுக்கு உணர்த்திய இன்னொரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. கியூப புரட்சியின் தலைவர் பிடேல் காஸ்ட்ரோ நவம்பர் 2016-இல் இறந்தபோது, நான் அந்த தகவலை அம்மாவிடம் சொன்னேன். பல நேரங்களில் நான் சொல்லும் விசயங்கள் புரியாமல் அம்மா எந்த எதிர்வினையும் கொடுப்பதில்லை என்ற போதிலும், என்னால் இந்த தகவலை அவருக்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதை நான் சொன்னவுடன், அம்மாவின் கண்களில் நீர் வழிய, கண்களை இறுக்கி மூடி, முகத்தை திருப்பிக் கொண்டு என்னைப் பார்க்க மறுத்துவிட்டார்.

இன்றைய இந்தியாவின் அரசியல் பொருளாதார சூழலைப் பார்க்கும் போது, ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கின்றோமோ என்ற தொய்வும், சோர்வும் பலரைப் போல் எனக்கும் ஏற்படும். நம்மை மீட்டெடுத்து உயிர்ப்பிக்கச் செய்யும் உத்திகளையும், கதைகளையும் தேடுவது அவசியமான ஒன்றாகத் தோன்றும். உர்சுலா கே. ல-கின் (Ursula K. Le Guin) என்னும் அமெரிக்க எழுத்தாளர் தனது அறிவியல் நாவல்களில் முதலாளித்துவம், பெண் அடிமைத்தனம், சர்வாதிகாரம் இவையெல்லாம் இல்லாத மாற்று உலகங்களையும், சமூக உறவுகளையும் கற்பனை செய்திருக்கிறார். ஒரு புத்தகத்தில் புரட்சியைப் பற்றி அவர் சொல்லியிருக்கும் இந்த வரிகள் என்னைத் தாக்கின: “நீ கொடுக்காத ஒன்றை உன்னால் பெற முடியாது, நீ உன்னையே கொடுத்தாக வேண்டும். புரட்சியை உன்னால் விலை கொடுத்து வாங்க முடியாது, செயற்கையாக உருவாக்கவும் முடியாது. நீயே புரட்சியாக இருந்தால் மட்டுமே முடியும். அது உன் அடிமனதில் உள்ளது, இல்லையெனில் வேறு எங்குமேயில்லை”

கேப்டன் லட்சுமி, பாலபாரதியுடன் மைதிலி

(You cannot take what you have not given, and you must give yourself. You cannot buy the Revolution. You cannot make the Revolution. You can only be the Revolution. It is in your spirit, or it is nowhere). இந்த வரிகள் அம்மா வாழ்க்கையின் ஆழத்தையும், அர்த்தத்தையும் எனக்கு உணர்த்துகின்றன.

குடும்பம், குழந்தை, இயக்கம், பொதுவெளி என்பதெற்கெல்லாம் பொதுவாக மனிதர்கள் உருவாக்கும் சுவர்களைத் தகர்த்தெறிந்து வாழ்ந்த என் ‘காம்ரேட் அம்மா’ தனது அடிமனதில் புரட்சியாகவே இருந்திருக்கிறார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேனா என்ற கேள்வியை என்னுள் எப்போதுமே எழுப்பிவருகிறேன். அவர் நினைவுகளை என் நெஞ்சில் சுமக்கும் வரை, எந்த சோர்வையும், தொய்வையும் என்னால் எதிர்கொள்ளமுடியும். இதை விடப் பெரிய பரிசை ஒரு தாய் தன் மகளுக்கு கொடுக்க முடியுமா?

Republished From: https://chakkaram.com/2021/06/09/காம்ரேட்-அம்மா/

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *