தற்கால அரசியலைப் புட்டு வைக்கின்ற இன, மொழி கடந்த இந்த கேலிச்சித்தரம்; சொல்லும் செய்தி என்ன?

  • கணபதி சர்வானந்தா

காணாமல் கடந்து சென்றுவிடலாமென்றுதான் நான் நினைக்கிறேன். “இல்லை, வேண்டாம்” என்று சொல்கிறது மனம். மனதுக்கும், எனக்கும் இடையே பல மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தில், இறுதியில் மனம் வென்றுவிட்டது. அதனால் நான் அந்த விடயம் பற்றிக் கண்டவற்றையும், கேட்டவற்றையும் தவறவிடாது இதில் பதிவிடுகிறேன்.

ஒரு இனத்தை மகிழ்விக்க இன்னுமொரு இனத்தின் உணர்வைப் பலியிடுவதா? ஏற்றுக்கொள்ள முடியாதொன்று. காலாகாலமாய் நடைபெற்று வந்ததொரு நிகழ்வை தற்போது சட் டவிரோதமென்றும், பயங்கரவாதம் என்றும் சட்டத்துறை சொல்லுமாயின் அத்துறைசார்ந்த நடவடிக்கைகளில் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவது தவிர்க்க முடியாததொன்றே.

1948 இல் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை ஜனநாயக வழியில் பேணிப்பாதுகாத்திருப் பார்களேயானால், இலங்கை பெரியதொரு வளர்ச்சியடைந்த நாடாக இன்று இருந்திருக்க வேண்டும்? ஆனால், இன்றும் இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டதொரு நாடாக, மொழி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டதொரு நாடாக, மதரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டதொரு நாடாக மட்டுமல்லாது, போர்க் குற்றத்தை மேற்கொண்ட நாடாகவும் உலக மக்களால் பார்க்கப் படுவதையிட்டு யார்தான் பெருமைகொள்ள முடியும் ? மனச்சாட்சியுள்ள, மனித நேயமுள்ள எவரும் இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்பதற்குப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பல கேலிச் சித்திரகாரர்களினதும், கருத்தோவியர்களினதும் கோட்டோவியங்கள் சான்றாகின்றன. தென்னிலங்கை ஊடகங்கள் , பல நிகழ்கால மற்றும் எதிர்கால அரசியல் கள நிலவரங்களை நகைச்சுவையோடு மட்டுமல்லாமல் மிகவும் ஆழமான கருத்துக்களோடும் வெளிக்கொண்டுவரும் அவர்களது படைப்புகளைத் தினமும் பிரசுரித்து வருகின்றன.

அச்சு ஊடகப் பரப்புகளுக்கு அப்பால், அரச தலைவர்களையும், அவர்களைச் சூழ உள்ள அரசியல்வாதிகளையும், அவர்கள் நடவடிக்கைகளையும் கேலிச் சித்திரமாகப் பலர் வரைந்தவண்ணமுள்ளனர். பல காத்திரமான , அர்த்த புஷ்டியுள்ள , பார்த்தால் சம்பந்தப்பட்டவர்களே வெட்கித் தலை குனியக் கூடிய அளவுக்கு ஆழமான கருத்துகள் பொதிந்தவையாக அந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.அத்துடன் சமூக வலைத் தளங்களிலே அவை அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இன,மத,மொழி கடந்து அவைகள் பல விடயங்களை மிகவும் நேர்மையாகப் பேசுகின்றன. அரச அவையில் இருந்து கொண்டு 13ஐ நீக்க வேண்டும், மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் என்று காலை, மாலை என்று பாராது கர்ச்சிக் கொண்டிருக்கும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பற்றி பிரபல கருத்தோவியரும், கேலிச்சித்திரகாரருமான அவந்த ஆட்டிகல ஒரு கேலிச் சித்திரத்தை வரைந்திருக்கிறார். மிகவும் இரசிக்கக் கூடியதுமட்டுமல்ல, அதிலிருந்து மிகவும் எளிமையாக ஒரு சர்வதேச அரசியலைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் இருந்து இலங்கை விலமுடியாது என்றதொரு உண்மையை அந்தக் கேலிச்சித்திரம் வெகு அழகாக முன்வைக்கிறது.

அந்தக் கேலிச் சித்திரத்தில் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை ஒரு அரச காலத்துப் போர்வீரனாக , கையில் வாளுடனும், கேடயத்துடனும் இரு கட்டங்களாக வரைந்திருக்கிறார் ஓவியர். தற்கால அரசியல் சூழலில் தன்னை ஒரு அரச பாதுகாவலனாகவும், அதீத இன,மதப் பற்றாளனாகவும், ஜனாதிபதியின் அதி உயர்ந்த விசுவாசியாகவும் காட்ட முனைந்து, சட்டத் திருத்தங்கள் பற்றியும், சட்ட வரைபுகள் பற்றியும், 13,18,19, 20 கள் பற்றியும் அளவு கடந்து மட்டுமல்லாமல், எல்லை கடந்தும் பேசிவருவதோடு ஊடகங்களுக்குத் தொடர்ச்சியாக எதையாவது சொல்லி உணவளித்தும் வருபவருமான ரியர் அட்மிரல் அவர்களின் அரசியல் அறியாமையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுவதாக அந்தக் கேலி சித்திரம் காணப்படுகிறது.

முதலாவது சித்திரத்திலே அவரை முன் சொன்னது போல ஒரு அரச காலத்துப் போர்வீரனாகச் சித்திரித்து “மாகாண சபைகள் வேண்டாம்” என்று கோஷமிட்டுக் கொண்டு செல்வதாக வரைந்திருக்கிறார் ஓவியர் . இரண்டாவது சித்திரத்திலே அவர் பின் குதிக்காலில் அம்பு பட்டு வீழ்ந்து கிடந்து கொண்டு காலைப்பாக்கிறார், காலில் குத்திக் கொண்டு நிற்கும் அம்பில் “இந்தியாவ” என்று எழுதப்பட்டிருக்கிறது.

இந்து சமுத்திரப் பிராந்திய அரசியலில் தன்னைத் தொடர்ந்தும் முக்கியமாக வைத்திருக்க விரும்பும் இந்தியா, திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல இனவாதிகளால் சுட்டிக்காட்டப்படும் 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது அல்லது ஒழித்துக் கட்டுவது என்ற விடயத்தை ஒரு போதும் விரும்பாது என்று மறைமுகமாகச் சொல்லியதோடு மட்டுமல்லாது “மகனே இந்த விடயத்தில் நீ மௌனம் காப்பதே சிறந்தது.” என்று சொல்லி இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாமா?

தற்கால அரசியலைப் புட்டு வைக்கின்றதொரு கேலிச்சித்தரமாகவே நான் இதனைப் பார்க்கிறேன். ஒரு பாரிய, முழுப்பக்கத்தில் எழுதப்பட வேண்டிய அரசியல் கருத்தை, அதுவும் ஜே.ஆர் காலம் தொட்டுப் பலவிடயங்களை இலங்கைக்கும், சர்வதேசத்துக்கும் ஞாகப்படுத்தக் கூடிய அரசியலை, இன்னும் அயல் உலக அரசியலுக்குள் மாட்டிக் கொண்டு களர முடியாது தவிக்கும் இலங்கை அரசியலை, இந்து சமுத்திரப் பிராந்தி அரசியலுக்குள் தன்னிசையாக ஆதிக்கம் செலுத்த விழைகின்ற, அதற்குள்ளால் இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையும் அச்சுறுத்த முனைகின்ற சீனாவுக்கும் எச்சரிக்கை விடுவதாகவும், பல விடயங்களைக் குறியீட்டுத் தோறணையில் , சில கோடுகள் மூலம் ஓவியர் வெளிக்கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது. எப்பொழுதும் அவந்த ஆட்டிகலையின் ஓவியங்கள் சிறப்புமிக்கதோடு ஆழமானவையும் கூட.

From: http://thinakkural.lk/article/72852

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *