இன்றைய காலத்திற்கான ஜனநாயகத்தை உருவாக்குதல் ராஜினி திரணகம நினைவு தின உரையாடல்

ராஜினி திரணகம அவர்களின் 31 ஆவது நினைவு தினம் யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மண்டபத்தில் நேற்று (25.09.2020) நடைபெற்றது. ராஜினி திரணகம பெண்ணியல்வாதியாகவும், பல்கலைக்கழக ஆசிரியராகவும், மனித உரிமைகளுக்காக குரல்கொடுத்த ஒருவராகவும் இருந்தார். 1989 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவே சுட்டுக்கொல்லப்பட்டார்.

ராஜினி திரணகம் ஞாபகார்த்த குழுவினரும் சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரும் இணைந்து இந்த நினைவு தினத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்றைய காலத்திற்கான ஜனநாயகத்தை உருவாக்குதல் என்ற கருப்பொருளிலே உரையாடல் இடம்பெற்றது.
பேராசிரியர் தீபிகா உடகம, தயாபால திரணகம, பேராசிரியர் சாந்தா குமார் ஆகிய மூவரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்த நினைவு தின நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திய மகேந்திரன் திருவரங்கன் தனது தலைமை உரையில் தேர்தல் மூலமாக பெறப்படுகின்ற ஜனநாயம் சில சமயம் மக்கள் மத்தியிலே பிளவுகளையும், சமூகங்கள் தூரப்பட்டு போவதையும் ஒருவிதமான எதேச்சாதிகாரம் உருவாவதற்கும் வழிவகுக்கின்ற ஒரு போக்கை நாங்கள் அவதானிக்கிறோம்.

இப்போது கூட 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியிடத்தில் அதிகாரங்கள் குவிக்கப்படுவற்கான சந்தர்ப்பங்கள் தான் அதிகளவிலே இருக்கின்றன. இந்த நாட்டிலே ஏற்கனவே நிர்வாகத்திற்கு உதவியாவிருந்த பல்வேறு கொமிசன்களின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதைவிட மக்கள் மத்தியிலே பிளவுகள் வளர்த்தெடுக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தினர் கூடியளவிலான தாக்குதல்களை எதிர்கொண்டுகொண்டிருக்கிறார்கள்

இவ்வாறான ஒரு சூழலிலே எவ்வாறான ஒரு ஜனநாயகம் தேவை என்று சிந்திக்கும் போது அந்த ஜனநாயகம் வேறுபட்ட மட்டங்களில் இருக்க வேண்டுமென்பது முக்கியம். பிளவுபட்டிருக்கின்ற மக்களை ஒன்றுபடுத்துகின்ற ஒரு ஜனநாயகமாக இருக்க வேண்டும். சகவாழ்வையும் பன்மைத்துவத்தையும் மதிக்கின்ற ஒரு ஜனநாயகமாக இருக்க வேண்டும். அது சுயாதீனமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்ற ஒரு ஜனநாயகமாக இருக்க வேண்டும். அதே நேரத்திலே சமூக நீதிக்கான சகவாழ்வுக்கான மக்களுடைய போராட்டங்களுக்கு உதவக்கூடிய ஒரு ஜனநாயகமாக இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு ஜனநாயகத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இன்றைக்கு நாங்கள் ஒன்று கூடியிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

நினனவு தின நிகழ்வில் உரையாற்றிய தயாபால திரணகம அவர்களின் ஆங்கில உரையை மகேந்திரன் திருவரங்கன் தமிழில் மொழிபெயர்த்தார். அந்த உரை முழுமையாக இங்கு தரப்படுகிறது.

ராஜினி 31 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்ட போது அவருக்கு 2 மகள்கள் இருந்தார்கள் ஒருவருக்கு 11 வயது மற்றவருக்கு 9 வயது அந்த இழப்பினை நானும் எனது மகள்களும் மிகவும் துயரமான ஒரு சூழ்;நிலையாக எதிர்கொண்டோம். இரண்டு மகள்களும் வாழ்க்கையில் முன்னேறி வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கான உறுதியான அடித்தளத்தை ராஜினி ஏற்கனவே கொடுத்துவிட்டார். அதனால் அவர்களை வளர்த்தெடுப்பதில் எனக்கு பிரச்சினை இருக்கவில்லை. ஆனாலும் அந்த இரண்டு மகள்களும் ஒரு தாயை இழந்த நிலையில் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தார்கள் அதை நான் உணர்ந்தேன்.

இன்றைய காலத்தில் நாங்கள் ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது முக்கியமானதாகும். ஏனென்றால் எங்களுடைய நாட்டிலே ஜனநாயகம் ஒரு பெரிய சவாலினை எதிர்கொண்டிருக்கிறது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் அறிவிக்கப்படப்போகிறது. இந்த 20 ஆவது திருத்தம் நாட்டை 3 தசாப்தங்களுக்க பின்னோக்கி இழுத்துச் செல்லப்போகின்ற திருத்தமாக இது அமைகின்றது. ஜனநாயகம் என்று சொல்லுகின்ற போது அங்கே அரசியல் செயற்பாடுகள் இருக்கின்றன, அரசியல் கருத்தியல்கள் இருக்கின்றன அதே மாதிரி அரசியல் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த 20 ஆவது திருத்தம் அரசியல் நிறுவனங்களுக்கு, அரசியல் செயற்பாடுகளுக்கு, அரசியல் கருத்தாடல்களுக்கு எல்லாவற்றுக்குமே அபாயமான ஒரு நிலைமையை ஏற்படுத்தப் போகின்ற ஒன்றாக இருக்கிறது.

இவ்வாறான ஒரு நிலைமைக்கு நாங்கள் எவ்வாறு வந்தோம் என்பதை பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. அவர்கள் விரும்பினால் எந்தச் சட்டத்தையும் கொண்டுவரலாம். புதிய அரசியலமைப்பை கூட அவர்கள் உருவாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். 20 ஆவது திருத்தமே இவ்வளவு மோசமாக இருந்தால் புதிய அரசியல் அமைப்பு எப்படியிருக்கப்போகின்றது என்ற கேள்வியும் இங்கு முன்ளெழுகிறது.

இப்பொழுது இருக்கின்ற அரசியல் சக்தியை பார்த்தால் அது ஒரு சிங்கள பௌத்தத்தை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் சக்தியாக ஒரு ஆதிக்க சக்தியாக உருவாகியிருக்கிறது. அது ஒரு சிங்கள் பௌ;த்த அரசொன்றை அமைப்பதற்கான திசையில் தான் அது போய்க்கொண்டிருக்கிறது. இன்று நாங்கள் பார்த்தால் இடதுசாரி போன்ற கருத்தியல் வேறுபாடுகள் கூட எல்லா வேறுபாடுகளும் கூட இந்த சிங்கள பௌத்தத்தை மையமாக கொண்ட புதிய கட்டமைப்புக்கு உள்ளுக்கே இருக்கிற மாதிரிதான் அது இருக்கிறது.இவ்வாறான நிலமை எப்படி எங்களுக்கு வந்தது எனபது பற்றி நாங்கள் பார்த்தால் இலங்கையின் சுதந்திரம் பெற்றதற்கு பிற்பட்ட காலத்தில் இடம்பெற்ற சில முக்கியமான விடயங்களை நாங்கள் சொல்ல வேண்டும் சுதந்திரம் பெற்ற உடனேயே சுதந்திரம் பெற்ற உடனேயே மலையகத் தமிழ் மக்களுக்க பிரஜா உரிமை மறுக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டிலே சிங்களம் மட்டும் என்ற மொழி சட்டம் கொண்டுவரப்பட்டது. 1976 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சரத்து உள்ளடக்கப்பட்டது. இப்பொழுது பௌத்த துறவிகளின் நிலையை பார்த்தால் சிங்கள பௌத்த அரசை அமைப்பதற்கான ஒர நிலைமையை நெருங்கி வந்துவிட்டோம் என்று உணருகின்ற மேலாதிக்க நிலைமையைத்தான் இன்று காண்கிறோம்.

அதேநேரம் 1986, 87, 89 இல் நடைபெற்ற சில சம்பவங்களையும் நாங்கள் இங்கு மீட்டி பார்க்க வேண்டியது அவசியம் 13 ஆவது திருத்தச்சட்டம் மூலமாக அதிகாரப் பரவலாக்கல் கொண்டுவரப்பட்ட போது அதனை ஜேவிபி யினர் எதிர்த்தார்கள் இப்பொழுது அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கலை இல்லாமல் செய்யப் போகிறோம் நிறுத்தப் போகிறோம் என்று சொல்லுகின்ற போது அதற்கும் ஜேவிபி யினர் அதற்கு ஆதரவு அளிப்பது போன்றே இப்போதும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு சிறுபான்மை மக்களை ஒதுக்கி சிங்கள பௌத்தர்கள் மட்டும் என்று இந்த நாட்டை கட்டியமைக்கின்ற ஒரு செயற்பாடு எந்தவகையில் ஜனநாயகமாக இருக்கும். 13 ஆவது திருத்தச்சட்டத்தையும், அதிகாரப்பரவலாக்கலையும் இல்லாமற் செய்கின்ற போது ஏனைய தேசிய இனங்களுக்கு அல்லது சமூகங்களுக்கு இந்த நாட்டில் என்ன விதமான பாதுகாப்பு இருக்கிறது. இவ்வாறான செயன்முறைகளை நடைபெற்றுக்;கொண்டிருக்கிற இந்தக் காலத்திலே எவ்வாறு நாங்கள் மீளவும் ஜனநாயகத்தை தொடங்கலாம் என்ற கேள்வி தற்போது எங்களுக்கு முன் இருக்கிறது.

1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரங்களுக்கு பின்னர் இடதுசாரி புத்தி ஜீவியான நியுட்டன் குணசிங்க ஒரு கருத்தை முன்வைத்தார் இலங்கையிலே இருக்கின்ற எல்லாப்பிரச்சினைகளையும் மேவிச்செல்கின்ற ஒரு எல்லாவற்றுக்கும் மேலாக தீர்மானிக்கின்ற ஒரு பிரச்சினையாக தேசிய இனப்பிரச்சினை இருக்கிறது என்று சொன்னார். இன்றும் கூட நாங்கள் பார்த்தால் இந்த பிரச்சினைதான் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இன்று இடதுசாரி வலதுசாரி என்று எந்த வேறுபாடும் இல்லை. சிங்கள பௌத்த தேசியவாத்த்தை எதிர்கொள்வதற்கு ஒரு இடதுசாரி கட்சி கூட தென்னிலங்கையில் இல்லாதிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு வடக்கு கிழக்கிலே கூடஒரு சக்தி இல்லாதிருக்கிறது நாங்கள் இந்த தேசியவாதத்தை ஒரு வன்முறை மூலம்தான் எதிர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை அது சரிவராது ஒரு அமைதியான முறையில் தான் இந்த எதிர்ப்பு வெளிப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், எந்தவிதமான மாற்றமும் எங்களுடைய வாழ்க்கை காலத்தில் வரும்போன்று தெரியவில்லை. இன்று நாங்கள் தென்னிலங்கையில் இருக்கின்ற நிலைமையை எடுத்துப் பார்த்தால் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் ஒரு வெறித்தனமான முறையிலே தான் தங்களுடைய அரசியலை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு அந்த சமூகத்திலே இருக்கின்ற புத்திஜீவிகளின் ஆதரவும் கூட இருக்கிறது. ஏனைய சமூகங்களை அடக்கி அதன் மூலம் ஜனநாயகத்தை கட்டுப்படுத்தி சிங்கள பௌத்தத்தை முன்னுரிமைப்படுத்துவதற்கான ஒரு நிகழ்வுதான் நடைபெறுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இருக்கின்ற அதிகாரப்பரவலாக்கலை திருப்பி எடுத்துவிட்டால் இங்கு சிறுபான்மை மக்களுக்கு வேறு என்ன இருக்கப்போகிறது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

இன்று இருக்கின்ற அச்சுறுத்தல் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலொன்று ஏற்பட்டிருக்கிறது. மக்கள் த்ஙகளுடைய கருத்துக்களை சொல்வதற்கான சூழ்நிலை இல்லை மக்கள் மாற்றுக்கருத்துக்களை வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மக்கள் உயிர்வாழ்வதற்கான உரிமை கூட இன்று அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது. ராஜினி திரணகம வாழ்வதற்கான உரிமைக்காகத்தான் குரல்கொடுத்தார். அந்தக் குரலை கொடுத்ததற்காக அவரே தன்னுடைய வாழ்க்கையை இழக்க வேண்டி வந்தது.
இன்று நாட்டிலே நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை பார்த்தால் பாதாள உலக கோஷ்டியினர் என்று சொல்லப்படுபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்யப்படுகிறார்கள் இவ்வாறான ஒரு காலாசாரம் இப்போது உருவாகி வருகின்றது இந்தச் சந்தர்ப்பத்திலே சுருங்கி வருகின்ற ஜனாநாயகத்திற்கான இடைவெளியை விரிவுபடுத்த வேண்டிய தேவை இன்றிருக்கிறது. அதற்காக போராட வேண்டிய தேவை இருக்கிறது. ஜனநாயகத்தை நாங்கள் இழப்பதன் மூலமாக ஒரு சிங்கள பௌத்த அரசுதான் இங்கு உருவாகப் போகிறது அந்த அரசு தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும் வெளியே தள்ளுகின்ற ஒரு அரசாகத்தான் அந்த அரசு அமையப்போகின்றது. ஆகவே, நாங்கள் ஜனநாயகத்துக்கான ஒரு போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் ஆனால், இந்த போராட்டத்தில் நாங்கள் பலர் எங்களுடைய சுதந்திரங்களை இழக்க நேரிடலாம், உயிர்களை இழக்க நேரிடலாம் ஆனால் அவ்வாறான ஒரு போராட்டம் தான் இப்போது எங்களுக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது.

From: http://sdptnews.org/2020/09/27/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be/?fbclid=IwAR3mRkTbq-n9860hRR88uROPWoyrQ7BjhdSMI8G6hxxb2w70I7QRtBYhm90

Related posts

Leave a Comment