மக்களுக்கான குறிப்புக்கள்: நான்கு தரப்புப் பொறி

சிறி லங்கா வெகுஜன முன்னணியிலான கூட்டரசாங்கம் எம்.சி.சி.(MCC) உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பாக 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அறிவித்த தனது நிலைப்பாட்டிலிருந்து 180 பாகை திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளது. 20வது திருத்தத்தின் உள் நிர்வாகம் தொடர்பான முக்கிய பிரச்சனைகள் பற்றி பல விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருந்த போதிலும் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் எம்.சி.சி. உடனான அதன் சாத்தியமான இணைப்பு பற்றிப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். எம்.சி.சி ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னுள்ள தடைகளை அகற்றுவதே 20வது திருத்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். 20வது திருத்தம், அரசியலமைப்பைப் பாவித்து சர்வாதிகாரப் பாதையைப் பலப்படுத்தும். இது ஒரு நீண்ட கால செயற்பாடு என்பது காலம் தாழ்த்தியேனும் பல பார்வையாளர்களால் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

கலாநிதி என்.எம்.பெரேரா. அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒரு ஸ்திரமான அரசாங்கம் தேவை என்பதனால் சர்வாதிகாரப் பாதை நியாயப்படுத்தப்படுகிறது. பரவலான இக் கருத்துக்கு ஆதரவாக  வாதங்களையோ அன்றி சாட்சியத்தையோ சேர்க்க நான் விரும்பவில்லை. ஆயினும் 20வது திருத்தத்தின் நோக்கம் அதனை விட அதிகமென்பதே எனது வாதமாகும்.

சீனாவிக்கு எதிராக நான்கு தரப்புகள்


20வது திருத்தத்திற்கும் எம்.சி.சி.க்கும் இடையிலான உறவை முன்னிலையில் வைத்து அதன் ஊடாக அண்மைக் காலமாக வளர்ந்து வரும் இந்து சமுத்திரப் பிராந்தியக்(Indian Ocean Region) கட்டமைப்பின்(ஐ.ஓ.ஆர்.)(IOR) போக்குகளை பகுப்பாய்ந்து புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ரொபேட் கப்லானின்(Robert Kaplan) ‘மழைக்காலம் – எதிர்காலத்தில் அமெரிக்காவின் பலமும் இந்து மகா சமுத்திரமும்’ என்பதில் “ஆபிரிக்க முனை முதல் கிழக்கு நோக்கி அரேபிய வளைகுடா, மற்றும் இந்திய துணைக் கண்டம் ஈரானிய பீடபூமி,  இந்தோனேசியத் தீவுக் கூட்டம் வரை அதற்கு அப்பாலும் நீண்டிருக்கும் பாரிய இந்து மகா சமுத்திரப் பிராந்தியம் பூகோள மோதல்களின் மையமாக விளங்கும். ஏனெனில் பெருமளவு சர்வதேச வர்த்தக விநியோகம் இந்தப் பாதையில் தான் உள்ளது. இவற்றை விட முக்கியமானது இந்தப் பிராந்தியத்தில் தான் இந்திய சீன அமெரிக்க நலன்கள் செல்வாக்குகள் ஒன்றை ஒன்று குறுக்கீடு செய்யத் தொடங்கியுள்ளமையே.


இங்கே தான் 21ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சக்தி இயக்கவியல் வெளிப்படுத்தப் படும். இந்தியாவும் சீனாவும் இப் பிராந்தியத்தின் பிரதான வீரர்கள். இந்தியா கிழக்கும் மேற்கும் நகரும் வேளை சீனா தெற்கு செல்கிறது”.  இருப்பினும்,  ஐ.ஓ.ஆர். அந்த மூன்று சக்திகளுக்கு மட்டும் முக்கியமான தொன்றல்ல. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பயன்படுத்தப் படும் பெரும்பாலான மூலப் பொருட்கள் ஐ.ஓ.ஆரிலிருந்தே பெற்றுக் கொள்ளப்படுகின்றன. ஐ.ஓ.ஆரின் முக்கியத்துவத்தையும் அதில் மோதல்கள் எழுவதற்கான சாத்தியங்களையும் முன்னுணர்ந்தே சிறிமாவோ பண்டாரநாயக்க சர்வதேச சமூகத்திடம் இந்து மகா சமுத்திரத்தை சமாதானப் பிராந்தியமாக்க முன் மொழிந்தார். இப் பிராந்தியம் ஏற்படுத்திய ஆர்வத்தால் போட்டி போடும் சக்தி வாய்ந்த நாடுகளின் காலடியின் தாக்கம் கணிசமானளவு அப்பகுதியில் உள்ள சிறிய நாடுகளின் மீது பதிகிறது” 


ஐ.ஓ.ஆர். போட்டியிடும் சக்திகள்


ஐ.ஓ.ஆரில் போட்டியிடும் சக்திகளில் ஒன்று இந்தியா. எனவே ஐ.ஓ.ஆரில் ஒரு கைப்பிடிப்புக்கு கண் வைக்கும் சக்திகள் இந்தியாவின் நிலைக்கு தக்கபடியே அதனை அணுக வேண்டும். வளர்ந்து வரும் வல்லரசான சீனா அபிவிருத்தி வளங்கள் தொடர்பாக ஐ.ஓ.ஆரில் உள்ள நாடுகளுடன் உடன்படிக்கை செய்து வருவது இரண்டாவது முக்கிய விடயமாகும். இந்த ஆர்வம் இந்தியாவுக்கான பிராந்திய அச்சுறுத்தலாகச் சித்தரிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் எல்லைப் பிரச்சனை அதனை ஓரளவு நியாயப்படுத்துகிறது. நன்கறியப்பட்ட விளக்கங்களில் ஒன்று சீனா அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘முத்து மாலை மூலோபாயத்தைச்’ சுற்றி இழைக்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.ஆரில் சீனாவின் மூலோபாயம் பற்றிய இந்த வாசகம் முதன் முதலாக அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் பூஸ் அலென் கமில்டன்(Booz Allen Kamilton) என்பவராலேயே பாவிக்கப்பட்டது. “முத்து மாலை மூலோபாயம் என்பது இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்தில் சாத்தியமான சீன நோக்கங்களைப் பற்றிய புவிசார் அரசியல் கோட்பாடு ஆகும். இது சீன பெரு நிலப்பரப்பு முதல் சூடான் துறைமுகம் வரையுள்ள கடல் வழித் தொடர்புகளுடான சீனாவின் இராணுவ வர்த்தக வசதிகளையும் உறவுகளையும் உள்ளடக்கிய வலையமைப்பைக் குறிப்பிடுகிறது. 


தன்னுடைய சுற்றுப் புறத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியும் தூய்மையான ஆர்வம் இந்தியாவுக்கு இருப்பதாகத் தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன். தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு உரிமை உண்டு என்றும் நான் கருதுகிறேன். எனவே தங்களது நாடுகளின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் விதத்தில் தங்களது நாட்டின் நிலப்பரப்புக்களை அந்நிய சக்திகள் பாவிப்பதற்கு அனுமதிப்பதில்லை என இரு நாடுகளுக்கிடையிலான ஒரு பரஸ்பர புரிந்துணர்வை இலங்கையும் இந்தியாவும் கொண்டிருக்க வேண்டும். 

நான்கு முனைகள்


இப்போது நடப்பது வேறு. சீனாவிடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தலை எதிர் கொள்ள அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவுடன் ஒரு புதிய கூட்டணியை உருவாக்குகிறது. இந்த நான்கு தரப்புக் கூட்டணி ஆசிய-பசுபிக் ன்ற ஒரு புது வெளியைக் கண்டு பிடித்துள்ளது. அது தெற்கு பசுபிக் மோதல்களில் இந்தியாவுக்கும் இந்து மகா சமுத்திரத்தில் யப்பானுக்கும் ஒவ்வொரு பாத்திரம் உண்டு என்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கிறது. இதனை  ஆதரிக்கும் படி  இலங்கையை இந்த நான்கு தரப்புக் கூட்டணி வேண்டுகிறது. அதற்காக எம்.சி.சி.(MCC),  ஏ.சி.எஸ்.ஏ.(ACSA) மற்றும் எஸ்.ஓ.எவ்.ஏ.(SOFA) ஆகியவற்றை அமெரிக்கா வடிவமைத்துள்ளது. அதனுடைய விளைவு இலங்கைக்கு பேரழிவைத் தரும். அது ஒரு ஆபத்தான பொறியாக அமையும்.


நான்கு தரப்புக் கூட்டணியினர் பொருளாதார முயற்சிகளின் வடிவத்திலோ அல்லது ஆயுதங்கள் ஏந்திய இராணுவ வீரர்களின் நேரடித் தலையிடாகவோ தங்கள் அதிகார மையங்களை ஸ்தாபித்துக் கொள்வதை அனுமதிக்கும் வகையில் அணிசேரா வெளியுறவுக் கொள்கையிலிருந்து படிப்படியாக நாம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம். 20வது திருத்தத்தின் இந்த அம்சம் தீவிரமாக கருத்தில் கொள்ளப்படவில்லை. ஏனெனில் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் சில கட்சிகள் எம்.சி.சி.க்கு ஆதரவாக உள்ளன.

சுமனசிறி லியனகே

ஓய்வு பெற்ற ஆசிரியர்

அரசியல் பொருளாதாரம்

பேராதனைப் பல்கலைக் கழகம்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *