ஊடகவியலாளர் மீதான குற்றங்களுக்கான ‘தண்டனை விலக்கு’ இனிமேலும் தொடரத்தான் போகின்றதா?

Bharati November 2, 2020 Thinakkural

“ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதிவழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்தினதும் பொறுப்பாக இருந்தாலும், இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒரு குற்றத்துக்குக் கூட, இதுவரையில் நீதி வழங்கப்படாத வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டில் வாழவேண்டிய நிலை உள்ளது” ஊடக சுதந்திர அமைப்பு தெரிவித்திருப்பது முற்று முழுதாக உண்மையாகவே இருக்கின்றது.

இன்று நவம்பர் 2 ஆம் திகதி ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் முக்கியமான ஒரு தினம். “ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்” இன்று. (The International Day to End Impunity for Crimes against Journalists) இது ஐ.நா. சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு தினம். கடமையின் போது கொல்லப்படும் ஊடகவியலாளர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு தினம். 

இதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே சுதந்திர ஊடக இயக்கம் மேற்படி கருத்தைத் தெரிவித்திருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டது முதல் 40 வரையிலான ஊடகவியலாளர்களின் உயிர்கள் கடமையின் போது பறிக்கப்பட்டிருக்கின்றது. உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்துவதுதான் ஊடகவியலாளர்களின் பிரதான பணி. அந்தப் பணியைச் செய்யப்போய் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள்தான் இந்தப் பத்திரிகையாளர்கள்.

கொல்லப்பட்டவர்களில் 3 அல்லது 4 பேரைத் தவிர ஏனைய அனைவருமே தமிழ் ஊடகவியலாளர்கள்தான். அந்த எண்ணிக்கைகூட, முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கின்றது. இலங்கையில் மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்த போரின் விளைவுகளில் ஒன்றாக அதனையும் பார்க்கலாம். போரில் முதலாவதாகக் கொல்லப்படுவது உண்மை என்பார்கள். ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டதும் உண்மையைக் கொல்வதற்காகத்தான்.

‘சன்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க பட்டப்பகலில் நடுவீதியில் வைத்துக் கொல்லப்பட்டமை, பிரகீத் எக்னெலியகொட காணாமலாக்கப்பட்டமை என்பன கூட ஏதாவது ஒரு வகையில் போருடன் தொடர்புபட்டதாகவே இருந்தன.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீள விசாரணைக்குள்ளாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் 2015 இல் அதிகாரத்தைக் கைப்பற்றிய “நல்லாட்சி” அரசாங்கம், இந்த இரண்டு ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பாகவே விசாரணைகளை மீள ஆரம்பித்திருந்தது. அது கூட ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டுவதற்கு முன்னதாக நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது கோவைகள் மூட்டை கட்டி வைக்கப்பட்டுவிட்டன. குற்றம் புரிந்தவர்கள் தண்டனை விலக்கைப் பெற்றுக்கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ் ஊடகவியலாளர்களே கடந்த காலத்தில் அதிகளவுக்குக் கொல்லப்பட்டிருக்கின்ற போதிலும், அது குறித்த மீள்விசாரணை ஒன்றுக்கு “நல்லாட்சி” தயாரகவிருக்கவில்லை. மீள்விசாரணையை ஆரம்பிப்பதில் கூட இனப்பாகுபாடு காணப்பட்டது.

தமிழ் ஊடகவியலாளர்கள் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களாகக் காட்டப்பட்டிருந்தார்கள். அது குறித்த விசாரணைகளை ஆரம்பிப்பது சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியில் தமக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் நல்லாட்சிக்கு. அது தமிழ் ஊடகவியலாளர்கள் மீது குற்றப்புரிந்தவர்கள் தண்டனை விலக்கைப் பெறுவதற்கு காரணமாகியது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் முன்வைக்கப்படலாம். ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புக்கள் அதனை வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிடலாம். கொல்லப்பட்ட – காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரலாம்.

ஆனால், தற்போதைய நிலையில் இதனால் ஏற்படப்போகும் மாற்றம் என்னவாக இருக்கும்?

தற்போதைய அரசாங்கம் இதுபோன்ற கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காது எனக் கூறுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக சுதந்திர ஊடக அமைப்பு சுட்டிக்காட்டியிருப்பதைப்போல, தற்போதைய அரசாங்கத்தில் இருக்கும் முக்கியஸ்த்தர்கள் அதிகாரத்தில் இருக்கும் காலத்தில்தான் ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகளவுக்கு இடம்பெற்றிருந்தன. இரண்டாவதாக, அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டம் நீதிபதிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் நியமிப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கின்றது.

மீள்விசாரணை ஒன்று நடைபெறுமா என்ற கேள்வியை மட்டுமன்றி, அவ்வாறு நடைபெறக்கூடிய விசாரணை ஒன்று நீதியானதாகவும், நியாயமானதாகவும் இருக்குமா என்ற கேள்வியையும் இது எழுப்புகின்றது.

ஊடகவியலாளர்கள் மீதான குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாவும் பெருமளவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. கடந்த கால அரசாங்கங்கள் இந்த அழுத்தங்களை எதிர்கொள்வதற்காக முன்னெடுத்த விசாரணைகள் வெறும் கண்துடைப்பாகவே இருந்துள்ளன. தற்போதைய அரசாங்கத்தில் அதனைக்கூட எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.

ஊடக சுதந்திரத்துக்காகக் குரல்கொடுக்கும் அமைப்புக்கள் இதற்காக சும்மா இருந்துவிடமுடியாது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாவும் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். மக்கள் மத்தியிலும் இது குறித்த விழிப்புணர்வு உருவாக்கப்படவேண்டும். எதிர்காலத்திலும் இவ்வாறான ஒரு நிலை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஊடகங்கள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்றாக இதுவும் உள்ளது.

  • ஆசிரியர்

Republished From: https://thinakkural.lk/article/85241

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *