விவசாயிகள் போராட்டம்: பெண்கள் மூட்டும் போராட்டத் தீ

ரலாறு நெடுகிலும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களுடன் மக்களுக்கான, நிலத்துக்கான, இயற்கைக்கான, சுற்றுச்சூழலுக்கான போராட்டங்களையும் சேர்த்தே நடத்தி வந்திருக்கிறார்கள். இந்தியப் பெண்கள் சட்டென்று வெளியே வரமாட்டார்கள். களத்தில் இறங்கிவிட்டாலோ, எளிதில் பின்வாங்க மாட்டார்கள் என்பதையே வரலாறு காட்டுகிறது.

சமீபகாலமாக அரசை எதிர்த்து வீதிக்கு வந்து போராட வேண்டிய சூழல் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். டெல்லியில் சிறிய அளவில் பெண்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம், இரவு பகல் பாராமல் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் போராட்டமாக விஸ்வரூபம் எடுத்தது.

அதேபோன்றதொரு போராட்டத்தில்தான் இப்போதும் பெண்கள் இறங்கியிருக்கிறார்கள். வேளாண் திருத்த மசோதாவைக் கைவிடச் சொல்லி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் டெல்லியில் திரண்டு போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்தப் போராட்டங்களில் கணிசமான அளவில் பெண்களும் கலந்துகொண்டு முழங்கிவருகிறார்கள்.

பெரும்பாலான பெண்கள் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். டிசம்பர் கடுங்குளிரில் உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் மூட்டைக் கட்டிக்கொண்டு, நீண்ட தூரம் பயணித்து வந்திருக்கின்றனர். திறந்தவெளியில் கூடாரம் அமைத்து, போராட்டங்களை நடத்திவருகிறார்கள். ஆறு மாதங்களுக்குப் போராட்டம் நீடித்தாலும் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு தயாராகவே வந்திருக்கிறோம் என்கிறார்கள். வேளாண் மசோதாவைத் திரும்பப் பெறும்வரை நாங்கள் ஓயப் போவதில்லை. எதிர்காலச் சந்ததியினருக்கு உரிமைகளை மீட்டுக்கொடுக்கும் இந்தப் போராட்டத்தில் எங்கள் உயிர் போனாலும், அதைப் பெருமையாகவே கருதுவோம் என்று சொல்லும் இந்தப் பெண்களின் உறுதியைக் கண்டு உலகமே வியக்கிறது.

Irom sharmila

அஹிம்சை வழியில் ‘உண்ணா விரத’த்தை மிகப்பெரிய போராட்ட வடிவமாக உலகத்துக்குக் காட்டியவர் காந்தி. காந்தியின் ‘உண்ணா விரதப் போராட்டத்தை’ நீண்ட காலம் நடத்திக் காட்டியவரும் ஒரு பெண்தான்! 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய ஐரோம் ஷர்மிளாவைப் (Irom sharmila) போல் உலகில் இன்னொருவர் இல்லை. இத்தகைய மன உறுதி கொண்ட பெண்கள் அதிக அளவில் போராட்டங்களில் பங்கேற்கும்போது மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். இதே பின்னணியில்தான் நம் விவசாயப் போராளிகளும் நிற்கிறார்கள். இயற்கைக்கு, சுற்றுச்சூழலுக்கு ஓர் அச்சுறுத்தல் வரும்போது போராட்டங் களில் பெண்கள் பங்கேற்பது என்பது சமீபத்தில் உருவானதல்ல. இந்தியப் பெண்கள் இதற்கு முன்பும் பலப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கவை:

சிப்கோ இயக்கம்

1973-ம் ஆண்டு மரங்களைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்டது சிப்கோ இயக்கம். அரசின் அனுமதி யுடன் தனியார் நிறுவனம் மரங்களை வெட்ட வந்தபோது, பெண்கள் மரங்களைக் கட்டிப்பிடித்து, வெட்ட விடாமல் தடுத்தனர். ’இந்தக் காடு எங்கள் தாய் வீடு. இதைக் காப்பது எங்கள் கடமை’ என்ற முழக்கத்தோடு பெண்கள் போராட்டத்தை நடத்தினார்கள். இது நாடு முழுவதும் பரவியது. சிப்கோ போராட்டங்களின் விளைவாக, அன்றைய உத்தரப் பிரதேச அரசு 1980-ம்ஆண்டு இமயமலையில் மரங்களை வெட்டுவதற்கு 15 ஆண்டுகளுக்குத் தடை விதித்தது.

போபால் விபத்து

1984-ம் ஆண்டு போபாலில் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் விஷவாயு தாக்கி, சுமார் 20 ஆயிரம் பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். தொடக்கத்தில் இழப்பீடு கோரி நடைபெற்ற போராட்டங்களில் ஆண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். பின்னர் சிறிதும் மனம் தளராமல் பெண்கள்தாம் சர்வதேச நிறுவனங்களை எதிர்த்து 36 ஆண்டு களாகப் போராடி வருகிறார்கள். ஓரளவு இழப்பீட்டையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

நர்மதை அணை போராட்டம்

நர்மதை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்தும் அதற்காக இடம் பெயர்ந்த 32 ஆயிரம் குடும்பங்களுக்கு இழப்பீடு கேட்டும் 1985-ம் ஆண்டு மேதா பட்கர் போராட்டத்தைத் தொடங்கினார். இந்தப் போராட்டதில் பெருமளவில் பெண்கள் பங்கேற்றனர். நீண்ட காலமாகப் போராடி சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கு மாற்றுத் திட்டங்களை முன்மொழிவதற்குக் காரணமாகவும் இவர்கள் இருந்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அணுமின் நிலையம் தொடங்கப்பட்ட பிறகு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நடைபெற்றுவரும் போராட்டங்களிலும் பெண்கள் பெரு மளவில் கலந்துகொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் 2020

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று வருகிறார்கள். அவர்களை வழிநடத்திச் செல்லும் ஹரிந்தர் பிந்து, “அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்கள், விவசாயத்துக்கு எதிரானவை மட்டுமில்லை, பெண்களுக்கும் எதிரானவை. குறைந்தபட்ச ஆதார விலை இனி விவசாயிகளுக்குக் கிடைக்காது. உழைப்பையும் விளைபொருள்களை யும் பெரும் முதலாளிகளுக்குத் தாரை வார்க்க நேரிடும். பெண்கள் அதிகம் உழைத்து, குறைந்த வருவாயை ஈட்டு வார்கள். குழந்தைகளுக்குக் கல்வியோ நல்ல உணவோ கொடுக்க முடியாமல் போகலாம். வருமானம் குறைந்தால், விவசாயம் அல்லாத நகர்ப்புற வேலைக்குச் செல்லும்படி பெண்கள் நிர்பந்திக்கப்படுவார்கள்” என்கிறார்.

“எங்கள் நிலத்தில் உழைத்து, கிடைப்பதை வைத்து நிம்மதியாக வாழ்ந்துவருகிறோம். பெரும் நிறு வனங்கள் வேளாண்மைக்குள் நுழையும்போது, காலப்போக்கில் எங்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் ஊழியர்களாக்கிவிடு வார்கள். நிலத்தின் உரிமையாளர்களாக இருப்பவர்கள், கூலியாள்களாக மாறுவதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறார் போராட்டக் காரர்களில் ஒருவரான ஜஸ்பீர் கவுர்.

ஷாகின் பாக் போராட்டத்தில் பங்கேற்று, பி.பி.சி.யின் 100 பெண்கள் பட்டியல், டைம் இதழின் செல்வாக்கு செலுத்தும் மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 82 வயது பில்கிஸ் பானு, இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவந்தார். அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, பல்வேறு வேளாண் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள், ஒன்றாக உணவு சமைக்கிறார்கள். சகப் போராட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல, போலீஸ்காரர்களுக்கும் உணவும் தேநீரும் வழங்குகிறார்கள். மொழி புரியாவிட்டாலும் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். கூட்டங் களைக் கூட்டுகிறார்கள். மேடை ஏறி, நியாயம் கேட்டு உரக்கப் பேசுகிறார்கள், பாடுகிறார்கள். போராட்டத்துக்கு முதுகெலும்பாகச் செயல்படும் இந்தப் பெண்கள், விரைவில் தங்கள் உரிமைகளை மீட்டெடுப்பார்கள்.

இந்து தமிழ்
2020.12.13

Republished From: https://chakkaram.com

Related posts

Leave a Comment