அமெரிக்க வன்முறையின் வரலாறு

ஜனவரி 12, 2021

கேப்பிட்டலில் (Capitol) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தூண்டியதைவிட இரத்தக்களரி நிரம்பிய, மிகவும் நாசகாரத்தன்மை கொண்ட பல அத்தியாயங்களைக் கொண்டிருப்பது அமெரிக்க வரலாறு. அமெரிக்காவின் பயங்கரமான கடந்த காலத்தைப் பற்றிய அறியாமையை வரலாற்றாசிரியர்கள் டபிள்யு.ஈ.பி. டுபோய்ஸ், ஜான் ஹோப் ஃப்ராங்க்ளின், ரிச்சர்டு ஹோஃப்ஸ்டேட்டர் (W.E.B. DuBois, John Hope Franklin and Richard Hofstadter) போன்றோர் நன்றாக ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த அறியாமை தற்போதைய நிகழ்வுக்குப் பிறகு வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நாசகாரச் சம்பவமானது வழக்கத்துக்கு மாறான ஒன்றுதான் என்று தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

வேண்டுமென்றே மறக்கும் இந்தச் செயல் – அமெரிக்க அறியாமை என்ற தொன்மத்துடன் சேர்ந்து – பல்வேறு வகைகளிலும் ஆபத்தான ஒன்றாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது. தான் படுதோல்வியடைந்த ஒரு தேர்தலை உண்மையில் தான் வென்றிருப்பதாக அதிபர் வலியுறுத்துவதை, அதன் இணைநிகழ்வாக வலதுசாரிப் பயங்கரவாதத்தை அவர் தழுவிக்கொள்வதை ஒரு அரசியல் நாடகம் என்றும் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் இது எந்தப் பிரச்சினையுமின்றிக் கடந்துவிடும் என்றும் பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுவதற்கு இந்த மறதியானது வழிவகை செய்கிறது.

ட்ரம்ப்பின் தீக்குச்சி

“அவருக்கு இணங்கிப்போவதில் என்ன தீங்கு இருக்கிறது? எப்படியும் ட்ரம்ப் வெகு விரைவில் போய்விடுவார்” என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. மாறாக, ட்ரம்ப்பின் வெற்றி அபகரிக்கப்பட்டுவிட்டது என்ற பொய்யை முழுக்க நம்பிய ஒரு கும்பலை நாடாளுமன்றத்தில் உள்ள குடியரசுக் கட்சியின் தலைவர்கள் தூண்டிவிட்டனர். இதன் விளைவாக, அரசு மீது நிகழ்த்தப்பட்ட ஊடுருவலானது – அது குறைந்தபட்சம் 5 பேரின் உயிரைப் பலிகொண்டிருக்கிறது – அரசியல் வன்முறை என்பது பிரசித்தி பெற்ற பெட்ரோல் ஆறு என்பதையும், தீக்குச்சியைப் பற்றவைத்துப் போடக்கூடிய ட்ரம்ப் போன்ற ஒருவருக்காகக் காத்திருக்கிறது என்பதையும் எல்லோருக்கும் தெளிவாகப் புரியவைக்க வேண்டும்.

கேப்பிட்டல் கட்டிடத்தைச் சூறையாடுவதற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகள் 19-ம் நூற்றாண்டுச் சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. மறுகட்டமைப்பு என்ற பெயரில் கறுப்பினத்தவர்களுக்குக் கிடைத்திருந்த சுயநிர்ணய உரிமைகளை அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தவர்கள் வலுவிழக்கச்செய்து, இனவெறிக் கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த காலகட்டம் அது. கறுப்பினத்தவர் அதிக அளவில் உள்ள நகரங்களில் வாக்குப்பதிவில் முறைகேடுகள் பரவலாக நடந்திருப்பதாக நவம்பர் தேர்தலின்போது ட்ரம்ப் தவறாகக் கூறியதன் மூலம், கடந்த காலத்தின் தெற்குப் பிராந்திய வெள்ளையின ஆதிபத்தியர்களின் உணர்வையே அவர் பிரதிபலித்தார்.

இந்த மாதம், டெட் க்ரூஸ் (Ted Cruz) தலைமையிலான குடியரசுக் கட்சியினரின் கூட்டுக் குழுவொன்று வாக்குப்பதிவு முறைகேடு பற்றிய பொய்யைத் திரும்பக் கூறி, 2020 தேர்தல் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேர்தல் கமிஷன் ஒன்றை நாடாளுமன்றம் நியமிக்க வேண்டுமென்று கோரியபோது ரத்தத்தில் தோய்ந்த இந்த வரலாற்றையே நினைவுபடுத்தினார்கள். 1876 தேர்தலைப் பற்றித் தீர்ப்புக் கூற அமைக்கப்பட்ட ஒரு குழுவை டெட் க்ரூஸ் பொருத்தமில்லாத வகையில் எடுத்துக்காட்டாகக் கூறினார். அந்த நேரத்தில் யார் வென்றது என்பது பற்றித் தெளிவில்லாததால் அப்படியொரு குழு அமைக்கப்பட்டது.

1876 தேர்தல்

க்ரூஸ் முன்வைத்த ஒப்புமையானது அதன் மேல் தோற்றத்திலேயே நேர்மையற்றதாக இருக்கிறது. ஏனெனில், அளிக்கப்பட்ட வாக்குகள் தொடர்பாக, செல்லுபடியாகும் மறுப்பு ஏதும் இன்று காணப்படவில்லை. ஆனால், 1876-ஐ நினைவுகூர்வதன் மூலம் அவரது கட்சி மிகத் தீவிரமாகச் செய்த வாக்காளர் ஒடுக்குமுறைகளின் கடந்த காலத்தை அவர் தன்னையறியாமல் சுட்டிக்காட்டியுள்ளார். வரலாற்றாசிரியர்கள் ரஷேல் ஷெல்டனும் எரிக் அலெக்ஸாண்டரும் (Rachel Shelden and Erik B. Alexander) சமீபத்தில் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ (The Washington Post) இதழில் சுட்டிக்காட்டியதுபோல் 1876 தேர்தலானது ரத்தக்களரியும் அச்சுறுத்தலும் நிரம்பியதாக இருந்தது. வாக்குப்பதிவு நாள் நெருங்கியபோது வெள்ளையின பயங்கரவாதக் குழுக்கள் தெற்குப் பிராந்தியம் முழுவதிலும் உள்ள ஆப்பிரிக்க – அமெரிக்கர்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள். கறுப்பினத்தவர்கள் அதிகமாக இருந்த ஹாம்பர்க், எஸ்.சி.இல் “தெற்கு கரோலினாவிலிருந்தும் ஜார்ஜியாவிலிருந்தும் South (Carolina and Georgia) துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான வெள்ளையர்கள் ஹாம்பர்க் (Hamburg) நகரத்துக்கு வந்திறங்கினார்கள், அவர்கள் கறுப்பினத்தவர்களின் வீடுகள், கடைகளைச் சூறையாடினார்கள்” என்று இந்த வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள்.

தெற்கில் கறுப்பினத்தவர்களின் உரிமைகளைக் காத்துக்கொண்டிருந்த துருப்புகளைக் கூட்டாட்சி அரசு இறுதியில் திரும்பப்பெற்றுக்கொண்டது. இதனால், அடிமைமுறை வேறொரு பேரில் நீடிப்பதற்கு வழியேற்பட்டது. இது, ‘குடிமை உரிமைகள்சட்டம் – 1964’, ‘வாக்குரிமைச் சட்டம் – 1965’ (Civil Rights Act of 1964 and the Voting Rights Act of 1965) ஆகியவை நிறைவேற்றப்படும் வரை நீடித்தது. கேப்பிட்டலை அந்தக் குழுவினர் ஊடுருவியதற்கு முந்தைய தினங்கள் 1898-ல் வில்மிங்டன் நகராட்சியைக் கவிழ்ப்பதற்கு செய்யப்பட்ட முயற்சிகளைப் பல விதங்களிலும் எதிரொலிக்கிறது. ஆப்பிரிக்க – அமெரிக்கர்களுடனும் முற்போக்கு வெள்ளையினத்தவர்களுடனும் கூட்டணி வைத்திருந்த அரசை வெள்ளை ஆதிபத்தியர்கள் தூக்கியெறிந்தனர்.

‘அமெரிக்கன் வயலன்ஸ்: எ டாக்குமென்ட்டரி ஹிஸ்டரி’ (American Violence: A Documentary History) நூலில் ஹோஃப்ஸ்டேட்டரும் மைக்கேல் வாலஸும் (Hofstadter and Michael Wallace) இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். புதிய அரசுக்கு உதவுவதற்கு மற்ற இடங்களிலிருந்து ராணுவ அலகுகள் வில்மிங்டனுக்கு (Wilmington) வந்து குவிந்தவண்ணம் இருந்திருக்கின்றன: “துருப்புகள் வீதிகளில் அணிவகுத்துச் செல்ல, புதிதாக ஆட்சிக்கு வந்த வெள்ளை ஆதிபத்திய நிர்வாகத்துக்காகத் துப்பாக்கிகள் முழங்கியபடி செல்ல, வெள்ளையர்களின் முன்பு ஆப்பிரிக்கர்கள் கூனிக்குறுகி நடந்திருக்கிறார்கள்” என்று எழுதுகிறார்கள்.

கணக்கிலடங்காத கறுப்பினக் குடிமக்கள் கொல்லப்பட்டனர். தற்போது கேப்பிட்டலில் நடந்ததுபோல் வில்மிங்டன் கும்பலும் அதிகரித்துவந்த இனவெறி அலையை எதிர்த்த பத்திரிகையாளர்களின் வாயை மூடுவதிலேயே குறியாக இருந்தார்கள். இதே காரணத்துக்காக, சூறையாடிகள் கறுப்பினத்தவருக்குச் சொந்தமான ‘டெய்லி ரெக்கார்டு’ (Daily Record) என்ற பத்திரிகை அலுவலகத்தைத் தீக்கிரையாக்கினார்கள்; அதன் ஆசிரியர் அலெக்ஸாண்டர் மேன்லி (Alexander Manly) நகரத்தை விட்டுத் தப்பியோடினார். இறுதியில் வெள்ளை ஆதிபத்தியர்கள் அந்த மாநிலத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்; கறுப்பினத்தவர்கள் அரசியலில் பங்கேற்க முடியாத வகையில் திரையை இட்டனர். இந்த வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது, வடக்கு கரோலினா இன்னமும் ஒரு போர்க்களமாக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அங்கேதான் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் தொகுதி வரையறை முறைகேடுகள் உள்ளிட்ட பிற ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இன்னமும் போராட வேண்டியிருக்கிறது.

20-ம் நூற்றாண்டிலும் ஒடுக்குமுறை

பெரிய அளவிலோ சிறிய அளவிலோ, கறுப்பினத்தவர்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராக இந்த வன்முறைகள் 20-ம் நூற்றாண்டிலும் தொடர்ந்தன. சில சமயங்களில் வெளிப்படையாகவே கறுப்பினத்தவர்களின் வாக்குச் சக்தியை அழிக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படும் இந்த வன்முறைகள் கறுப்பினத்தவரின் பொருளாதாரத் தற்சார்பை அழிப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் வீடுகளையும், சந்தையில் வெள்ளையர்களின் நிறுவனங்களுடன் போட்டியிடும் அவர்களின் தொழில்நிறுவனங்களையும் அழித்தொழிப்பதற்கு இந்த வன்முறைகள் ஏவப்படுகின்றன.

இதுபோன்ற தாக்குதல்கள் பற்றிய தெளிவான எடுத்துக்காட்டாக ஒக்லஹோமாவில் 1921-ல் நடைபெற்ற டுஸ்லா ரேஸ் படுகொலையைக் (Tulsa Race Massacre) குறிப்பிடலாம். டுஸ்லா காவல் துறையின் உதவியோடு வெள்ளையினக் கும்பல் தங்கள் விருப்பத்துக்கேற்பப் படுகொலைகளை நிகழ்த்தினார்கள்; கறுப்பினத்தவரின் குடியிருப்புகள் அடங்கிய பெரும் பரப்பை எரியூட்டினார்கள். ‘நீக்ரோ வால் ஸ்ட்ரீட்’ (Negro Wall Street) என்று அழைக்கப்பட்ட கறுப்பினத்தவரின் வணிகக் கட்டமைப்பைச் சாம்பலாக்கினார்கள். வரலாற்றாசிரியர் ஜெலானி காப் (Jelani Cobb) ‘தி நியூயார்க்கர்’ (The New Yorker) இதழில் அமெரிக்கத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்ததுபோல், கறுப்பினத்தவர்களின் வாக்குரிமையைத் தாங்கள் மூர்க்கமாக ஒடுக்கியது பற்றி அமெரிக்கா கொண்டிருக்கும் அறியாமையானது கறுப்பினத்தவர்களை அது பாதுகாத்ததைவிட அதிக அளவிலானதாகும்.

கேப்பிட்டல் மீதான தாக்குதலானது அதற்கு முன்பு என்ன வந்ததோ அதன் இயற்கையான விளைவே. ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் நகரங்களை வாக்கு முறைகேடுகளின் கேந்திரம் என்று பிழையாகச் சித்தரித்துத் தன்னை வெள்ளையினத்தவருக்குப் பிரியமானவராகக் காட்டிக்கொண்ட ஒரு அதிபரின் கடுமையான இனவெறி பிடித்த தேர்தல் பிரச்சாரத்தின் தொடர்ச்சிதான் இந்தத் தாக்குதல்.

மூலம்(source): The Myth of American Innocence

Related posts

Leave a Comment