இடைவிடாது வெற்றிகரமாக முன்னேறும் தேயிலைத் தோட்ட அடையாள வேலைநிறுத்தம்.

ரூ. 1000 தினசரி ஊதியத்தை வெல்ல தோட்டத் துறை முழுவதும் பாரிய வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்புப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 5ம் திகதிய தோட்ட வேலைநிறுத்தம் காரணமாக அது அட்டன், கொட்டகல மற்றும் தலவாக்கல உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பரவியது. மேலும் நகரங்களில் உள்ள வணிக நிலையங்கள் அதற்கு ஆதரவாக தங்கள் கடைகளை மூடின. தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து இயக்குவதைத் தவிர்த்தனர். ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். முழு தோட்டத் துறையும் ஒரு பொது கர்த்தால் வடிவத்தை எடுத்தது.

தோட்டத் தொழிலாளர்களுக்கான தற்போதைய தினசரி ஊதியமான ரூ. 750 எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. அதற்காக கொழும்பு உட்பட தோட்டத் துறை முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கென கடந்த ஐந்தாண்டுகளாக தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள், நகர்ப்புற தொழிலாள வர்க்க அமைப்புகள், இடதுசாரி அரசியல் அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோரால் ‘1000 ரூபாய் இயக்கம்’ உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு பெரிய தொழிற்சங்கங்களின் ஆதரவு இருக்கவில்லை. ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அதற்கு முன்வந்ததால் அவர்களால் அதனைப் புறக்கணிக்க முடியவில்லை. பின்னர் பொதுத் தேர்தல் அண்மித்த சமயத்தில் இந்தத் தொழிற்சங்கங்கள் ஆயிரம் ரூபாய் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. அதனையொட்டி தோட்டத் தொழிலாளர்களின் வாக்குச் சீட்டுக்களை எதிர்பார்க்கும் தலைவர்கள் தாம் ஆட்சிக்கு வந்தவுடன் ரூ. 1000 வழங்குவதாக உறுதியளித்தனர். கோத்தபாய ராஜபக்சவின் ‘செழிப்பு பற்றிய பார்வையும்’ இந்த உண்மையை உள்ளடக்கியிருந்தது. அப்போதிருந்து அவரது அனைத்து முக்கிய உரைகளின் கருப்பொருள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதேயாகும். பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் மகிந்த ராஜபக்சவும் இதனைக் கூறியிருந்தார். இதற்கான பல திகதிகளையும் அவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை அவர்களால் அதைச் செயற்படுத்த முடியவில்லை. கடைசி பட்ஜெட்டில் அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை ஜனவரி 2021 முதல் ரூ. ஆயிரமாக உயர்த்துவதாக உறுதியளித்திருந்தனர்.

இதற்காக அரசாங்கம் செய்த ஒரே விடயம் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான ஒரு கலந்துரையாடல் ஊடாக ரூ. 1000 வழங்குமாறு ஆளும் கட்சி தோட்ட முதலாளிகளிடம் கேட்பதுதான். பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ள இந்த சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்கத் தலைவர்கள் போராட்டத்தை நடாத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது தோட்டத் தொழிற் துறைக்கு ஒரு தூண்டுதலாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டம் ஓரளவு வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த நாட்டில் உள்ள மீதமுள்ள தொழிலாள வர்க்கம் தோட்ட முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் நலன்களுக்காக ரூ. 1000 த்திற்கான போராட்டத்தில் வீழ்ச்சியடையவோ அல்லது பின்வாங்கவோ அனுமதிக்கக் கூடாது. இறுதிவரை ஆயிரம் ரூபாயை வெல்லும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ‘இடது குரல்’ தனது பூரண ஆதரவை வழங்குகிறது.

நீல் விஜெதிலக

Related posts

Leave a Comment