போராட்ட வழிக்குத் திரும்பும் தமிழ் மக்கள்

பெப்ரவரி 4ந் திகதிய போலிச் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு எதிராகவும்,  அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல்,  வடக்கு கிழக்கில் போரினால் இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தல்,  காணாமல் போனவர்களைத் தேடுதல்,  போர்க் குற்றவாளிகளைத் தண்டித்தல் ஆகியவற்றை வலியுறுத்தியும் வடக்குக் கிழக்கில் பொத்துவிலில்(அம்பாறை) இருந்து ஆரம்பித்து பொலிகண்டி(யாழ்ப்பாணம்) வரை ஒரு பாரிய ஆர்ப்பாட்ட அணிவகுப்பு இடம் பெற்றுள்ளது. இப் போராட்டத்தைத் தடுக்க அரசாங்கம் பல இடங்களில் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்றிருந்தும் அதனை செப்பு விலங்குகள் என்று கருதாத போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதியபடி வெற்றிகரமாக முன்னேறிச் சென்றுள்ளனர். சிவில் சமூக அமைப்புக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த அணிவகுப்பில் பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் கலந்து கொண்டிருந்தன.  இதில் சிறப்பம்சம் யாதெனில் முஸ்லீம்களின் பெருவாரியான பங்களிப்பேயாகும். இந்த அம்சம் இலங்கையில் தேசியப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான மிகவும் சாதகமான ஒரு வழியைச் சுட்டிக் காட்டுகிறது. 

சுதந்திர தினம் என்பது சிங்கள தேசியவாத சக்தியின் தெளிவான ஆர்ப்பாட்டமாகும். சிங்களவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் ஒரு தலைவராகத் அவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி உரையின் கருப்பொருள். இந்த நாட்டில் பல தசாப்தங்களாக தமிழ் முஸ்லீம் மக்கள் எதிர் கொண்டுள்ள கடுமையான அநீதிகளையும், பாகுபாடுகளையும் தோற்கடிக்க தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களின் தரப்பில் உருவாகி வரும் இந்த இயக்கத்தை அனைத்து இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் மற்றும் உழைக்கும் மக்கள் யாவரும் நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும்.

1987ன் இந்தோ-இலங்கை உடன்படிக்கையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாகாணசபை அமைப்பு முறைமை ஒழிக்கப்படும் வகையில் ஒரு புதிய அரசியல் யாப்பு வரையப்படல் வேண்டும் என்ற சிங்கள பௌத்த இனவாதிகளின் ஒரு வலுவான கருத்தின் பின்னணியின் மத்தியில் தமிழர்களின் இந்தப் பிரச்சாரம் எழுந்துள்ளது. அதனையொட்டிய பணிகள் தற்போது இடம் பெற்று வருவதால் இந்த சிங்கள பௌத்த இனவெறிச் செல்வாக்குக்கு கோத்தபாயா ஆட்சி தலைவணங்க வாய்ப்பு உள்ளது. இந்த நடவடிக்கை தமிழ் மக்களின் சுயாட்சிக்கான ஜனநாயக உரிமையை அப்பட்டமாக மீறுவதாகும். எனவே தமிழ் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், சிங்கள பௌத்த இனவாதிகளின் மிலேச்சத்தனமான சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் ஒலிக்கும் தமிழ் முஸ்லீம் மக்களின் குரலை நமது குரலாக கட்சி வேறுபாடின்றி நாம் கருத வேண்டும்.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் அரசாங்கத்தின் இனவெறித் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு தீர்மானத்தை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை போர்க் குற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் ஒடுக்குமுறை மற்றும் இராணுவ பாணி ஆட்சியை விமர்சித்துள்ளது. இந்த சூழ்நிலையில் போர் நடவடிக்கைகளை ஆராய கோத்தபாயா ராஜபக்ச மீண்டும் ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் நடவடிக்கையாகும். ஏற்கனவே நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளை செயற்படுத்தாமல் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் நெருங்கி வரும் போது உலகத்தையும் மக்களையும் ஏமாற்றுவதற்காக இவ்வாறான ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன.

எனவே போருடன் சம்பந்தப்பட்ட அனைத்துப் போர்க் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதனை நாம் வற்புறுத்துகிறோம். 

போர் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். 

போரில் கொல்லப்பட்ட மற்றும் இடம் பெயர்ந்தவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும். 

அதே சமயம் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பரவலாக்கப்பட்ட பரந்த அதிகாரங்கள் அடங்கிய அரசாங்க ஆட்சிமுறைமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தமிழ் முஸ்லீம் மக்களின் பிரச்சனைக்கு இதனை விட வேறு ஒரு தீர்வு உண்டு என்று நாங்கள் நம்பவில்லை.

நீல் விஜெதிலக

Related posts

Leave a Comment