சுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3

11பெப்ரவரி2021

சுதந்திர வர்த்தக வலயமும் மனித வலுத் தொழிலாளர்களும் – சூழ்நிலை பற்றிய இற்றைப்படுத்தல் 3

லலான் ரப்பர் (பிரைவேட்) லிமிடெட் , பியகம

தொழிலாளர்களின் வருடாந்த விடுப்பு இந்த வருடம் குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நத்தார் பண்டிகை நாள் தொடக்கம் (கிறிஸ்துமஸ்) புத்தாண்டு வரை ஒவ்வொரு நாளும் வேலை செய்யவேண்டியுள்ளது.  நான்கு கத்தோலிக்கத் தொழிலாளர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை எஞ்சிய தமிழ், முஸ்லிம் மற்றும் பெளத்தத் தொழிலாளர்கள் அந்த நாளில் வேலை செய்ய வேண்டியிருந்தது. பொதுவாக வருடத்தின் இக்காலப் பகுதியில் வருடாந்தச் சம்பள அதிகரிப்புப் பற்றிய அறிவித்தலைத் தொழிற்சாலை வெளியிட்டிருக்கும் என்றும் ஆனால் இதுவரை (24 ஆம் திகதி வரை) அவ்வாறான அறிவித்தல் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். வருடாந்த விடுப்பு அதிகரிப்புப் பற்றியும் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. ஜனவரி 1 ஆம் திகதி மூன்று பௌத்த துறவிகளுக்குத் தொழிற்சாலை தானம் வழங்கப்போகின்றது. ஆனால் தொழிலாளர்கள் அன்றைய தினமும் காலை 10 மணிக்கு வேலைக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யுனைடெட் டொபாகோ புரசசிங் (பிரைவேட்) லிமிடெட் ( யுடிபி ) , கட்டுநாயக்க

இவர்கள் தங்கள் தொழிலாளர்களுக்குக் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய இரண்டு நாட்களிலும் விடுமுறை அளித்துள்ளனர், மேலும் விடுமுறை நாட்களில் வீடு திரும்ப விரும்புவோர் பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடமிருந்து அவசியமான ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதையும் வசதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், தமது கிராமங்களுக்குச் சென்றதும் தாம் அங்கே கட்டாயத்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவோம் என்பதைத் தொழிலாளர்கள் அறிந்துள்ளனர். மேலும், கிராமங்களில் 10 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டால், தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் 50% வெட்டப்படும் என்று நிர்வாகம் தொழிலாளர்களுக்கு தெரிவித்துள்ளது. இந்தக் காரணத்தினால், பெரும்பாலான தொழிலாளர்கள் விடுமுறைக்காக வீடு திரும்பவில்லை, மேலும் அவர்கள் தங்களின் விடுதிகளில் / தங்குமிடங்களில் தங்கியுள்ளனர்.

தொழிலாளர்களின் வருடாந்தச் சம்பள அதிகரிப்புத் தொடர்பாக முறைகேடுகளும் நடந்துள்ளன, உதாரணமாக, 5 ஆண்டுகளுக்கும் குறைவான சேவையினைக் கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு 1950 ரூபா அதிகரிப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  இதன் விளைவாக, கிட்டத்தட்ட 5 வருடங்களாகத் தொழில் புரியும் தொழிலாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அநீதியினை எதிர்த்துத் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தாம் இந்தப் பிரச்சினையினைக் கருத்தில் கொண்டு ஒரு நியாயமான தீர்வினைப் பெற்றுத்தருவதாகத் தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

சீப்வே லங்கா (பிரைவேட்) லிமிடெட், கட்டுநாயக்க

டிசம்பர் ஆரம்பப் பகுதியில், இத்தொழிற்சாலையினைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வருடாந்த போனஸ் கிடைக்கவில்லை என்றும் தம்மால் சேர்ந்து வேலை செய்ய முடியாது எனத் தொழிலாளர்கள் கூறும் 4 முகாமைத்துவ அதிகாரிகளை அகற்றக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்த்தின் போது ஏற்பட்ட கைகலப்பில்  ஒரு முகாமைத்துவ அதிகாரி காயமடைந்ததுடன் சம்பவம் காரணமாக 6 தொழிலாளர்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். தொழிற்சாலை இப்போது மூடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களின் வீடுகளுக்குச் செல்லமுடியாமல் தற்போது அவர்களின் விடுதிகளிலும் தங்குமிடங்களிலும் வேலையும் இன்றி ஊதியமும் இன்றித் தங்கியுள்னர். 5 வருடங்கள் வரை நடத்துவது என்று கூறியே தொழிற்சாலையினை முதலில் ஆரம்பித்த காரணத்தினாலும் 5 வருட காலப்பகுதி விரைவில் முடிவடையப் போகின்ற காரணத்தி்னாலும் தொழிற்சாலை இனிமேல் ஒரு நாளும் திறக்கப்படாமல் போகலாம் எனத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
 

நெக்ஸ்ட் மெனுபக்சரிங் (பிரைவேட்) லிமிடெட், கட்டுநாயக்க

டிசம்பர் 21 ஆம் திகதி நெக்ஸ்ட் தொழிற்சாலை ஊழியர்கள் தங்களது வருடாந்த  போனஸ் வழங்கப்படவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டத்தைக் கலைக்க குண்டர்களை அனுப்பிய போதிலும் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தொழிற்சாலை முகாமைத்துவத்துடன் 22 ஆம் திகதி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு , தொழிலாளர்களுக்கு 50% வருடாந்த போனஸ் வழங்குவதாக உரிமையாளர்கள் இணங்கினர். டிசம்பர்  23 ஆம் திகதி தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலை வழங்கிய போக்குவரத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.


ஏடிஜி கிளவ்ஸ் நிட்டிங் (பிரைவேட்) லிமிடெட், வதுபிட்டிவல


தொற்று நோயின் காரணமாகத் தொழிலாளர்கள் ஆட்குறைப்புச் செய்யப்பட்ட காரணத்தினால் எஞ்சியுள்ள தொழிலாளர்கள் அளவுக்கு அதிகமாக வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

ஷோர் டு ஷோர் (பிரைவேட்) லிமிடெட், கட்டுநாயக்க


நிர்வாகம் அதன் இயந்திரங்களை எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு நகர்த்தியுள்ளதுடன் மூன்று மாதங்களில் தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கும் எனத் தங்கள் தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளது.

பிராண்டிக்ஸ் அப்பரெல் லிமிடெட், கட்டுநாயக்க

கட்டுநாயக்க தொழிற்சாலையில் கொவிட் 19 தொற்றுள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு அவர்களின் மாதச் சம்பளத்திற்குச் சமமான வருடாந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களின் மாதச் சம்பளமும் 1750 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமது விடுதியில் உள்ள ஒரு தொழிலாளருக்குத் தொற்று உறுதியானால் முழு விடுதியினையும் 14 நாட்களுக்கு மூடாமல் தொற்றுள்ள தொழிலாளரை மட்டும் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏனெனில் தொழிலாளர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருக்கையில் தொழிற்சாலை உரிமையாளர்களினால் அவர்களின் சம்பளங்கள் பல நாட்கள் வெட்டப்பட்டுள்ளன.

ஸ்கை ஸ்போர்ட் இன்டெல் (பிரைவேட்) லிமிடெட் , கட்டுநாயக்க

COVID-19 காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்த தொழிலாளர்களை தொழிற்சாலை மீண்டும் வேலைக்கு அழைத்தது. இருப்பினும் இவர்களில் எவருக்கும் பணியிடத்திற்கு வருவதற்கும் பணியிடத்தில் இருந்து செல்வதற்கும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவில்லை. இதன் விளைவாக, தொழிற்சாலையிலிருந்து தூர இடங்களில் வாழும் தொழிலாளர்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. போக்குவரத்து இல்லாது வேலைக்குச் செல்ல முடியாத காரணத்தினால் தமது வேலையினை இழக்க நேரிடுமோ எனத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

ஈடன் பிரெஷ் புரோ-பெக் (பிரைவேட்) லிமிடெட் , பியகம

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை முதல் லொக் டவுன் இடம்பெற்றபோது , 10 ஊழியர்களை மறு அறிவிப்பு வரும் வரை வேலைக்கு வரவேண்டாம் எனவும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் இத்தொழிற்சாலை கூறியது . எவ்வாறாயினும், தொழிலாளர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான அடிப்படை ஊதியமும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு அரை மாத ஊதியமும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களுக்கு கால் மாத ஊதியமும் வழங்கப்பட்டு அக்டோபர் மாதத்திற்காக முழு மாத ஊதியமும் வழங்கப்பட்டது.  இந்தக் கொடுப்பனவுகளைத் தொடர்ந்து தொழிலாளர் கிராமங்களில் மூன்று கிராமங்களுக்குத் தபால் மூலம் சேவை முடிவுறுத்தல் அறிவிப்பு அனுப்பப்பட்டது . தொழில் முடிவுறுத்தப்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையில் முறையே  2 , 3 மற்றும் 5 ஆண்டுகள் தொழில்புரிந்துள்ளனர். 

சில தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் அவர்களின் சேவை வருடங்களுக்கான இழப்பீடு அவர்களுக்கு வழங்கப்பட்டது. மூன்று தொழிலாளர்களில் ஒருவர் குறைந்த வேதனத்தில் மீண்டும் வேலையில் சேர்க்கப்பட்டனர். மற்றைய இரண்டு தொழிலாளர்களும் தங்களின் துயரங்களுக்குப் பரிகாரம் தேடி தொழில் திணைக்களத்தில் முறைப்பாட்டினைத் தாக்கல் செய்தனர். தமக்குச் சேரவேண்டிய நிலுவைத் தொகையுடனும் நலன்களுடனும் தாம் வேலையில் மீண்டும் சேர்க்கப்படவேண்டும் அல்லது தங்களின் சேவைக்காலத்திற்கு விகிதாசாரமான முறையில் தமக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஹெர்டிராமனி நிட் வவுனியா


வவுனியாவிலுள்ள ஹெர்டிராமனி ஆடைத் தொழிற்சாலையினைச் சேர்ந்த பெண் தொழிலாளிகள் தாம் தீபாவளி மற்றும் கிறிஸ்மஸ் நாட்களிலும் போயா விடுமுறை நாட்களிலும் வேலை செய்யவேண்டியுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர். இந்த விடயத்தினைத் தொழில் திணைக்களத்தின் கவனத்திற்கு டபிந்து கலெக்டிவ் கொண்டுவந்தபோது தொழில் திணைக்களம் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டது. ஆனால் தொழிலாளர்களுக்குக் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதால் தொழிற்சாலையிடம் விடுமுறை வழங்குமாறு கேட்பது கடினமாக இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. முடிவில்லாமல் தொழிலாளர்கள் ஏப்ரில் 27 ஆம் திகதியில் இருந்து வேலை செய்து வருகின்றபோதிலும் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்தன்று வேலைக்கு வராவிட்டால் தொழிலாளர்களின் போனஸ் வெட்டப்படும் என அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது. தனித்த பெற்றோர்கள் உள்ளடங்கிய தொழிலாளர்கள் விடுமுறையினைத் தமது பிள்ளைகளுடனும் குடும்பங்களுடனும் மகிழ்ச்சியுடன் களித்து தீபாவளியினைக் கொண்டாடக் கோவிலுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

காலக்கெடு நிறைவடைய முன்னர் உற்பத்திப் பொருட்களைத் தயாரித்து முடிப்பதற்காகச் சில உற்பத்திப் பிரிவுகள் ஒக்டோபர் மாதத்தின்போது முன்னிரவு 1 மனி அல்லது 1.30 வரை வேலை செய்துள்ளன. நீண்ட நேரம் தொழிலாளர்கள் இரவில் பணியாற்ற வேண்டியிருந்ததால் குடும்பப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன் சில தொழிலாளர்களின் வாழ்க்கைத் துணையினர் வவுனியா பொலிசில் முறைப்பாடுகளும் செய்துள்ளனர். பல தனித்த தாய்மார்கள் தமது பிள்ளைகள் தூங்கிய பின்னரே வீடுகளுக்குத் திரும்புகின்றனர். இதனால் பிள்ளைகளுடன் இவர்கள் நேரத்தினைச் செலவழிக்க முடியாதுள்ளது.

ஹெர்டிராமனி கார்மன்ட்ஸ், கட்டுநாயக்க

தொழிற்சாலை கடந்த வருடம் (2020) அனேகமாக வருடம் முழுவதும மூடப்பட்டிருந்தது. தொழிற்சாலை அதன் நடவடிக்கைகளை 300 தொழிலாளர்களுடன் 2020 டிசம்பரில் மீண்டும் ஆரம்பித்தது.

ஒமெகா லைன் வவுனியா அப்பரெல்ஸ், வவுனியா

பெண் தொழிலாளர்கள் திருமணம் முடித்ததும் குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்காவது பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருக்குமாறு கேட்கப்படுகின்றனர். இத்தொழிலாளர்கள் கருத்தடை முறைகளைப் பயன்படுத்தி வருவதுடன் எவ்விதமான கருத்தடை முறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் மனித வளப் பிரிவிற்கு அறிவிக்கின்றனர். தொழிற்சாலையின் மனிதவளப் பிரிவு மூலம் அவ்வாறான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைத் தொழிலாளர்கள் பயன்படுத்தலாம் என அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.

மாஸ் கிரீடா வானவில் டிவிசன், கிளிநொச்சி

 மனித வளப் பிரிவினைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், ஒரு சாரதி மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிய 3 தொழிலாளர்களுக்கு இத் தொழிற்சாலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதை அறிந்த மற்றைய தொழிலாளர்கள் வீடுகளுக்குச் செல்ல விரும்பிய போது தொழிற்சாலைக்கு வந்த பொலிசாரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கலவரமடையவேண்டாம் என்றும் தொடர்ந்து வேலை செய்யுமாறும் கூறினர். தொழிலாளர்கள் வீட்டில் இருந்தால் அவர்கள் தங்களின் தொழிலை இழக்க நேரிடலாம் என உள்ளூர் தொழிற்சாலை முகாமைத்துவம் கூறியது. தங்களின் 3000 தொழிலாளர்களுக்கும் நாளொன்றிற்கு 400 என தொழிற்சாலை முகாமைத்துவம் பிசிஆர் பரிசோதனைகளை நடத்த ஆரம்பித்துள்ளது. நேரடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும் வேறு எங்கும் பயணம் செய்யவேண்டாம் என்றும் தொழிலாளர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.

நொரடெல் இண்டர்நேஷனல், ஸ்டார் கார்மென்ட்ஸ், கிரிஸ்டல் மார்டின் கார்மென்ட்ஸ் மற்றும் ஒகாயா லங்கா பிரைவேட் (லிமிடட்) போன்ற தொழிற்சாலைகளின் ஊழியர்கள் இன்னும் அவர்களின் போனசைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஸ்மார்ட் சேர்ட்ஸ் (லங்கா) லிமிடட் அதன் ஊழியர்களுக்கு ஏப்ரில் புதுவருட மற்றும் வருடாந்த போனஸ்களை வழங்கவில்லை

டயல் டெக்ஸ்டைல் இண்டஸ்டிரீஸ் போன்ற தொழிற்சாலைகளின் ஊழியர்கள் கொவிட் தொற்றின் காரணமாக வேலைக்குச் சமூகமளிக்காமல் இருப்பது பற்றிய முறையான தகவல்களைப் பெற்றுக்கோள்ளவில்லை என்பதுடன் இந்த மாதச் சம்பளத்தினையும் பெற்றுக்கொள்ளவில்லை.

பொதுவான குறைகள்

தொழிற்சாலை உரிமையாளர்களால் வழங்கப்படும் விடுதிகளில் தங்குவதற்குத் தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்படுவதால், குடும்பங்களுடன் வாழ்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒற்றைத் தாய்மார்கள் தங்கள் குடும்பங்களை விடுதியில் விட்டுவிட்டு, தொழிற்சாலை வழங்கியுள்ள விடுதியில் காலவரையின்றி வாழ வேண்டியிருக்கிறது. தொழிலாளர்கள் வழங்கும் வாடகைப் பணத்தினைச் சார்ந்திருக்கும் விடுதி உரிமையாளர்களும் வருமான இழப்புக் காரணமாகப் பல கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். 

போனசுக்குப் பதிலாக, பல தொழிலாளர்கள் பண்டிகைக் கால முற்கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளனர். இது 5 மாதங்களில் கழிக்கப்படுகின்றது. தொழிலாளர்களின் ஏப்ரல் போனசும் வெட்டப்பட்டுள்ளது.

தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களில் சிலர் மட்டுமே திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீண்டும் வேலைக்கு அழைக்கப்படவில்லை.

கொவிட் தொற்றின் காரணமாகச் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சில முக்கியமான பிரச்சினைகள் பின்வருவனவாகும்:

  • வருமானப் பற்றாக்குறை
  • – ஊதியம் வழங்கப்படவில்லை
  • – வருடாந்த போனஸ் கிடைக்கவில்லை
  • – தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல விரும்பினால் பிசிஆர் பரிசோதனைகளுக்கான செலவினை அவர்களே ஏற்க வேண்டும்.
  • – பல தொழிலாளர்கள் தங்கள் விடுதிகளில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பதால், தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் இருக்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தங்களின் குடும்பத்தினைக் காணச் செல்லக்கூடிய வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பொறுத்த அளவில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். இப்போது அவ்வாறு கூடச் செல்ல அவர்களால் முடியவில்லை. மேலும், உதாரணமாக, விதவைகள் மற்றும் ஒற்றைத் தாய்மார்களாக இருக்கும் தொழிலாளர்கள், ஆண்டின் இறுதியில் தங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களுடன் வீட்டிற்குச் சென்று குறைந்தது 1-2 வாரங்களாவது தங்கள் குடும்பத்தினருடன் செலவிட எதிர்பார்க்கிறார்கள். இப்போது அவர்கள் அதையும் இழந்துவிட்டார்கள்.

சில தொழிற்சாலைகள் அவற்றின் தொழிலாளர்களிடம் பலருடனும் பகிர்ந்துகொள்ளும் தங்குமிடங்களில் வசிக்கவேண்டாம் எனக் கூறியுள்ளதுடன் தொழிற்சாலையில் தொடர்ந்து வேலை செய்யவேண்டும் என்றால், தமக்கெனத் தனியான கழிப்பறைகளை வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறும் தமது பெயர் ஒட்டிய மற்றும் பூட்டிடப்பட்ட கழிப்பறையின் புகைப்படத்தினை மனிதவளப் பிரிவிக்கு அனுப்பிவைக்குமாறும் கூறியுள்ளன. இவ்வாறான தனிப்பட்ட தங்குமிட வசதிகளுக்குத் தொழிலாளர்களே செலவழிக்கவேண்டும் எனத் தொழிற்சாலைகள் எதி்ர்பார்க்கின்றன. இவ்வாறான வசதிகளுக்காகத் தொழிலாளர்களினால் பணம் செலவழிக்க முடியாதுள்ளது. இதனால் ஒரே கழிப்பறையில் பெயரை மட்டும் மாற்றி ஒட்டி அவர்கள் படங்களை அனுப்புகின்றனர். தொற்றினைக் குறைப்பதற்கான நோக்கத்தினையே இது சீர்குலைக்கின்றது. தொழிற்சாலைகள் ஒன்றில் இவ்வாறான தனிப்பட்ட தங்குமிடங்களுக்கான செலவினை ஏற்றுக்கொள்ளவேண்டும்  அல்லது தொழிலாளர்களை அவர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் சேர்ந்து வாழக்கூடிய தங்குமிடங்களில் தங்கவைக்கவேண்டும்.

சில தொழிலாளர்கள் அதிகளவில் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுவதால் அவர்களின் தொண்டையில்  காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கட்டாயத் தனிமைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகள்

அவரிவத்தயில் உள்ள ஒரு விடுதியில் 17 தொழிலாளர்களுக்குத் தொற்று உறுதியான காரணத்தினால் அந்த விடுதியில் வசிக்கும் ஏனைய சுமார் 45 தொழிலாளர்கள் நான்காவது முறையாகத் தொடர்ச்சியாகக் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் திரும்பி வருகையில் புதிய தொழிலாளர்களின் ஒரு பிரிவினருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. சீனி, தேயிலை அல்லது சவர்க்காரம் போன்ற அடிப்படையான உலர் உணவுப் பொருட்கள் கூடத் தங்களிடம் இல்லை என்று தொழிலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.  எனவே, இந்த தொழிலாளர்களுக்கு உதவி நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளன. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ரூ. 5000 அல்லது ரூ. 10,000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தும் அவ்வாறான பொதிகளை உள்ளூராட்சி அதிகாரிகளிடமிருந்து பெற்ற பலரும் பொதியில் இருந்த பொருட்களின் பெறுமதி 1000 ரூபா கூட இருக்காது எனக் குறிப்பிட்டனர். மற்றொரு சந்தர்ப்பத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இராணுவத்தினால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் முகாமிற்குக் கணிசமான பொருட்களடங்கிய பெரிய நிவாரணப் பொதிகளை அனுப்பிவைத்தது. ஆனால் இந்தப் பொதிகள் தொழிலாளர்களுக்குக் கிடைத்தபோது கணிசமான அளவு சிறியதாக மாறியிருந்தது. அசல் பொதியில் இருந்த பல பொருட்கள் மாயமாகிவிட்டிருந்தன.

இதேபோல், அவரிவத்தயில் உள்ள மற்றுமொரு விடுதியில் நவம்பர் நடுப்பகுதியில் 19 தொழிலாளர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு 36 ஏனைய தொழிலாளர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். பொலிசார் இந்தத் தொழிலாளர்களுக்கு மாதத் தொடக்கத்தில் சில உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தனர் . இருப்பினும், இப்போது உணவு எல்லாம் முடிவடைந்துவிட்டதால் தொழிலாளர்கள், பொலிசார் மற்றும் பொதுச் சுகாதார அதிகாரிகள் ஆகியோர் முடிந்தால் தொழிலாளர்களுக்கு உலர் உணவுகளை வழங்குமாறு உதவி அமைப்புகளைக் கோரியுள்ளனர்.

தமது விடுதிகளில் கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருக்கும் அல்லது தொற்றுப் பரவலின் காரணமாக நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் பல தொழிலாளர்களின் நலன்களைப் பல தொழிற்சாலை உரிமையாளர்களும் கண்டுகொள்ளவில்லை.

மனிதவளத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

நவம்பர் நடுப்பகுதியில் தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற கூட்டத்தில் , திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமும் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் அதிகாரிகளும் , ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் குறைந்தது 3 மாதங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றிய மனிதவலுத் தொழிலாளர்களின் விவரங்களை தங்களுக்கு வழங்குமாறு தொழிலாளர்களுடன் பணிபுரியும் அமைப்புகளைக் கேட்டுக்கொண்டனர். இதனால் தொழில் இல்லாமல் இருக்கும் தினக் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவினை இவர்களுக்கும் வழங்கலாம் எனக் கூறப்பட்டது. இது வலயத்தில் பணிபுரியும் அமைப்புகளின் ஆதரவும் அரசாங்கத்திற்குத் தேவைப்படுகிறது என்பதற்கான ஓர் அறிகுறியாகும். இருப்பினும், இரு தரப்பினர்களும் இணைந்து செயற்படுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் பல மனிதவலுத் தொழிலாளர்களை அவர்களின் விடுதி வளவினை விட்டு வெளியேறுமாறு விடுதி உரிமையாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கான காரணம் மனிதவலுத் தொழிலாளர்கள் பல தொழிற்சாலைகளிலும் பணியாற்றுகின்ற காரணத்தினால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் உயர்வானது என்பதாகும். ஒன்றில் நிரந்தரத் தொழிலைத் தேடிக்கொள்ளுமாறும் அல்லது விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் உரிமையாளர்கள் இவர்களிடம் கூறியுள்ளனர். மனிதவலுத் தொழிலாளியான பெண் ஒருவர் குறிப்பிடுகையில் தன்னால் வலயத்தில் நிரந்தரத் தொழில் பெற முடியாது என்கின்ற காரணத்தினால் தான் ஊருக்குச் செல்லத் தீர்மானித்துள்ளதாகக் கூறினார். ஆனால் இவர் உயர் அபாயநேர்வு உள்ள பிரதேசத்தில் இருந்து வருவதாகக் கருதப்படுகின்ற காரணத்தினால் இவருக்கு ஊருக்குச் செல்ல முடியாது என இவரிடம் கூறப்பட்டுள்ளது. இதனால் விடுதியினை விட்டு வெளியேறுவதை விடத் தற்கொலை செய்வதே சிறந்தது என இவர் விரக்தியுற்றுக் கூறினார். தனது நிலைமை தொடர்பாக அவரிவத்த பொலிஸ் நிலையத்தில் இவர் முறைப்பாடு செய்ய எண்ணயிருந்தார்.

தொகுத்தவர்கள்:

  • டபிந்து கலக்டிவ், கட்டுநாயக்க
  • ரவலியூசனரி எக்சிஸ்டென்ஸ் போர் ஹியூமன் டிவலப்மன்ட் (ரெட்), கட்டுநாயக்க
  • சிரமபிமானி கேந்திரய, சீதுவ
  • ஸ்டேன்ட் அப் மூவ்மென்ட், சீதுவ

Related posts

Leave a Comment