தொழிலாளவர்க்க சர்வதேச நிறுவனமாக உருவாக்கப்பட்ட ‘கம்யூனிஸ்ட் அகிலம்’ என்ற சர்வதேச அமைப்பை மார்க்சும் ஏங்கெல்சும் வாழ்ந்த போது முதலாவது அகிலம் இரண்டாவது அகிலம் என்ற பெயரில் வழி நடத்தியிருந்தனர். அவர்களுக்குப் பின்னர் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தை லெனின் வழி நடத்திப் பின் ஸ்டாலின் அதற்குத் தலைமை வகித்தார். இக் காலப் பகுதியில் மார்க்சிய தத்துவார்த்தக் கொள்கை முரண்பாடு காரணமாக 1917ல் ருசியப் புரட்சியில் லெனினுடன் இணைந்து போராடிய ட்ரொஸ்கி மூன்றரவது அகிலத்தை நிராகரித்து வெளியேறிச் செயற்பட்ட பின்னணியில் 1938ல் பிரான்ஸ் நாட்டில் நான்காவது(கம்யூனிஸ்ட்) அகிலம் ஆரம்பிக்கப்பட்டது.
இதனுடைய தாக்கம் இலங்கையில் முதலாவது இடதுசாரி அமைப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த லங்கா சம சமாஜக் கட்சிக்குள்ளும்(LSSP) ஏற்பட்டது. நான்காவது அகிலத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட தோழர்கள் தங்களது மார்க்சிய-லெனினிசக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் வகுப்புகள், சொற்பொழிவுகள் ஊடாகவும் சிங்களம், தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளால் ஆன பிரசுரங்கள் மூலமாகவும் இடதுசாரித்துவக் கருத்துக்கள் பற்றிய பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தனர். அதன் விளைவாக அவர்கள் 1940ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ‘ஐக்கிய சோசலிசக் கட்சியை’(USP) தோற்றுவித்தனர்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தையொட்டி ‘யுத்தமும் சோவியத் யூனியனும்’ என்ற அறிக்கையை “ஐக்கிய சோசலிசக் கட்சி” வெளியிட ‘சோவியத் யூனியன் எங்கே செல்கிறது?’ என ‘லங்கா சமசமாஜக் கட்சி’ ஒரு அறிக்கையை வெளியிட்டு சோவியத் யூனியன் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டையும் தங்களுக்கிடையேயான முரண்பாட்டையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.
“சகல விதமான சுரண்டல்கள் – அடக்குமுறைகள் ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட்ட சுதந்திர இலங்கையை உருவாக்குவோம்” எனவும் தத்தமது சுதந்தித்திற்காகப் போராடி வரும் காலனித்துவ நாட்டு மக்களின் போராட்டங்களை ஆதரிக்கிறோம்” எனவும் கூறி தொழிலாளர்களை நிறுவனமயப்படுத்தி பொருளாதாரத்துடன் அரசியற் கோரிக்கைகளையும் இணைத்து காலனித்துவ ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டியதை விரும்பாத அரசு 1942ன் முற்பகுதியில் ‘ஐக்கிய சோசலிசக் கட்சியைத்’(ல.ச.ச.கட்சி உட்பட) தடை செய்தது. இந்தப் பின்னணியில் கட்சி உறுப்பினர்கள் ஒரு புறம் சட்ட மறுப்பாகவும் மறு புறம் சட்ட பூர்வமாகவும் தங்கள் கட்சிப் பணிகளைத் தொடர்ந்தனர். இத்தகைய செயற்பாடுகள் அவர்களை 1943 யூலை 3-4ம் திகதிகளில் இரகசியமாக ஒன்று கூடி “இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியை” (CCP)தோற்றுவிக்கச் செய்தது. 1944ஆம் ஆண்டு யூலை மாதத்தில் இக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இடம் பெற்றது.
அதில், கட்சியின் நீண்ட கால இலட்சியம் ‘பொதுவுடைமைச்(கம்யூனிஸ்ட்) சமுதாயம் அமைப்பதற்கான சோசலிசப் பாதையில் நடை போடுவதே’ எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. தனது உடனடிப் பணி பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை வெளியேற்றி தேசிய சுதந்திரத்தை வென்றெடுப்பதென்றும் அந்த இலக்கினை அடைவதற்காக ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஐக்கியப்படுத்துவதென்றும் பகிரங்கப்படுத்தியது.
மார்க்சிய-லெனினிய சிந்தாந்த அடிப்படையில் தோன்றிய இவ்விரு இடதுசாரிக் கட்சிகளும் இலங்கைத் தொழிலாளர்கள் நலன்களை முதன்மைப்படுத்திப் போராட்டங்களை முன்னெடுத்த அதேவேளை தேசிய விடுதலை வேண்டி ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் செயற்பட்டன. அந்த வகையில் லங்கா சம சமாஜக் கட்சி “இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம்”(CFL-Ceylon Federation of Labour) என்ற அமைப்பையும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி “இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனம்” (CTUF – Ceylon Trade Union Federation – இது முன்னரே ஐக்கிய சோசலிசக் கட்சியினால் உருவாக்கப்பட்டிருந்தது) என்ற அமைப்பையும் வழிநடத்திச் செயற்பட்டன.
1945ல் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து ஆங்கில ஆட்சியாளர்கள் தொழிலாளர்களை மேலும் கொடூரமாக கசக்கிப் பிழிய முற்பட்டதனால் தொழிற்சங்கப் போராட்டங்களும் சூடு பிடிக்கத் தொடங்கின. வெவ்வேறு பல தரப்பட்ட வகையான தொழில்களிலும் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தங்களுக்கென சங்கங்கள் அமைத்து தங்கள் உரிமைகளைக் கோரி வேலைநிறுத்தப் போராட்டங்களை நடாத்தினர். இந்தப் போராட்டங்கள் யாவும் தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரித்துவ சிந்தனைக் கருத்துக்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாகவே இடம் பெற்றன.
1940களில் இடம் பெற்று வந்த இந்தப் போராட்டங்களினால் தொழிலாளர்களுக்கு வெற்றி மட்டுமல்ல தோல்விகளும் அத்துடன் பாதிப்புகளும் ஏற்பட்டன. தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்கள் பொலிசாரின் வன்முறைக்கும், கைதுகள் துன்புறுத்தல்களுக்கும், சிறையிருப்புக்கும் ஆளானார்கள். பல போராட்டங்கள் மிகவும் கொடூரமான முறையில் அடக்கியொடுக்கப்பட்டன.
மேற்படி வளர்ந்து வந்த தொழிற்சங்க நடவடிக்கைகளில் சம சமாஜிகளுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இரு கட்சிகளுக்கிடையேயான இந்தப் போட்டி அதாவது ஒருமைப்பாடின்மை ஆனது தொழிலாளர் போராட்டங்கள் சிலவற்றை தோல்விக்கும் இட்டுச் சென்றது
1947 ஆண்டின் முற்பகுதியில் பலதுறைகளிலும் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி வேலைநிறுத்தப் போராட்டங்களை மேலும் அதிகரிக்கச் செய்தது. இது தொழிற்சங்கங்களின் ஐக்கியத்தையும், போராட்டத்திற்கான ஒரு கூட்டுத் தலைமையின் அவசியத் தேவையையும் உணர்த்தியது. இதனடிப்படையில் இரு இடதுசாரிகளும் இணைந்து “வேலைநிறுத்த நடவடிக்கைக்கான கூட்டு செயற்குழு” ஒன்றினை ஏற்படுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்த போராட்டங்களை மேற் கொண்டனர்.அந்த வகையில் 1947 யூன் மாதத்தில் இடம் பெற்ற வேலைநிறுத்தப் போராட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் மீது பொலிசார் மேற் கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அரசாங்க எழுதுவினைஞர் சங்க உறுப்பினரான வி.கந்தசாமி என்ற இளைஞன் கொல்லப்பட்டான். சிங்கள தமிழ் முஸ்லீம் தொழிலாளர்களை உள்ளடக்கிய ஊர்வலத்தின் முன்வரிசையில் ஒரு தமிழ் ஊழியர் நின்று ஆளும் வர்க்க பொலிசாரின் துப்பாக்கிக் குண்டை தனது நெஞ்சில் ஏற்றுத் தொழிலாள வர்க்கம் சார்பில் தனது உயிரைப் பலி கொடுக்கும் வர்க்க உணர்வே அன்றைய தொழிலாளர்கள் மத்தியில் நிலவியிருந்தது.