“நானும் நீங்களும் ஒரே அலைவரிசையில் தான் செயற்படுவதாக நம்புகிறேன்”. – சி.வி.விக்னேஸ்வரன்.

ஒரு தனித் தேசமாக கருதப்படுவதற்குத் தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களான எங்களுக்கு உண்டு”

“கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன்”.  அவரை எல்லோரும் சி.வி.விக்னேஸ்வரன் என்று அழைக்கின்றனர். 2013ல் அவர் வட மாகாண சபையின் முதலமைச்சரானார். தற்போது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்(TMNK) தலைவராக யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழ் மக்கள் கூட்டணிச்(TMK) செயலாளர் நாயகமாகவும் விளங்குகிறார்.

1939ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ந் திகதி பிறந்த விக்னேஸ்வரன் தனது ஆரம்ப கால வாழ்க்கையை குருணாகல் மற்றும் அனுராதபுரத்தில் தனது குடும்பத்துடன் கழித்தார். அதன் விளைவாக அவரால் சிங்கள முஸ்லீம் மக்கள் மற்றும் ஏனைய சகல சமூகத்தினருடனும் மிக நெருக்கமான உறவை கட்டியெழுப்பக் கூடியதாக இருந்தது.

இளம் விக்னேஸ்வரன் 1951ல் கொழும்பு ராயல் கல்லூரியில் சேர்ந்தார். படிக்கும் போதே தியத்தலாவையில் பயிற்சி பெற்ற படைப் பயிற்சியாளன்(Cadet). கல்லூரியில் மாணவர் கண்காணிப்பாளர்(Prefect), ஆங்கில விவாதக் குழு உறுப்பினர் மற்றும் தமிழ் விவாதக் குழுத் தலைவர் முதலான பதவிகளை வகித்தவர்.

1960ல் இலங்கை சட்டக் கல்லூரியில் நுழைந்த சி.வி.விக்னேஸ்வரன் 1962 முதல் 1963 வரையிலான காலப் பகுதியில் சட்ட மாணவர் ஒன்றியத்தின் தலைவராக விளங்கினார். 1964ல் சட்டத்தரணியாகப் பட்டம் பெற்ற அவர் 1971ஆம் ஆண்டு முதல் இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அத்துடன் லண்டன் பல்கலைக் கழகம் மற்றும் இலங்கைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் முறையே பி.ஏ.(B.A.),  எல்.எல்.பி.(LLB) பட்டங்களை பெற்றுக் கொண்டார்.

1979ல் நீதித்துறையில் சேர்ந்த அவர் வடக்கு கிழக்கில் மாவட்ட நீதிபதியாகவும், மாஜிஸ்ரேட் ஆகவும், கொழும்பு உட்பட மாவட்ட நீதிபதியாகவும், கொழும்பு உட்பட உயர் நீதிமன்ற நீதிபதியாகவும்(1988), மேன்முறையீட்டு நீதிபதியாகவும்(1995) இறுதியில் உச்ச மன்ற நீதிபதியாகவும் கடமையாற்றி 2004ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

15 வருடங்கள் கொழும்பு கம்பன் கழகத்தின்(தமிழ் இலக்கியம்) காப்பாளராகச் செயற்பட்டவர். பல தமிழ் ஆங்கில நூல்களின் ஆசிரியர். இந்து மதம் வரலாறு சட்டம் மற்றும் பல விடயங்கள் பற்றி பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளை எழுதியவர்.


‘இடது குரல்’ சார்பில் சமந்த ராஜபக்ச இன்று பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிடம் அரசியல் ரீதியான கேள்விகளை எழுப்புகிறார். நேர்காணல் செய்யும் இவர் பாரிஸ், பிரான்சில் உள்ள சோர்போன் பல்கலைக் கழகத்தின்(Sorbonne Université) சமூக மற்றும் தொழிற் சங்கச் செயற்பாட்டாளர் ஆவர். அவரது ஈடுபாடு பிரான்சில் உள்ள சி.ஜி.ரி.யின்(CGT) பொதுத்துறைக் கல்வித் தொழிற் சங்கத்தில் உள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களின் தற்போதைய அவலநிலை பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா?

 தமிழர்கள் ஒரு பண்டைய இனத்தவர். தமிழ் பேசும் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள். முதலில் சைவர்கள் முழுத் தீவையும்  ஆக்கிரமித்து இருந்தனர். வரலாற்றுக்கு முற்பட்ட சிவன் கோவில்களான நகுலேஸ்வரம்(வடக்கில் கீரிமலை), திருக்கேதீஸ்வரம்(மன்னார் மாவட்டம்), திருக்கோணேஸ்வரம்( கிழக்கு திருகோணமலை மாவட்ம்), முன்னேஸ்வரம்(மேற்கு சிலாபம் மாவட்டம்) மற்றும் தொண்டேஸ்வரம்(தெற்கு தேவேந்திர முனை) ஆகியவை இந்தத் தீவு மக்களின் ஆதி சமயம் சைவம் என்பதனைக் காட்டுகின்றன. பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள் மற்றும் வேறு பலரின் வெற்றிகள் இலங்கையில் தமிழரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளன. தொடர்ச்சியாக சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் சிங்களம் பேசுவோருக்குச் சார்பாக வடக்கு கிழக்கில்  மக்கள் தொகையை மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும்  இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி பேசும் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். ஆனால் சிங்களமயமாக்கலும், நில அபகரிப்பும் இன்றும் வடக்கு கிழக்கில் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அரசியல் யாப்பின் சரத்து 29(2) வது பிரிவை நீக்கியதனூடாக ஆங்கிலேயரையும் தமிழ் பேசும் மக்களையும் ஏமாற்றிய சிங்களத் தலைவர்கள் தமிழ்ப் பேசும் மக்களை அடிபணியும் இனமாக ஆக்கும் வகையில் அரசாங்கத்தின் ஆட்சியை முழுத் தீவின் மேல் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்தும் வடக்கு கிழக்கில் இன்னமும் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தை வைத்திருக்கிறார்கள். எங்களது வளங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தொடர்ந்து நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மொழி பேசுவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. 60,000 ஏக்கர் அரசாங்க காணிகளையும் 3000 ஏக்கர் தனியார் காணிகளையும் இராணும் தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துள்ளது. பல தரப்பட்ட சாக்குப் போக்குகளின் கீழ் அரசாங்க அனுமதியுடன் வடக்கு கிழக்கு பௌத்த பிராந்தியமாக மாற்றப்பட்டு வருகிறது. அரச சேவைகளுக்கு தமிழர்கள் உள்வாங்கப்படுவது மேலும் மேலும் குறைவடைந்தபடி சென்று கொண்டிருக்கிறது. வேலையின்மை அதிகரித்துள்ளது. தமிழ் பேசத் தெரியாதவர்களே வடக்கு கிழக்கில் பொலிசாராக உள்ளனர். கொடுக்கப்படும் புகார்கள் சிங்களத்தில் பதியப்பட்டு மொழி பெயர்க்கப்படுகின்றன. முதலமைச்சராக நான் இருந்த போது மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தும் போருக்குப் பின்னரான வடக்கு கிழக்கில் சரியான தேவைகளின் மதிப்பீடோ அன்றி பொருளாதாரத் திட்டமிடலோ மேற் கொள்ளப்படவில்லை. வடக்குக் கிழக்கில் கல்விக்கு மாற்றாந் தாய் மனப்பான்மை காட்டப்படுகிறது. வேறு பல துறைகளிலும் இதே நிலைமைதான். ஒரு தேசம் என்கிற வகையில் தங்களது பாரம்பரிய தாயகத்தின் நிர்வாகம் மற்றும் ஆளுகை மீது எதுவித கட்டுப்பாடும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இல்லை. நாங்கள் ஒரு அடிமைப்படுத்தப்பட்ட இனம்.

இலங்கையில் முதல் நிறுவப்பட்ட தமிழ் அரசியல் கட்சி ‘அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்’ ஆகும். தற்போது 20க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. தமிழ் மக்களிடையே காணப்படும் இந்தப் பிளவுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர்களாகிய நாங்கள் ஜனநாயகத்தை மிகவும் அக்கறையுடன் பின்பற்றுகிறோம் என்பதையே அது காட்டுகிறது. எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது கட்சிக்கோ ஆதிக்கம் செலுத்தவோ ஆணவப்படுத்தவோ உரிமை வழங்கப்படவில்லை. அது எப்படி இருந்த போதும் கொள்கை மற்றும் நோக்கம் தொடர்பில் அடிப்படையில் பெரும்பான்மையான கட்சிகளிடையே அதிக வேறுபாடுகள் கிடையாது. ஒட்டுமொத்தமாக சமூகத்தைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைகளில் இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். உதாரணத்திற்குக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒன்றிணைந்தே எதிர் கொள்ள வேண்டும்.

நீங்கள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர். ஆகவே தேசங்கள் இணைந்து இலங்கையர்கள் ஆவதற்கான உங்கள் யுக்தி யாது என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துவீர்களா?

இதனை அடைவதற்கான சக்தி “உண்மை”யில் தங்கியுள்ளது. இந்த நாட்டின் உண்மையான வரலாறு பற்றி சாதாரண மக்களுக்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சிங்கள மக்களின் உண்மையான வரலாற்றை தமிழ் மக்களும் தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றைச் சிங்கள மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இந் நாட்களில் என்னால் முடிந்த வரை அதனை நான் செய்து வருகிறேன். இதே போல் இறுதி யுத்தத்தின் போது நடந்த உண்மைகளை சிங்கள மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். யுத்தத்தில் கொல்லப்பட்டோர் எத்தனை பேர்? சரணடைந்த மக்கள் மற்றும் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதை சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் நாம் சுயாதீன சர்வதேச விசாரணையைக் கோருகிறோம். எவரையும் தூக்கில் தொங்க வைப்பதற்காக நாம் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கவில்லை. சிங்களவர் சரி, தமிழர்கள் சரி மக்கள் உண்மையை அறிந்திருக்க வேண்டும். சிங்கள மக்களை இருட்டுக்குள் வைத்துக் கொண்டு நாம் நல்லிணக்கத்தை நாடமுடியாது.  “உண்மை”யே நல்லிணக்கத்திற்கான வழியாகும். இருக்கின்ற சக்திகள் “உண்மை”யை விலக்கி வைத்துக் கொண்டு அதற்குப் பதிலாக பொய்களை வழங்க முயற்சிக்கின்றன. ஏப்ரல் 21 துயரம் சம்பந்தமாகக் கூட “உண்மை”கள் வெளிவர வேண்டும். உண்மைகளை அறிந்து கொள்வதற்காக உள்ளூர்வாசிகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் உதவுவதே எங்களுடைய யுக்தியாகும். 

1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து கடந்த 73 ஆண்டுகளாக தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றன. கடந்த தேர்தல்களுக்குப் பின்னர் தமிழர்கள் தங்கள் பேரம் பேசும் சக்தியை இன்று இழந்துள்ளனர். வருங்காலத்தில் அவர்களின் அரசியல் போராட்டத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கடந்த தேர்தல்களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் தங்களது பேரம் பேசும் சக்தியை இழந்து விட்டார்கள் என்னும் கூற்றை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீங்கள் கூறும் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி நல்லாட்சி ஆளுகையின் போது தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவியதா? ஒரு காலத்தில் தமிழ் மக்களுக்கு மிகப் பிரமாண்டமான பேரம் பேசும் சக்தி இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த நன்மையை சமூகத்தின் மேம்பாட்டுக்காக நாம் பயன்படுத்தவில்லை. எவ்வாறாயினும் கட்சிகளின் பெருக்கம் காரணமாக எமக்குப் பேரம் பேசும் சக்தி இல்லை என அரசாங்கமோ அன்றி வேறெவரோ கணக்கிடுவது தவறாகும். எமது வலிமை உலகெங்கிலும் வாழும் மில்லியன் கணக்கான தமிழ் மக்களிடம் உள்ளது. ஜனநாயக வழிமுறைகள் ஊடாக அவர்களின ஆதரவை நாம் சரியாகப் பயன்படுத்தும் போது நீங்கள் குறிப்பிட்ட அந்த பேரம் பேசும் சக்தியை நாங்கள் மறுபடி பெற்றுக் கொள்ள முடியும். இதே போல் நமது அறிவையும், பொருளாதாரத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் போது நம்முடைய பேரம் பேசும் சக்தியை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். நம்மை நாம் மீளக் கட்டியெளுப்பக் கூடியதொரு வாய்ப்பை உலகம் வாழ் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது. அரசியலிலும் மற்றும் பொருளாதாரத்திலும் நாம் புதுமையாகச் சிந்தித்துத் செயற்படுவோமேயானால் நாம் மிகப் பெரிய பேரம் பேசும் சக்தியை அடைந்து கொள்ள முடியும். அதே வேளை அரசாங்கம் நம்மை எந்தளவுக்கு அதிகமாக ஒடுக்குகிறதோ அதே போல் எமது பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கும் என்பதே உண்மையாகும். எமது அரசியல் போராட்டம் உலகம் வாழ் தமிழருக்கும் உள்ளூர் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையில் ஒருங்கிணைக்கப்படல் வேண்டும்.

சுயநிர்ணய உரிமை மற்றும் பிரிவினைவாதம் என்பவை பற்றிய உங்கள் பார்வையை எங்களுக்கு விளக்கமாக கூறமுடியுமா?

வயதுக்கு வந்து திருமணம் முடித்த மகன், தான் (பிறந்த) பரம்பரை வீட்டு எல்லைக்குள் தனியாக வாழ முடிவு செய்தால் அது சுயநிர்ணயமாகும். பரம்பரைவீட்டின் எந்தவொரு பகுதியையும் விட்டு வெளியேறித் தனது குடும்பத்தைத் தனியாக வேறொரு இடத்தில் அமைக்க முடிவு செய்தால் அது பிரிவினைவாதமாகும்.

ஒரு சிங்கள அரசியல் செயற்பாட்டாளர் என்கிற வகையில் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களின் சுயநிர்ணயத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்களும் அதே மனப்பான்மையுடன் இருக்கிறீர்களா?

மனிதக் குழுக்களின் சுயநிர்ணயம் என்பது சர்வதேச சட்டத்தால் அத்தகைய பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு உரிமையாகும். ஒரு தனித் தேசமாக கருதப்படுவதற்குத் தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களான எங்களுக்கு உண்டு. புதிய அரசியலமைப்பை உருவாக்க நியமிக்கப்பட்ட ரொமேஸ் டி சில்வா கமிட்டியிடம் ஒரு கூட்டிணைவு அரசியலமைப்பைக் கேட்டுள்ளோம். நானும் நீங்களும் ஒரே அலைவரிசையில் தான் செயற்படுவதாக நம்புகிறேன்.

சாதி அடிப்படையிலான மனோநிலை வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் வாழும் சமூகத்திற்கு ஒரு பேரழிவாகும். இந்த சாதி முறைமையை முறியடிக்கும் வழியைக் காட்டமுடியுமா?

கல்வியும், அன்பும் சாதி முறைமையை முறியடிக்கக் கூடிய இரு ஆயுதங்கள் ஆகும். கல்வி மக்களிடம் அறிவொளியைக் கொண்டு வரும். அது மனிதன் பிறக்கும் போது சமம் என்பதை வலியுறுத்தும். ஆனால் மக்களின் மனங்களை காலாவதியாகிப் போன கட்டுப்பாடுகள் பற்றிப் பிடித்தபடி இருப்பதால் அவர்கள் சங்கிலிகளால் கட்டுண்டு கிடக்கிறார்கள். நமது இதயங்களில் உள்ள அன்பு கல்வியால் நாம் புரிந்து கொண்டதை நிறைவேற்றுவதற்கும் அறிவொளி காட்டும் இலக்குளை அடைவதற்குமான சக்தியைத் தரும். 

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் இந்தியா அல்லது சர்வதேச சமூகம் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்களா?

சர்வதேச சமூகமும், இந்தியாவும் எங்கள் உரிமைகளை வென்றெடுத்துத் தரும் என நான் நம்பவில்லை. ஆனால் இந்தியாவையும், சர்வதேச சமூகத்தையும் நாம் ராஜதந்திரத்தோடும் புத்திசாதுரியத்தோடும் அணுகுவோமானால் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என நான் நம்புகிறேன். இதற்காக எமது சகல அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கக் கூடிய வகையில் சிந்தனைத் தொட்டிகள்(Think Tank) நிபுணர்கள் குழுமங்கள்(Expert Committees) போன்ற அடிப்படை நிறுவன அலகுகளை நாம் கட்டியெழுப்ப வேண்டும். 

இலங்கை இடது மற்றும் சோசலிச கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? உதாரணத்திற்கு, ம.வி.மு.(JVP) மு.சோ.க.(FSP) ல.ச.ச.க.(LSSP) ந.ச.ச.க.(NSSP) இடது குரல்(Left Voice) போன்றவைகள்?

எனக்கு இருந்தது. ஆனால் அவர்கள் இதயங்களும், மனங்களும் இனவாதத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததிலிருந்து அந்த நம்பிக்கை இல்லை. அவர்கள் இப்போது வெறும் புத்தகப் பூச்சிகளே. நெஞ்சத்தில் அவர்களும் ஏனைய இனவாதச் சிங்கள மக்களைப் போன்றவர்களே. வெறுப்பு இன்றி அன்பை இதயத்தில் வைத்திருக்கும் சிங்கள மக்கள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.    

தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி என்கிற வகையில் சுதந்திரமாகப் பேசக்கூடிதான பல விசேட சலுகைகள் உங்களுக்கு உண்டு. ஆனால் சாதாரண குடிமக்களின் பேச்சுச் சுதந்திரம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் அச்சுறுத்தப்படுகிறது. உங்களது அறிக்கைகள் பேச்சுக்கள் நாட்டில் இனங்களுக்கிடையே பதட்டத்தைத் தூண்டுவதாக ஒரு குற்றச் சாட்டு உங்கள் மீது சுமத்தப்படுகிறது. நீங்கள் நல்லிணக்கத்திற்கு எதிரானவரா?

என் வாழ்க்கையை நீங்கள் பார்த்தீர்களானால் நான் எப்போதும் அமைதி, நல்லிணக்கம், செழிப்பு ஆகியவற்றின் பக்கமே. நான் கிட்டத் தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே வன்முறையைத் தவிர்த்து விட்டேன். ஆனால் பிழையாக தகவமைக்கப்பட்ட இனவாதிகளை அணுகி அவர்களுக்கு உண்மையைக் கூறினாலும் அவர்கள் எனது கருத்துக்களைத் திரிபுபடுத்தியே பார்க்கிறார்கள். அது எனது கர்மா ஆக இருக்க வேண்டும்.

நேர்காணல்:  சமந்த ராஜபக்ச
Spread the love

One Reply to ““நானும் நீங்களும் ஒரே அலைவரிசையில் தான் செயற்படுவதாக நம்புகிறேன்”. – சி.வி.விக்னேஸ்வரன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *