இலங்கை அரசியலில் இடதுசாரிகளின் வகிபாகம்.

இலங்கையில் ஆங்கிலேயரின் காலனி ஆட்சியில் அன்று காணப்பட்ட பணக்கார மேலாதிக்க வர்க்கத்தினர், காலனித்துவம் வழங்கிய சகல சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு நாட்டு மக்களை அடக்கி ஆண்டு கொண்டிருந்த வேளையில், இலங்கை காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று சுதந்திரம் அடைய வேண்டும் என்று குரல் கொடுத்து அதற்கான போராட்டங்களை ஆரம்பித்தவர்கள் அன்றைய இடதுசாரிகளே. 


இந்த இடதுசாரித்துவ சிந்தனாவாதத்தின் தோற்றம் அன்றைய இலங்கையில் புதிதாக ஏற்படுத்தப் பட்டிருந்த கொழும்பு பல்கலைக் கழக கல்லூரி மாணவர்கள், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள், இந்திய பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்று நாடு திரும்பியிருந்த இளைஞர்கள் ஆகியோரின் மத்தியில் இருந்து தான் முளை விட்டுக் கிளம்பியது. அதன் முதற் படியாக 1926ல் ‘யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ்’(JSC)உருவாகியது. பின்னர் அது ‘யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்’(JYC) ஆக பெயர் மாற்றம் பெற்றது. அன்றைய இந்திய விடுதலைப் போராட்டம் இந்த இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் இவர்களை இலங்கையின் சுதேசிய விடுதலைக்காக உழைப்பதற்குத் தூண்டியது. 

அன்றைய  கால கட்டத்திலேயே ஆங்கிலேயரின் பிரித்தாழும் சூழ்ச்சியின் கீழ் அவர்களின் சேவகர்களாக விளங்கிய மேலாதிக்க சுதேச அரசியல் வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக மக்களை இன மத சாதி பால் பிரதேச அடிப்படையில் பிளவுபடுத்தப் போகிறார்கள் என்பதை நன்கறிந்து கொண்ட இளைஞர்கள்  ‘நாட்டின் விடுதலை என்பது காலனித்துவத்துவ அடக்குமுறையை மட்டுமல்ல நாட்டு மக்களின் இன மத சாதி பால் பிரதேச வர்க்க அடக்கு முறைகள் அனைத்தும் உடைத்தெறிவதாக அமைய வேண்டும்’  என்ற கோட்பாட்டுடன் செயற்படத் தொடங்கினர். 

அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய வேண்டும் என்ற இந்த இளைஞர்களின் கோட்பாடு அவர்களை முற்போக்கு நடவடிக்கைகளுக்குத் தூண்டியது. அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவர்கள் அறியாமலேயே(அன்றைய சோவியத் புரட்சி பற்றி) இடதுசாரித்துவ சிந்தனைகளை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன. அவர்களுடைய வருடாந்த மாநாடுகளில் உரையாற்ற தென்னிலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட கல்விமான்கள், புத்திஜீவிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இனவாத அரசியல் தவிர்க்கப்படல் வேண்டும் என்பதில் இந்த இளைஞர்கள் மிக விழிப்புடன் செயற்பட்டனர். ஆங்கிலேயரிடமிருந்து மீட்கப்படும் இலங்கையின் சுதந்திரம் நாட்டின் சகலருக்கும் இன மத சாதி பால் பிராந்திய பாகுபாடின்றி சமத்துவமாக பயன்பட வேண்டும் என்பது அவர்களது குறிக்கோளாக இருந்தது.

படித்தவர்களுக்கும், சொத்துடையோருக்கும் மட்டும் வாக்குரிமை என்றிருந்த நிலையில் டொனமுர் அரசியல் யாப்பு(டொ.அ.யா.) ஊடாக 1931ல் வெகுஜன வாக்குரிமையை ஆங்கிலேயர் அமுலுக்குக் கொண்டு வரும் போது அப்போதைய நடைமுறையில் இருந்த அரசியல் சபை உறுப்பினர்கள் இன மத வேறுபாடின்றி பெண்களுக்கும், படிக்காத பாமரர்களுக்கும் வாக்குரிமை தேவையில்லை என ஆங்கிலேயருடன் வாதிட்டனர். அதேவேளை இலங்கை மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று கூறி யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் அந்த டொ.அ. யாப்பை எதிர்த்ததுடன் 1931/ 1934 தேர்தல்களையும் பகிஸ்கரித்தது.

நாட்டில் இன மத சாதி பால் பிராந்திய பாகுபாடில்லாத ஒரு சமத்துவ சமுதாயத்தை கட்டியெழுப்பும் குறிக் கோளுடன் செயற்பட்ட யா.இ.கா. க்கு இலங்கை பூராவும் பரவலான ஆதரவு பெருகி வந்தது. அதே சமயம் மேலாதிக்க சாதி சமய பழமைவாதிகளின் கடுமையான எதிர்ப்பும் இருந்தது. 1931ன் அரச சபைத் தேர்தலில் மக்களால் தெரிவான தமிழ் பிரதிகள் அரச சபைக்கு சென்றதன் பின்னர் மெல்ல மெல்ல மேலாதிக்க பணக்கார சாதி சமய பழமைவாதிகளின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கிய அதே காலப் பகுதியில் 1935ல் இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

(தொடரும்)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *