இலங்கை அரசியலில் இடதுசாரிகளின் வகிபாகம் (முன்னைய கட்டுரைத் தொடர்ச்சி)

ஆங்கிலக் காலனித்துவ ஆட்சியினர் 1815ல் முழு நாட்டையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் படிப்படியாக அன்று வரை காணப்பட்ட இலங்கையின் தன்னிறைவுப் பொருளாதார நடைமுறையை மாற்றி இலங்கைத் தீவை தனது காலனித்துவப் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஏற்ற நாடாக (அதாவது நிலப்பரப்பாக) மாற்றியதுடன் குடிமக்களை அடிமைகளாகக் கருதி தனது நிர்வாகத்தை மேற் கொண்டு வந்தனர்.


அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை மக்கள் தங்களது தனித்துவம் கொண்ட பொருளாதார, அரசியல், சமூக, கலாச்சார சுதந்திரத்தை இழந்தவர்கள் ஆனார்கள். எனினும் அந்நியரின் ஆதிக்க சுரண்டல் ஆட்சி முறைக்கெதிரான கசப்புணர்வும் அதையொட்டிய எதிர்ப்புக்களும் மெல்ல மெல்ல உருவாகி 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் சமய கலாச்சார வடிவங்களுக்கு ஊடாக வெளிப்படுத்தப்பட்டு வளர ஆரம்பித்திருந்தன. 


இதே காலப் பகுதியில் மேலை நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துத்தின் வளர்ச்சியும் அவற்றின் ஏகாதிபத்திய போக்குகளும் அந் நாடுகளுக்கிடையே சந்தைக்கான போட்டிகளின் அடிப்படையில் யுத்தங்களைத் தோற்றுவித்து இறுதியில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாவது ‘உலக மகா யுத்தம்’(1914-18) ஒன்றிற்கு வழிகோலியது. இந்த யுத்தத்தின் பாதிப்பு இலங்கையிலும் பிரதிபலித்தது.

 
இவற்றின் பின்னணியில் இலங்கையின் தலைநகரான கொழும்பில் 1890களிலிருந்து தொழிலாளர்கள் நலன் தொடர்பான நடவடிக்கைகள் இடம் பெற்று வந்தன. அதேவேளை இளைஞர்களுடைய அணிதிரட்டல்களும் இடம் பெற்றது. இதன் பயனாக 1910ன் ஆரம்ப காலத்தில் ‘இலங்கை இளைஞர் கழகம்’(Ceylon Youth League) தொடங்கப் பெற்றது. அது அந்நியர் ஆட்சியை எதிர்க்கும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதனுடைய தாக்கமே ‘யாழ்பாண இளைஞர் காங்கிரஸ்’(JYC) தோன்றுவதற்கும் அடிப்படையாக அமைந்திருந்தது.


1919ல் ‘இலங்கைத் தொழிலாளர் நலச் சங்கம்’(Ceylon Workers Welfare Association) ஒன்று உருவானது. 1922ல் ‘இலங்கைத் தொழிற் சங்கம்’(Ceylon Labour Union) அமைக்கப்பட்டது. 1928ல் ‘இலங்கைத் தொழிற்சங்க காங்கிரஸ்’ (Ceylon Labour Union Congress)உதயமானது. அதே ஆண்டில் ‘இலங்கைத் தொழிலாளர் கட்சி’ (Ceylon Labour Party)ஆரம்பிக்கப்பட்டது.  இதே காலப் பகுதியில் ரயில்வே ஊழியர்கள்(1923) துறைமுகத் தொழிலாளர்கள்(1927) ‘டிராம் வண்டி ஊழியர்கள்’(1929) ஆகியோரின் வேலைநிறுத்தங்கள் இடம் பெற்றன.


1920க்கும் 1930க்கும் இடையில் இலங்கையிலிருந்து மேற்படிப்புக்காக சிங்கள தமிழ்ப் பணக்கார மேல் தட்டு வர்க்க குடும்ப இளைஞர்கள் லண்டன் சென்று பட்டம் பெற்றுத் திரும்பினர்.  மார்க்ஸியத் தத்துவத்தை நடைமுறைப்படுப் படுத்தும் வகையில் 1917 ஒக்டோபரில் அமைந்த சோவியத் புரட்சி லண்டனில் கல்வி கற்றுக் கொண்டிருந்த இந்த உயர் தட்டு வர்க்கப் பணக்கார இலங்கை மாணவர்கள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களில் பலர் ‘மார்க்ஸிச வாத சிந்தனையை’உள்வாங்கியவர்களாகவும்,  ‘பொதுவுடைமைக் கருத்துக்களை’ முன்னிறுத்துபவர்களாகவும் இருந்தனர். நாடு திரும்பியதும் இவர்களது செயற்பாடுகள் தொழிலாளர்களின் மத்தியிலேயே அமைந்திருந்தன.


அந்த வகையில் லண்டனில் இருந்து இடதுசாரிக் கருத்துக்களுடன் நாடு திரும்பியிருந்த மேற்படி இளைஞர்கள் ஏற்கனவே கொழும்பு தெற்கில் செயற்பட்டுக் கொண்டிருந்த ‘இலங்கை இளைஞர் கழகத்துடன்’(CYL) இணைந்து சிங்கள மொழியில் ‘கம்கறுவ’(தொழிலாளர்)என்ற பத்திரிகை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் பின்னணியில் 1932ல் வெள்ளவத்தை நெசவு நூற்பு ஆலைத்(Wellwatta Spinning & Weaving Mill) தொழிலாளர் மேற் கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். இதனைத் தொடர்ந்து 1933ல் அதற்கு முன்னரே முதலாவது உலக யுத்தம் முடிவுற்றதன் பின்னர் – 1919-20களில்) ஆரம்பிக்கப்பட்டிருந்த ‘சூரியா மல் இயக்கத்திற்குப்(Suriya Mal Movement) புத்துயிர் அளித்து ‘சமாதானம் ‘விடுதலை’ என்ற பதாகைகளுடன் அவற்றை காலனி ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையாக முன்னெடுக்கத் தொடங்கினர். 


1934-35ல் நாட்டில் ஏற்பட்ட மலேரியா தொற்று நோய்(Malaria Epidemic) இடரின் போது மலையக மக்கள் மத்தியில் ஏற்கனவே நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்த இளைஞர் கழக உறுப்பினர்களுடன் நாடு திரும்பிய மார்க்ஸிச சிந்தனை படைத்த இளைஞர்களும் சேர்ந்து முன்னரங்கில் நின்று தொண்டர் படையாகச் செயற்பட்டனர். இத்தகைய செயற்பாடுகளின் போது மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டும் வகையிலான பிரசுரங்கள் வெளியீடுகள் மூலம் பிரச்சாரங்கள் மேற் கொள்ளப்பட்டன. இந்த மலேரியா நோய் தடுப்புப் பணிகளின் ஊடாக தேசிய விடுதலைக்கான உணர்வும் அன்றைய காலனித்துவ ஏகாதிபத்திய வாதத்திற்கு எதிரான எதிர்ப்பும் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. அத்துடன் தொழிற்சங்கப் போராட்டங்களில் இவர்கள் கடைப்பிடித்த அணுகு முறைகள் காரணமாக தொழிலாளர் மத்தியிலும் இவர்களுக்கு செல்வாக்கு வளரத் தொடங்கியிருந்தது.


இந்நிலையில் அன்றைய காலகட்டத்தில் காணப்பட்ட தொழிற்சங்கத் தலைமைகளின் தவறான போக்குகள் கொடுத்த படிப்பினைகள் ஒரு கட்சியை உருவாக்கும் அவசியத்தை  மார்க்ஸிய வாத சிந்தனை கொண்டிருந்த இந்த இளம் தலைமுறையினருக்கு ஏற்படுத்தியது. இவற்றின் பின்னணியில்  1935ன் பிற் பகுதியில் தோற்றுவிக்கபட்டதே இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான ‘லங்கா சம சமாஜக் கட்சி’(LSSP) ஆகும்.

(தொடரும்)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *