ஒரு நிகழ்ச்சி நிரலற்ற இடதுசாரிகள்

1930ல் இருந்து குறைந்தது ஐந்து சகாப்தங்களாவது நமது நாட்டின் அரசியலில் இடதுசாரி இயக்கம் மிக வலுவான நீண்ட பங்களிப்பைக் கொண்டுள்ளது என்பது ஒழிவு மறைவானதல்ல. பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திட மிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான போராட்டத்தில் இடதுசாரி இயக்கம் ஒரு முன்னோடியான பாத்திரத்தைக் கொண்டிருந்தது.

சம சமாஜ இயக்கத்தின் ஆரம்பம். 


1930ல் ஆரம்பிக்கப்பட்ட ‘சூரியமல்’ இயக்கத்தின் பின் உருவான லங்கா சம சமாஜக் கட்சி ஒரு தெளிவான அரசியல் நிகழ்சி நிரலைக் கொண்ட இயக்கமாகும். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இலங்கையை விடுவித்தல்,  பூரண தேசிய சுதந்திரத்தை அடைதல், அனைவருக்கும் நியாயமான ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உற்பத்தி மற்றும் விநியோகத்தை தேசிய உடைமையாக்குதல் என்பனவே அதன் ஸ்தாபகக் கொள்கைகளாகும். அதன் அடிப்படையில் துன்பப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரு இடைக்காலத் திட்டத்தையும் கொண்டு வந்தனர். மேலும் அவைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு மக்களைத் தயார்ப் படுத்தினர். உண்மையில் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக ஒரு புரட்சிகரப் போரை தொடங்கும் நோக்கத்துடன் தோட்டத்துறை உட்பட நகர்ப்புறத் தொழிலாள வர்க்கத்தில்  ஒடுக்கப்பட்ட மக்களை வழி நடத்திய ல.ச.சமா.கட்சி தவிர்க்க முடியாமல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாக ஏகாதிபத்தியம், ஆங்கில ஆதிக்கம் மற்றும் மிசனறி கல்வி ஆகியவற்றிற்கு எதிராகத் தோன்றிய தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் பல பிரிவுகளும் ல.ச.ச.கட்சியைச் சுற்றித் திரண்டன. ல.ச.ச.கட்சி ஆற்றிய இந்த முக்கிய பாத்திரத்தின் காரணமாகவே பிரிட்டிஸ் ஏகாதிபத்தியவாதிகள் கட்சியை தடை செய்ய வேண்டிதாயிற்று. அதன் சக்தி வாய்ந்த தலைவர்களான என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, பிலிப் குணவர்த்தன மற்றும் எட்மன் சமரக்கொடி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.தோழர்கள் போகம்பரா சிறையிலிருந்து வெளியேறித் தப்பி இந்தியாவுக்கு ஓடக்கூடியதான ஒரு வலுவான இடதுசாரி இயக்கம் அன்று இருந்தது. 


தோட்டத் தொழிலாளர்கள் உட்பட இலங்கையில் உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்த தரத்தை மேம்படுத்தியமையும் அவர்கள் மீது விதிக்கப்பட்ட அடிமைச் சட்டங்களையும் கச்சேரி முறைமையை நீக்கியமையும் இலவச கல்வி மற்றும் சுகாதார பராமரிப்பை வென்றெடுத்தமையும் இடதுசாரி இயக்கத்தின் மகாத்தான சாதனைகளாகும். 1960கள் வரை இடதுசாரி இயக்கம் இலங்கை அரசியலின் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக விளங்கியிருந்தது.

நிகழ்ச்சி நிரல் மாற்றம்


1960ஆம் ஆண்டுகளிலிருந்து இடதுசாரி இயக்கம் தொடர்ந்து பலவீனம் அடையத் தொடங்கியது. இடதுவாரி இயக்கத்தின் வர்க்க தளங்கள் பலவீனப்பட்டு முதலாளித்துவ வர்கக் கட்சிகள் ஒன்றுகொன்று மாறி மாறிமாறித் தங்களுக்குள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஊன்றுகோலாக மாறியிருந்தது. ஆனாலும் ல.ச.ச.கட்சி 1964ல் சி.ல.சு.கட்சியுடன் கூட்டணி அமைத்த போது கூட அது ஒரு சீர்திருத்தவாத அரசியல் நிகழ்சி நிரலைக் கொண்டிருந்தது. அவர்கள் 14 அம்சத் திட்டத்துடன் அரசாங்கத்தில் இணைந்திருந்தனர். சி.ல.சு.கட்சியை படிப்படியாகக் கலைத்து அல்லது தங்கள் பக்கம் வளைத்து ஒரு சோசலிக சமுதாயத்தைக் கட்டியெழுப்பலாம் எனக் கனவு கண்டனர். இந்த நோக்கத்திற்காக மக்கள் மத்தியில் தொழிலாளர் குழுக்களை நிறுவியது மட்டுமின்றி சாதகமான சில பொருளாதார மாற்றங்களையும் கொண்டு வந்தனர். 

ம.வி.மு.யுடன் ஆரம்பமான புதிய இடதுசாரித்துவம்.


பாரம்பரிய இடதுசாரிகளின் துரோகங்களுக்கு எதிராக ஒரு பாட்டாளிவாக்க அரசைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் ஆயுத அமைப்பொன்றை உருவாக்கிய ம.வி.முன்னணியும் ஒரு வகை அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தது. வெறுமனே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருந்த ம.வி.முன்னணி எளிய பொருளாதார மாற்றங்களையே முன் மொழிந்தது. ஒரு மார்க்சிய பாணி அரசை நிறுவுவதே அதன் நிகழ்ச்சி நிரலாகும். 
ஆயுதமேந்திய இரண்டு கிளர்ச்சிகள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற ம.வி.முன்னணி மேற்ற கொண்ட முயற்சிகள் அவர்களுடைய சந்தர்ப்பவாதம் மற்றும் குறுகிய மனப்பான்மை காரணமாக தோற்கடிப்பட்டன. பிற்காலத்தில் அக் கட்சியும் முதலாளித்துவ ஆட்சியை வீழ்த்தும் இயக்கமாக மாறியது. இதன் தாக்கம் யாதெனில் இன்றைய அரசியலில் ம.வி.முன்னணியின் பாத்திரம் மிகக் குறைந்து போனதேயாகும். இப்போது அனைவரும் ஒரே தோணியில் தான் பயணிக்கிறார்கள். மக்கள் அல்லது தொழிலாளர்கள் மத்தியில் அவர்களைப் பற்றிய தெளிவான மதிப்பீடு இல்லை. 1963க்குப் பின்னர் பாரம்பரிய இடதுசாரிகளின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக இடதுசாரிப் பிரிவுகள் பல் வேறு அமைப்புகளுக்கூடாக அரசியல் களத்தில் நுழைவதைக் கண்டோம். 


1963ல் இலங்கைக் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு சண்முகதாசன் தலைமையில்  கம்யூனிஸ்ட் கட்சி(பீக்கிங்) தோன்றியது. 1964ல் ல.ச.ச.கட்சி கூட்டணியில் இணைந்த போது கட்சியின் ஒரு குறிப்பிடத் தக்க பகுதியினர் வெளியேறி ல.ச.ச.கட்சி(ஆர்)யை உருவாக்கினர். பின்னர் இது பிளவுபட்டு என்.எஸ்.எஸ்.பி,  யு.எஸ்.பி. மற்றும் இலங்கை சோசலிசக் கட்சி ஆகியவை உருவாகின. அதே போன்று ம.வி.முன்னணியிலிருந்து பிரிந்து தோன்றிய முன்னணிக் கட்சி தங்களை இடதுசாரிகளாக பிரகடனப்படுத்தியபடி வேறு வேறு பெயர்களில் பலவிதமான அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் இலங்கையில் முதலாளித்துவ ஆட்சி அகற்றப்பட வேண்டும். நாடு ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இலங்கைத் தேசியங்களுக்கு இடையேயான தேசியக் கேள்வி,  அதிகாரத்தினூடாக தீர்க்கப்பட வேண்டும் என்று நம்புகிறவர்களே தான். இவைகளை பகிர்ந்து கொள்ளும் அமைப்புக்கள் ஒரு சிறிய காரியாலயத்தை வைத்து ஒரு சொந்தப் பத்திரிகையை நடாத்தினாலும் அவற்றில் போதிய உறுப்பினர்கள் இல்லை. இவர்கள் யாவருக்கும் பல சர்வதேசிகளுடன் தொடர்பு உள்ளது. இந்த சர்வதேசிகள் தாங்கள் சார்ந்த அமைப்புக்கள் போலவே பலவீனமாக உள்ளனர். சில அமைப்புக்கள் அவர்களது நாட்டில் பராமரிக்கப்படும் ஏஜென்சிகள் போன்றே காணப்படுகின்றன. இலங்கைத் தேர்தல் சட்டத்தில் உள்ள குறைபாடு காரணமாக இந்த அமைப்புக்களில் சில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக மாறியுள்ளன. இந்த அமைப்புக்களுக்கு உறுப்பினர்கள் கிடையாது. ஆனால் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. இது அவர்களுக்கு ஒலி அலை மற்றும் தொலைக்காட்சிக்கான நேரத்தை வழங்குகிறது. புதிய இடதுசாரி தன்னுடையதும் தன்னைச் சார்ந்த தனது கூட்டாளிகளினதும் இருப்புக்கான கடைசிச் சந்தர்ப்ப வாத தேர்தல் அரசியல் அமைப்பாக மாறியுள்ளது. இது மிகவும் துரதிர்ஸ்டவசமானது. 


காலத்திற்கு காலம் ஒவ்வொரு முதலாளித்துவ அரசினதும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி தனித்தியாகவோ அன்றி வேறு வேறாகவோ தமது சொந்த நிகழ்ச்சி நிரலை வகுத்துக் கொள்வதே இவர்களது பணியாகும். அரசாங்கம் 20வது திருத்தத்தை அறிமுகப்படுத்திய போது அதனை இவர்கள் ஏகமனதாக எதிர்த்தது இதற்கு ஒரு உதாரணமாகும். 20வது திருத்தத்தை எதிர்க்கும் எந்தவொரு பிற்போக்கு வாதிகளுடன் கைகோர்த்த படி ஜனநாயகத்திற்காக கோசம் போடுவதற்கே ஆசைப்படுகிறார்கள். தற்போது காணப்படும் சமூக அமைப்பை மாற்றியமைக்கும் வகையில் சோசலிச கண்ணோட்டம் கொண்ட ஒரு மாற்றீட்டுச் சமூக அமைப்பை உருவாக்கும் விதமாக ஒரு மாற்றுக் கொள்கை மற்றும் திட்டத்தை முன் வைப்பதில் உழைக்கும் மக்கள் தோல்வி அடைந்துள்ளதையே இது பிரதிபலிக்கிறது. இதனால் தான் அவர்களது பிரச்சாரங்களினால் மக்களுக்கு எதுவித பயனும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பிரிவினதும் நிகழ்ச்சி நிரலினால் பயனடையப் போவது இறுதி வலதுசாரிச் சக்திகளே. ஒரு மாற்றீட்டு சக்தியைக் கட்டியெழுப்பும் திட்டத்தை இடதுசாரிகள் முன் வைக்காவிட்டால் வெகுஜன மக்கள் தவிர்க்க முடியாமல்  முதலாளித்துவத்திற்கு இரையாகி விடுவார்கள். இதுவே இன்றைய புதிய இடதுசாரிகளின் சோகம்.


நீல் விஜெதிலகா 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *