ஊரடங்கை மீறி மக்கள் வீதியில் இறங்கியது எதனால்? அரசாங்கம் புரிந்துகொள்ளாத சில பக்கங்கள்

Bharati November 23, 2020

கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கிவிட்டார்கள். சின்னஞ்சிறிய வீடுகளுக்குள், வாரக்கணக்காக அடைத்துவைக்கப்பட்டுள்ள அவர்கள், வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கின்றார்கள். அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையிலேயே மோதரை, இக்பாவத்தை பகுதி மக்கள் தமது சீற்றத்தை இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளிப்படுத்தினார்கள்.

மக்களின் சீற்றத்தை அடக்கி நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது பொலிஸாரின் பொறுப்பாக இருந்திருக்கலாம். ஆனால், இதிலுள்ள மனிதாபிமானப் பிரச்சினை அவசரமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று என்பதை மறந்துவிட முடியாது. அனர்த்த காலங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதில் அரச இயந்திரம் அசமந்தமாக இருந்ததன் விளைவாகத்தான் மக்கள் வீதிகளில் இறங்கயிருக்கின்றார்கள். இதிலுள்ள செய்தியை அரசாங்கம் புரிந்துகொள்ளாவிட்டால், விளைவுகள் மோசமானதாகவே இருக்கும்.

கொரோனாவின் முதலாவது அலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இப்போது பரவுவது இரண்டாவது அலை. முதலாவது அலையின் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவம் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்குக் கைகொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இப்போது கொரோனா பரவல் மோசமாகிக்கொண்டு செல்லும் அதேவேளையில், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையும் தீவிரமடைந்திருக்கின்றது.

நாடுமுழுவதையும் முடக்குவதில்லை என்ற அரசாங்கத்தின் முடிவுக்கு நாட்டின் பொருளாதாரம்தான் காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், வீட்டுப் பொருளாதாரத்தையிட்டு அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பது அதன் விளைவாகத்தான். முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் பெருமளவுக்கு அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். கூலி வேலை செய்பவர்கள். அவர்கள் இப்போது வேலையிழந்திருக்கின்றார்கள்.

அரசாங்கம் கொடுத்த 5,000 ரூபாவை வைத்துக்கொண்டு அவர்கள் எத்தனை நாட்களுக்கு வாழ முடியும்? ஒரு குடும்பத்துக்கு என்றே இத் தொகை கொடுக்கப்படுகின்றது. பல குடும்பங்கள் ஆறு -ஏழு உறுப்பினர்களைக் கொண்டது. ஐயாயிரம் ரூபாவை ஒரு தரம் கொடுத்தவிட்டவுடன் தமது பணி முடிந்தது என அரசாங்கம் இருந்துவிட முடியாது.

கொரோனா போன்ற ஒரு பெருந்தொற்று ஆபத்தான முறையில் பரவிவரும் நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவம் அவசியம். ஒரு புறம் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான உபாயங்கள் வகுக்கப்பட வேண்டும். மறுபுறும் அதனால், பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரத்துக்கான உபாயங்கள் அவசியம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் இருக்கவில்லை. மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பது அதன் விளைவுதான்.

கொரோனா பரவும் நிலையில் அதனைக்கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட பகுதிகளை முடக்கும் அரசாங்கம், அதற்குள் இருக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வையும் முன்வைக்க வேண்டும். ஒன்று இரண்டு நாட்கள் என்றால் பரவாயில்லை. வாரக்கணக்காக முடக்கல் தொடரும் போது உருவாகக்கூடிய “வீட்டுப் பொருளாதார” பிரச்சினைகளை அரசு கவனத்தில் எடுக்கா விட்டால், மக்கள் மேலும் – மேலும் வீதிகளில் இறங்குவதை அரசாங்கம் எதிர்கொள்ளவேண்டித்தான் இருக்கும்.

  • ஆசிரியர்.

Republished From: https://thinakkural.lk/article/91879

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *